Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு


வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது 300 சிறார்கள் பங்கேற்று சப்த கீர்த்தனைகள் பாடிய நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.  சுமார் 3000 குழந்தைகள் பங்கேற்ற அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். குரு கோபிந்த் சிங்கின்  பிரகாஷ் பூரப் தினமான 2022 ஜனவரி 9-ந் தேதி அன்று   ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், டிசம்பர் 26-ந் தேதி வீர பாலகர் தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதேசிங்கின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று நடைபெற்ற முதலாவது வீர பாலகர் தின  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த தினம் கடந்த கால தியாகங்களை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போற்றும் நாள் என்றும் தேசத்திற்கு இது புதிய தொடக்கம் என்றும் கூறினார். ஷாஹீதி சப்தா மற்றும் வீர பாலகர் தினம் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல; எல்லையற்ற உத்வேகத்தின் ஆதாரமாக திகழ்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

உச்சபட்ச துணிச்சலுக்கும், தியாகத்திற்கும்  வயது ஒரு பொருட்டல்ல என்பதை இந்த வீர பாலகர் தினம் நினைவூட்டுவதாக அவர் கூறினார். வீர பாலகர் தினம், தேசத்தின் கௌரவத்தை காக்கும் பணியில்  10 சீக்கிய குருமார்களின் மகத்தான பங்களிப்பையும், சீக்கிய பாரம்பரியத்தின்  தியாகத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது  என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா என்பது என்ன என்பதையும், அதன் அடையாளம் என்ன என்பதையும் இந்த வீர பாலகர் தினம் ஒவ்வொரு ஆண்டும் எடுத்துரைக்கும் என்று கூறிய அவர், கடந்த காலத்தை அங்கீகரித்து, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான உத்வேகத்தை இது வழங்கும் என்றார். நமது இளம் தலைமுறையினரின் பலத்தை அனைவருக்கும் இது எடுத்துரைக்கும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார். வீர சாஹிப்ஜாதா, குருமார்கள் மற்றும் மாதா குர்ஜாரி ஆகியோருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் டிசம்பர் 26-ந் தேதியை வீர பாலகர் தினமாக அறிவிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது இந்த அரசின் அதிர்ஷ்டமாக கருதுவதாக குறிப்பிட்டார்.

உலகின் பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொடூர அத்தியாயங்களால் நிரம்பியுள்ளன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். கொடுமை மற்றும் வன்முறையின் முகங்களை நாம் கடந்து வரும் போது அவற்றை எதிர்த்த மாவீரர்களின் வரலாறுகளும் அதை மிஞ்சி நிற்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சம்கவுர் மற்றும் சிர்ஹிந்த் போர்களில் நடந்தவற்றை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் இந்த மண்ணில் 3 நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் நடந்தன என்று அவர் கூறினார்.  ஒருபுறம் வலிமைமிக்க முகலாயர்கள் இருந்ததாகவும், மறுபுறம் பழங்கால இந்தியாவின் கொள்கைகளைக் கொண்ட நமது குருமார்கள் இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு புறம் தீவிரவாதமும், மறுபுறம் ஆன்மீகத்தன்மையும் உச்சத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார். இவை அனைத்திற்கும் மத்தியில் முகலாயர்கள் மிகப்பெரிய படையை வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.  அதே சமயம் வீர் சாஹிப்ஜாதாக்கள் தைரியத்துடன் செயல்பட்டதாக அவர் தெரிவித்தார். அவர்கள் தனித்து இருந்தாலும் முகலாயர்களிடம் சரணடையவில்லை என்று பிரதமர் கூறினார். இந்த வீரம்தான்  பல நூற்றாண்டுகளாக நமக்கு உத்வேகமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

புகழ் பெற்ற வரலாற்றைக் கொண்ட எந்த நாடும் தன்னம்பி்க்கை மற்றும் சுயமரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனினும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதற்கு சில இட்டுக்கட்டப்பட்ட கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.  இருப்பினும் உள்ளூர் மரபுகளும், சமூகத்தினரும் நமது மகிமையை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். முன்னேறிச் செல்வதற்கு கடந்த காலத்தின் குறுகிய கண்ணோட்டங்களில் இருந்து விடுபட வேண்டியது அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார்.  எனவே தான் 75-வது விடுதலைப் பெருவிழாவின் போது அடிமை மனப்பான்மையின் அனைத்து தடயங்களையும் அகற்றுவதற்கான உறுதிமொழியை நாடு எடுத்துள்ளது என்று அவர் கூறினார். வீர பாலகர் தினம், பஞ்ச் பிரான் எனப்படும் ஐந்து தீர்மானங்களுக்கான உயிர் சக்தி போன்று திகழ்வதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 சாஹிப்ஜாதாக்களின் உறுதிப்பாடு மற்றும் துணிச்சலையும் பிரதமர் எடுத்துரைத்தார். மக்களுக்கு எதிராக ஔரங்கசீப் நடத்திய ஆட்சியை கொடுங்கோல் ஆட்சியை அவர்கள் எதிர்த்ததாக பிரதமர் குறிப்பிட்டார். இது நாட்டின் எதிர்காலத்தில் இளைஞர்களின் பங்கை நிறுவுவதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய இளம் தலைமுறையினர் அதே உறுதியுடன் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதுவே வீரபாலகர் தினத்தை மிக முக்கியமானதாக ஆக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சீக்கிய குரு பரம்பரையினருக்கு மரியாதை செலுத்திய பிரதமர், இவர்கள் ஆன்மீகம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக மட்டும் அல்லாமல் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுக்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் திகழ்கின்றனர்” என்று கூறினார்.  குரு கிரந்த் சாஹிப்பின் உபதேசங்கள் பரந்த உலகத்தை உள்ளடக்கிய தன்மையை கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தியா முழுவதும் உள்ள ஞானிகளின் கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குரு கோபிந்த் சிங்கின் வாழ்க்கைப் பயணமும் இதே பண்பை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.  பாஞ்ச் ப்யாரே என்ற கொள்கை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ளது என்றார். எனினும் அசல் பாஞ்ச் ப்யாரே தமது மாநிலத்தின் துவாரகையில் இருந்து அவர் பெருமிதம் தெரிவித்தார்.

