Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் 96ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 25.12.2022


எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.   இன்றைய மனதின் குரல் 96ஆவது பகுதியாகும்.  மனதின் குரலின் அடுத்த பகுதி 2023ஆம் ஆண்டின் முதல் பகுதியாக அமையும்.   கடக்கவிருக்கும் 2022ஆம் ஆண்டு குறித்துப் பேச உங்களில் பலர் வேண்டுகோள் விடுத்திருக்கிறீர்கள்.  கடந்தகாலம் பற்றிய மதிப்பீடுகளும் அலசல்களும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பான தயாரிப்புக்களுக்கான உத்வேகத்தை அளிக்கின்றன.   2022ஆம் ஆண்டிலே, நாட்டுமக்களின் திறமைகள், அவர்களின் ஒத்துழைப்பு, அவர்களின் மனவுறுதி, அவர்களுடைய பரவலான வெற்றிகள் எந்த அளவுக்கு இருந்தன என்றால், இவற்றையெல்லாம் ஒரே மனதின் குரலில் தொகுத்தளிப்பது என்பது கடினமானதாக இருக்கும்.  2022ஆம் ஆண்டு என்பது உண்மையிலேயே பல காரணங்களுக்காக மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக அமைந்திருந்தது, அற்புதமானதாக இருந்தது.  இந்த ஆண்டிலே, பாரதம் தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது, அமுதகாலமும் தொடங்கியது.  இந்த ஆண்டிலே தான் தேசத்தில் புதுவேகம் உருவானது, நாட்டுமக்கள் அனைவரும் ஒருவரையொருவர் விஞ்சும் அளவுக்குச் செயலாற்றினார்கள்.  2022ஆம் ஆண்டின் பல்வேறு வெற்றிகளும், உலகம் முழுவதிலும் பாரதத்திற்கான ஒரு சிறப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.  2022ஆம் ஆண்டிலே உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் பாரதம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.  இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதம் 220 கோடி தடுப்பூசிகள் என்ற வியப்பையும் மலைப்பையும் ஒருசேர ஏற்படுத்தக்கூடிய இலக்கைத் தாண்டிச் சாதனை படைத்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் 400 பில்லியன் டாலர்கள் என்ற மாயாஜால இலக்கை பாரதம் தாண்டி ஆச்சரியமான சாதனையைப் படைத்தது, இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதநாட்டவர் அனைவரும் தற்சார்பு பாரதம் என்ற மனவுறுதியை மேற்கொண்டார்கள், வாழ்ந்தும் காட்டி வருகிறார்கள், 2022 என்ற இந்த ஆண்டில் தான் பாரதத்தின் முதல் சுதேசி விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் இணைக்கப்பட்டது, இதே 2022இலே தான் விண்வெளித்துறை, ஆளில்லா வானூர்தி எனும் ட்ரோன்கள் மற்றும் பாதுகாப்புத் துறையில் பாரதம் தனது முத்திரையைப் பதித்தது, இந்த 2022ஆம் ஆண்டிலே தான் அனைத்துத் துறைகளிலும் பாரதம் தனது தாங்கும் உறுதியை வெளிப்படுத்தியது.  விளையாட்டு மைதானத்திலும் கூட, அது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகட்டும், அல்லது நமது பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றியாகட்டும், நமது இளைஞர்கள் சிறப்பாக ஆடித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

 

நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும்.  அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது.  நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!!  அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள்.  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது.  6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.

