108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஜனவரி 3, 2023 காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.
“மகளிர் மேம்பாட்டுடன் நிலையான வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும். நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் இவற்றை அடைவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். ஸ்டெம் என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார பங்களிப்புகளில் பெண்களின் ஈடுபாட்டோடு, கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் உயரிய நிலையை பெண்கள் அதிகளவில் எட்டுவதற்கான வழிகள் குறித்தும் மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் ஆலோசிப்பார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரபல பெண் விஞ்ஞானிகளின் சொற்பொழிவுகள் இடம்பெறும்.
இந்திய அறிவியல் மாநாட்டை முன்னிட்டு ஏராளமான இதர நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். குழந்தைகளிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடும் நடைபெறும். உயிரி பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களிடையே விவசாயத்தை ஊக்குவிக்கவும் விவசாயிகளுக்கான அறிவியல் மாநாடு உகந்த தளமாக செயல்படும். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, பழங்காலம் முதல் நம் நாட்டில் நிலவும் அறிவுசார்முறை மற்றும் நடைமுறைகளின் அறிவியல் சார்ந்த காட்சிமுறையை பழங்குடி அறிவியல் மாநாடு பிரதிபலிக்கும்.
மாநாட்டின் முதல் அமர்வு 1914-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் ராஷ்டிரசன்ட் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் 108-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறும்.
******
MS/RB/DL