 ராஷ்ட்ரப் பிரதம் எனப்படும் தேசத்தை முதன்மையாக நினைக்கும் தீர்மானம் குரு கோபிந்த் சிங்கின் அசைக்க முடியாத தீர்மானமாக இருந்தது என்று பிரதமர் கூறினார். அவரது குடும்பத்தின் தனிப்பட்ட தியாகங்களையும் அவர் எடுத்துரைத்தார். தேசமே முதன்மையானது என்ற இந்த பாரம்பரியம் நமக்கெல்லாம் மிகப்பெரிய உத்வேகத்தை அளிப்பதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலம் வரும் தலைமுறையினரின் உத்வேகத்தின் அடிப்படையில் அமையும் என்று பிரதமர் கூறினார். பரதர், பக்த பிரகலாதன், நசிகேதன், துருவ், பலராமன், லவ-குசன், பாலகிருஷ்ணன் என சிறு வயது உத்வேக குழந்தைகளை பட்டியலிட்ட அவர், பழங்காலத்தில் இருந்து நவீன காலம் வரை துணிச்சல் மிக்க  சிறுவர் மற்றும் சிறுமியர் இந்திய வீரத்தை பிரதிபலிப்பதாக கூறினார்.

 இந்தியா தமது நீண்ட காலப் பாரம்பரியத்தை மீட்டெடுத்து வருவதாகவும், இதன் மூலம் பல 10 ஆண்டுகால தவறுகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.  எந்த ஒரு நாடும் தமது கொள்கையால் அடையாளப்படுத்துப்படுகிறது என்று கூறிய அவர், தேசத்தின் அடிப்படை மதிப்பீடுகள் மாற்றமடையும் போது நாட்டின் எதிர்காலமும் காலப்போக்கில் மாறுவதாக கூறினார். தேசத்தின் வரலாறு குறித்த தெளிவை இன்றைய தலைமுறையினர் பெற்றால் மட்டுமே நாட்டின் விழுமியங்கள் பாதுகாக்கப்படும் என்று அவர் எடுத்துரைத்தார்.  இளைஞர்கள் எப்போதும் கற்கும் உத்வேகத்துடன் திகழ்வதாகவும், முன்மாதிரியை தேடுவதாகவும் அவர் கூறினார். எனவே தான் பகவான் ராமரின் கொள்கைகளை  நம்புவதாகவும், கௌதம புத்தர் மற்றும் மகாவீரரிடமிருந்து உத்வேகத்தை காண்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் குருநானக் தேவ்-வின் தத்துவங்களின் அடிப்படையில் வாழ முயற்சி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாராணா பிரதாப் மற்றும் வீர சிவாஜியின் வாழ்க்கை முறைகளையும் நாம் படிப்பதாக அவர் தெரிவித்தார். மதம் மற்றும் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர், நமது முன்னோர்கள் பண்டிகைகளுடன் இணைந்த கலாச்சாரத்திற்கு வடிவம் கொடுத்ததாக கூறினார். இந்த உணர்வை நாம் எப்போதும் நிரந்தரமாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.  75-வது விடுதலைப் பெருவிழாவின் போது சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான பெருமைகளை புதுப்பிக்க நாடு முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  துணிச்சல் மிக்க ஆண்கள், பெண்கள், பழங்குடியின சமூகத்தினரின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை அனைவரிடமும் எடுத்துச்செல்லும் பணி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். வீர பாலகர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வீர சாஹிப்ஜாதாக்களின் வாழ்க்கை வரலாற்றை உலகிற்கு எடுத்துச்செல்ல வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதலமைச்சர் திரு பகவந்த் மான், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக் நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர்கள் திரு ஹர்தீப் சிங் புரி, திரு அர்ஜூன் ராம்மெக்வால், திருமதி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னணி

சாஹிப்ஜாதாக்களின்  துணிச்சலை மக்களுக்கு, குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு தெரிவிக்கவும், கற்பிக்கவும், நாடு முழுவதும் பல்வேறு  நிகழ்ச்சிகளை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டுரை எழுதுதல், வினாடி-வினா போட்டிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் டிஜிட்டல் கண்காட்சிகள் அமைக்கப்படவுள்ளன. நாடு முழுவதும், சாஹிப்ஜாதக்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகத்தை விவரிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

**************

(Release ID: 1886675)

SM/PLM/AG/KRS