நண்பர்களே, இந்த ஆண்டு பாரதம், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறது.  கடந்த முறை இது குறித்து விரிவான வகையிலே பகிர்ந்திருந்தேன்.  2023ஆம் ஆண்டிலே நாம் ஜி20 அளிக்கும் உற்சாகத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்வோம், இந்த நிகழ்ச்சியை அனைவரையும் பங்கெடுக்கும் இயக்கமாக மாற்றுவோம்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவரது கற்பித்தல்கள் ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டிய தினமாகும் இது.  நான் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே, இன்று, நம் அனைவரின் மதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் பிறந்த தினமும் ஆகும்.  அவர் ஒரு மாபெரும் அரசியல் தலைவர், தேசத்திற்கு அசாதாரணமானதொரு தலைமையை அளித்தார்.  நாட்டுமக்கள் அனைவரின் இதயங்களிலும் அவருக்கென ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு.  கோல்காத்தாவைச் சேர்ந்த ஆஸ்தா அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.  இந்தக் கடிதத்தில் அவர்     தன்னுடைய அண்மைக்கால தில்லிப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் தில்லியில் தங்கியிருந்த வேளையில் பிரதம மந்திரி அருங்காட்சியகத்தைக் காணச் சென்றிருந்த போது, அங்கே அடல் அவர்களின் காட்சியகம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.   அடல்ஜியோடு அங்கே அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தன்னுடைய நினைவில் வைத்துப் போற்றத்தக்கதாய் இருந்தது என்று தெரிவித்திருக்கிறார்.  அடல்ஜியின் காட்சியகத்திலே, தேசத்திற்காக அவருடைய விலைமதிப்பற்ற பங்களிப்பின் காட்சிகளை நம்மால் காண முடியும்.  உள்கட்டமைப்பாகட்டும், கல்வி அல்லது அயலுறவுக் கொள்கையாகட்டும், அவர் பாரதத்தை அனைத்துத் துறைகளிலும் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை ஆற்றினார்.  நான் மீண்டும் ஒருமுறை அடல்ஜிக்கு என் இதயபூர்வமான வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். 

நண்பர்களே, நாளை டிசம்பர் 26ஆம் தேதியானது வீர பால தினம் ஆகும்; இந்த வேளையிலே தில்லி மாநகரிலே, இளவரசர் ஜோராவர் சிங்ஜி, இளவரசர் ஃபதேஹ் சிங்ஜி ஆகியோரின் உயிர்த்தியாகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைக்கவிருக்கிறது.  இளவரசர்கள், தாய் குஜ்ரீ ஆகியோரின் பிராணத்தியாகத்தை தேசம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.

என் கனிவான நாட்டுமக்களே, நமது நாட்டிலே ஒரு வழக்குண்டு.

சத்யம் கிம பிரமாணம், பிரத்யக்ஷம் கிம பிரமாணம்.   

सत्यम किम प्रमाणम , प्रत्यक्षम किम प्रमाणम |

அதாவது சத்தியத்திற்கு எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை, முதல் தோற்றத்திலேயே எது தெளிவாகத் தெரிகிறதோ, அதற்கும் எந்தச் சான்றும் தேவையிருப்பதில்லை.  ஆனால் நவீன மருத்துவ அறிவியல் எனும் போது, அதிலே மிகவும் முக்கியமானது என்றால், அது சான்று எனும் ैEvidence.  பல நூற்றாண்டுகளாக பாரத நாட்டவர்களின் வாழ்க்கையின் அங்கமாகத் திகழும் யோகக்கலை, ஆயுர்வேதம் போன்ற நமது சாத்திரங்களின் முன்பாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வின் குறைபாடு எப்போதுமே ஒரு சவாலாக விளங்கி வந்திருக்கிறது.  பலன்கள் காணக் கிடைக்கின்றன என்றாலும், சான்றுகள் ஏதும் இல்லை.  ஆனால் சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட மருத்துவ யுகத்திலே, இப்போது யோகமும் ஆயுர்வேதமும், நவீன யுகத்தின் ஆய்வு மற்றும் அளவுகோல்கள் தொடர்பாகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  மும்பையின் டாடா மெமோரியல் சென்டர் பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆய்வு, கண்டுபிடிப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றில் இந்த அமைப்பு பெரும் உதவிகரமாக விளங்கி வருகிறது.  இந்த மையம் வாயிலாகப் புரியப்பட்ட ஒரு தீவிர ஆய்வின் முடிவுகள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகக்கலை மிகவும் பயனளிப்பதாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  டாடா மெமோரியல் சென்டரானது தனது ஆராய்ச்சியின் முடிவுகளை, அமெரிக்காவில் நடந்த மிகவும் பிரபலமான மார்பகப் புற்றுநோய் மாநாட்டிலே முன்வைத்தது.  இந்த முடிவுகள், உலகின் பெரியபெரிய வல்லுநர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தது.  ஏனென்றால், நோயாளிகளுக்கு யோகக்கலையால் எப்படி பயன் உண்டானது என்பதை டாடா மெமோரியல் மையமானது சான்றுகளோடு விளக்கியது.  இந்த மையத்தின் ஆய்வுகளின்படி, யோகக்கலையின் இடைவிடாத பயிற்சியால், மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் நோய், மீண்டும் வளர்வதிலோ, மரண அபாயத்திலோ 15 சதவீதம் குறைவு ஏற்படுவதாகக் கண்டுபிடித்தது.  பாரதநாட்டுப் பாரம்பரிய சிகிச்சையின் முதல் எடுத்துக்காட்டு இது; இதை மேற்கத்திய வழிமுறைகளைப் பின்பற்றுவோர், கடுமையான அளவுகோல்கள் கொண்டு இதை சோதனை செய்தார்கள்.  மார்ப்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்கைத்தரம், யோகக்கலையால் மேம்படுகிறது என்பதைத் தெரிவித்த முதல் ஆய்வும் இது தான்.  மேலும் இதன் நீண்டகால ஆதாயங்களும் வெளிவந்திருக்கின்றன. டாடா மெமோரியல் சென்டர் தனது ஆய்வு முடிவுகளை பாரீஸில் நடந்த மருத்துவப் புற்றுநோயியலுக்கான ஐரோப்பிய சங்கத்தின் மாநாட்டிலே முன்வைத்தது.

 

          நண்பர்களே, இன்றைய யுகத்திலே, பாரதநாட்டு சிகிச்சை முறைகள் எத்தனை அதிகமாக சான்றுகளை ஆதாரமாகக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு உலகிலே இதன் ஏற்புத்தன்மையும் அதிகரிக்கும்.  இந்த எண்ணத்தோடு, தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையும் கூட ஒரு முயல்வினை மேற்கொண்டு வருகிறது. இங்கே, நமது பாரம்பரிய சிகிச்சை முறைகளைச் சரிபார்க்க என்றே ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆய்வு மையம் நிறுவப்பட்டது. இதிலே நவீன, புதுமையான உத்திகள் மற்றும் ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த மையம், முன்பேயே பிரபல சர்வதேச சஞ்சிகைகளில் 20 ஆய்வறிக்கைகளை வெளியிட்டு விட்டது. அமெரிக்க இதயவியல் கல்லூரியின் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் syncope என்ற உணர்விழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யோகக்கலையால் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, நரம்பியல் சஞ்சிகையின் ஒரு ஆய்வறிக்கையில், ஒற்றைத்தலைவலிக்கு யோகக்கலையால் கிடைக்கக்கூடிய நிவாரணம் குறித்தும் பதிவிடப்பட்டிருக்கிறது.  இவற்றைத் தவிர, மேலும் பல நோய்கள் தொடர்பாகவும் யோகக்கலை அளிக்கவல்ல ஆதாயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எடுத்துக்காட்டாக இருதய நோய், மன அழுத்தம், உறக்கமின்மை, மகப்பேறுக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

 

          நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, உலக ஆயுர்வேத மாநாட்டிற்காக நான் கோவா சென்றிருந்தேன்.  இதிலே 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கெடுத்தார்கள், 550க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.  பாரதம் உட்பட, உலகெங்கிலுமிருந்து சுமார் 215 நிறுவனங்கள் இங்கே தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.  நான்கு நாட்கள் வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், ஆயுர்வேதத்தோடு தொடர்புடைய அனுபவங்களை ரசித்தார்கள்.  ஆயுர்வேத மாநாட்டிலும் உலகெங்கிலும் இருந்தும் வந்திருந்த ஆயுர்வேத வல்லுநர்கள் முன்பாக, சான்றுகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு தொடர்பான என்னுடைய வேண்டுகோளை நான் முன்வைத்தேன்.  எந்த வகையில் கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் யோகம் மற்றும் ஆயுர்வேதத்தின் சக்தியை நாமனைவரும் கண்டு வருகிறோமோ, அதிலே இவற்றோடு தொடர்புடைய சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள் மிகவும் மகத்துவம் நிறைந்தவையாக நிரூபிக்கப்படும்.  யோகம், ஆயுர்வேதம் போன்ற நம்முடைய பாரம்பரியமான சிகிச்சை முறைகளோடு தொடர்புடைய இத்தகைய முயற்சிகள் பற்றி உங்களிடம் தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை சமூக வலைத்தளங்களில் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன். 

 

          என் இதயம் நிறை நாட்டுமக்களே, கடந்த சில ஆண்டுகளில் நாம் உடல்நலத் துறையோடு தொடர்புடைய பல பெரிய சவால்களில் வெற்றிகளை அடைந்திருக்கிறோம். நமது மருத்துவ வல்லுநர்கள், அறிவியலார்கள், நாட்டுமக்களின் பேரார்வம் ஆகியவற்றுக்கே இதற்கான முழுப் பாராட்டும் சேரும்.  பாரதத்திலிருந்து நாம் சின்னம்மை, இளம்பிள்ளை வாதம் மற்றும் கினிப்புழு தொற்று போன்ற நோய்களுக்கு முடிவு கட்டியிருக்கிறோம்.

 

          இன்று, மனதின் குரல் நேயர்களுக்கு நான் மேலும் ஒரு சவால் குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன், இதுவும் முடிவு கட்டப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது.  இந்தச் சவால், இந்த நோய் தான் காலா அஜார் எனப்படும் கருங்காய்ச்சல்.  இந்த நோய்க்கான காரணியான ஒட்டுண்ணியான Sand Fly எனும் மணல் கொசுக்கள் கடிப்பதால் இது பரவுகிறது.  யாருக்காவது இந்தக் கருங்காய்ச்சல் பீடித்து விட்டால், அவருக்கு மாதக்கணக்கில் காய்ச்சல் இருக்கிறது, குருதிச்சோகை ஏற்பட்டு, உடல் பலவீனப்பட்டு, உடலின் எடையும் வீழ்ச்சி அடைகிறது.  இந்த நோய், குழந்தைகள் தொடங்கி பெரியோர் வரை அனைவரையும் பீடிக்கக்கூடியது.  ஆனால், அனைவரின் முயற்சியாலும், காலா அஜார் என்ற கருங்காய்ச்சல் நோய், இப்போது வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது.  சில காலம் முன்பு வரை, இந்தக் கருங்காய்ச்சல் 4 மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தது.  ஆனால் இப்போது இந்த நோய், பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் 4 மாவட்டங்கள் வரை மட்டுமே குறைக்கப்பட்டு விட்டது.  பிஹார்-ஜார்க்கண்ட் மாநில மக்களின் வல்லமையால், அவர்களின் விழிப்புணர்வு காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களிலிருந்தும் கூட, கருங்காய்ச்சலை அரசின் முயற்சிகளால் முடிவுக்குக் கொண்டு வர முடியும்.   கருங்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் இரண்டு விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதே.  ஒன்று, மணல் கொசுக்களைக் கட்டுப்படுத்தல், இரண்டாவது, மிக விரைவாக இந்த நோயை அடையாளம் கண்டு, முழுமையான சிகிச்சை மேற்கொள்ளல்.  கருங்காய்ச்சலுக்கான சிகிச்சை எளிதானது, இதற்காகப் பயன்படும் மருந்துகளும் மிகவும் பயனளிப்பவையாக இருக்கின்றன.  நீங்கள் விழிப்போடு இருந்தால் மட்டும் போதுமானது. காய்ச்சல் வந்தால், கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.  மணல் கொசுக்களுக்கு முடிவு கட்டக்கூடிய மருந்துகளைத் தெளித்து வாருங்கள்.  சற்றே சிந்தியுங்கள், நமது தேசம், கருங்காய்ச்சலிலிருந்து விடுபடும் போது, நம்மனைவருக்கும் இது எத்தனை சந்தோஷம் அளிக்கும் வேளையாக இருக்கும்!!  அனைவரின் முயற்சிகள் என்ற இதே உணர்வோடு நாம், பாரதத்தை 2025க்குள்ளாக காசநோயிலிருந்து விடுபடச் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.  காசநோயிலிருந்து விடுபட்ட பாரதம் என்ற இயக்கத்தினை கடந்த நாட்களில் நாம் தொடங்கிய போது, ஆயிரக்கணக்கானோர், காசநோயால் பீடிக்கப்பட்டவர்களின் உதவிக்காக முன்வந்தார்கள் என்பதை நீங்களே கண்கூடாகப் பார்த்தீர்கள்.  இவர்கள் காசநோய்க்கு எதிரான தொண்டர்களாக, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து வருகிறார்கள், அவர்களுக்கான பொருளாதார உதவிகளை நல்கி வருகிறார்கள்.  மக்கள் சேவை, மக்கள் பங்களிப்பு ஆகியவற்றின் சக்தி, அனைத்துக் கடினமான இலக்குகளையும் அடைந்தே தீருகிறது.

 

          என் அன்புநிறை நாட்டுமக்களே, நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அன்னை கங்கையோடு இணைபிரியா பந்தம் இருக்கிறது.  கங்கை ஜலம் என்பது நமது வாழ்க்கையோட்டத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்து வந்திருக்கிறது, நமது சாஸ்திரங்களிலும் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால் –

नमामि गंगे तव पाद पंकजं,

सुर असुरै: वन्दित दिव्य रूपम् |

भुक्तिम् मुक्तिम् ददासि नित्यम्,

भाव अनुसारेण सदा नराणाम् ||

நமாமி கங்கே தவ பாத பங்கஜம்,

சுர அசுரை: வந்தித திவ்ய ரூபம்.

புக்திம் ச முக்திம் ச ததாசி நித்யம்,

பாவ அனுசாரேண சதா நராணாம்.

 

அதாவது, ஹே அன்னை கங்கையே!!  நீங்கள், உங்களுடைய பக்தர்களுக்கு, அவர்களுடைய உணர்வினுக்கு ஏற்ப இகலோக சுகங்கள், ஆனந்தம் மற்றும் வீடுபேற்றினை அளிக்கிறீர்கள்.  அனைவரும் உங்களுடைய பவித்திரமான திருவடிகளில் வணங்குகிறார்கள்.  நானும் உங்களின் புனிதமான திருவடிகளில் என்னுடைய வணக்கங்களை அர்ப்பணம் செய்கிறேன்.  இவ்வாறாக, பல நூற்றாண்டுகளாகக் கலகலவெனப் பெருகியோடும் கங்கை அன்னையைத் தூய்மையாக வைத்திருப்பது என்பது நம்மனைவரின் மிகப்பெரிய பொறுப்பாகும்.  இந்த நோக்கத்தோடு தான், எட்டாண்டுகள் முன்பாக நாம், நமாமி கங்கே இயக்கத்தைத் தொடங்கினோம்.  பாரதத்தின் இந்த முன்னெடுப்பு இன்று உலகெங்கும் போற்றப்படுகிறது என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயம்.  ஐக்கிய நாடுகள் அமைப்பு நமாமி கங்கே இயக்கத்தை, சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் உலகின் தலைசிறந்த பத்து முன்னெடுப்புக்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.  உலகத்தின் 160 இப்படிப்பட்ட முன்னெடுப்புக்களில் நமாமி கங்கே இயக்கத்திற்கு இந்த கௌரவம் கிடைத்திருப்பது என்பது மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம். 

 

நண்பர்களே, நமாமி கங்கே இயக்கத்திற்கான மிகப்பெரிய ஆற்றல், மக்களின் இடைவிடாத பங்கெடுப்பு மட்டுமே.  நமாமி கங்கே இயக்கத்தில், கங்கைக் காவலாளிகள், கங்கைத் தூதர்கள் ஆகியோருக்கும் பெரிய பங்கு உண்டு.  இவர்கள் மரம் நடுதல், ஆற்றுத் துறைகளைத் தூய்மைப்படுத்தல், கங்கை ஆரத்தி, தெருமுனை நாடகங்கள், ஓவியங்கள் மற்றும் கவிதைகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்த இயக்கத்தில் உயிரி பன்முகத்தன்மையிலும் கூட பெருமளவு மேம்பாடு காணப்பட்டு வருகிறது.  ஹில்ஸா மீன், கங்கைப்புற டால்ஃபின்கள், பலவகையான முதலைகளின் எண்ணிக்கையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது.  கங்கையின் சூழலமைப்பு சுத்தமாவதால், வாழ்வாதாரத்திற்கான வேறுபல வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.  இந்த இடத்திலே நான் ஜலஜ் ஆஜீவிகா மாடல், அதாவது ஜலஜ் வாழ்வாதார மாதிரி பற்றியும் தெரிவிக்க விரும்புகிறேன், இது உயிரிப் பன்முகத்தன்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது.  இந்த சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்ட படகுப் பயணங்கள் 26 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.  நமாமி கங்கே இயக்கத்தின் விரிவாக்கம், அதன் வீச்சு, நதியின் தூய்மைப்படுத்தலைத் தாண்டியும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரிய வருகிறது.  எங்கே நமது பேரார்வமும், இடைவிடா முயற்சிகளும் கண்கூடான சான்றுகளாக இருக்கும் வேளையில், அங்கே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திசையில் உலகினுக்கே ஒரு புதிய பாதையைக் காட்டவல்லதாகவும் இது இருக்கிறது. 

 

எனதருமை நாட்டுமக்களே, நமது மனவுறுதி திடப்படும் போது, பெரியபெரிய சவால்களையும் நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும்.  சிக்கிமின் தேகூ கிராமத்தின் சங்கே ஷெர்பா அவர்கள் இதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.  இவர் கடந்த 14 ஆண்டுகளாக 12,000 அடிக்கும் அதிக உயரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டு வருகிறார்.  சங்கே அவர்கள், கலாச்சார மற்றும் புராண மகத்துவம் வாய்ந்த சோமகோ ஏரியைச் சுத்தம் செய்யும் சவாலை ஏற்றுக் கொண்டார்.  தனது அயராத முயற்சியால் இவர் இந்த பனிப்பாறை ஏரியின் தோற்றத்தையே மாற்றி விட்டார்.  2008ஆம் ஆண்டிலே, சங்கே ஷெர்பா அவர்கள் தூய்மைக்கான இந்த இயக்கத்தைத் தொடங்கிய போது, பல இடர்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  ஆனால் குறைவான காலத்திலேயே இவருடைய சீரிய செயல்களோடு, இளைஞர்களும், கிராமவாசிகளும் தங்களை இணைத்துக் கொண்டார்கள், பஞ்சாயத்தும் முழுமையான ஒத்துழைப்பை அளித்தது.  இன்று சோமகோ ஏரியை நீங்கள் காணச் சென்றால், அங்கே நாலாபுறங்களிலும் குப்பைத் தொட்டிகளைக் காணலாம்.  அங்கே சேரும் குப்பைக் கூளங்கள் மறுசுழற்சி செய்ய அனுப்பப்படுகிறது.   இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்கள் தங்கள் குப்பைகளைப் போடுவதற்கு வசதியாக, துணியால் ஆன குப்பைப் பைகள் அளிக்கப்படுகின்றன.  இப்போது மிகத் தூய்மையாக ஆகியிருக்கும் இந்த ஏரியைக் காண ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றார்கள்.  சோமகோ ஏரியின் பராமரிப்பு என்ற இந்த அற்புதமான முயற்சிக்காக, சங்கே ஷெர்பா அவர்களை பல அமைப்புகள் கௌரவப்படுத்தி இருக்கின்றன.  இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக இன்று சிக்கிம், பாரதத்தின் மிகத் தூய்மையான மாநிலமாக அறியப்படுகிறது.  சங்கே ஷெர்பா அவர்களுக்கும், அவருடைய நண்பர்களுக்கும், தேசத்தில் இருக்கும் இன்னும் பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களின் நேரிய முயற்சிகளோடு தொடர்புடைய அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். 

 

நண்பர்களே, தூய்மை பாரதம் இயக்கம் என்பது இன்று அனைத்து இந்தியர்களின் மனங்களிலும் கலந்து விட்ட ஒன்றாகி இருக்கிறது என்பது எனக்கு உவகை அளிக்கிறது.  2014ஆம் ஆண்டிலே இந்த மக்கள் இயக்கத்தினைத் தொடங்கிய வேளையில், இதைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல, பல அருமையான முயற்சிகளை மக்கள் மேற்கொண்டார்கள், இந்த முயற்சிகள், சமூகத்தின் உள்ளே மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரங்கேறி வருகின்றது.  தொடர்ந்து இந்த முயற்சிகளின் விளைவாக, குப்பைக்கூளங்களை அகற்றியதால், தேவையற்ற பொருட்களை விலக்கியதால், அலுவலகங்களில் கணிசமான இடவசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, புதிய இடமும் கிடைத்திருக்கிறது. முன்பு, இடப் பற்றாக்குறை காரணமாக அதிக வாடகை கொடுத்து, அலுவலகங்களைப் பராமரிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் இந்த தூய்மைப்படுத்தல் காரணமாக, எந்த அளவுக்கு இடம் கிடைத்திருக்கிறது என்றால், இப்போது ஒரே இடத்தில் அனைத்து அலுவலகங்களும் இடம் பெற்று வருகின்றன. கடந்த நாட்களில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூட மும்பையில், அஹமதாபாதில், கோல்காத்தாவில், ஷில்லாங்கில் என பல நகரங்களிலும் தனது அலுவலகங்களில் முழுமையான முயற்சி மேற்கொண்டதன் காரணமாக, இன்று அவர்களுக்கு இரண்டு அடுக்குகள், மூன்று அடுக்குகள் என முழுமையாக, புதிய வகையில் இடவசதி செயல்படுத்தக் கிடைத்திருக்கின்றன.  தூய்மை காரணமாக, நமது ஆதாரங்களின் உகந்த பயன்பாட்டிற்கான சிறப்பான அனுபவங்களாக இவை திகழ்கின்றன. சமூகத்திலும் கூட, கிராமந்தோறும், நகரம்தோறும், இந்த இயக்கம் தேசத்திற்காக அனைத்து வகைகளிலும் பயனுடையதாக அமைந்து வருகிறது.

 

எனதருமை நாட்டுமக்களே, நமது நாட்டிலே நமது கலை-கலச்சாரம் தொடர்பான ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது, ஒரு புதிய விழிப்பு பிறப்பெடுக்கிறது.  மனதின் குரலில், நானும், நீங்களும், பல முறை இப்படிப்பட்ட உதாரணங்கள் பற்றி விவாதித்திருக்கிறோம்.  எப்படி கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகியன சமூகத்தின் பொதுவான முதலீடுகளாக இருக்கின்றனவோ, அதே போல இவற்றை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இருக்கிறது.  இப்படிப்பட்ட ஒரு வெற்றிகரமான முயற்சி லக்ஷத்தீவுகளில் நடந்து வருகிறது.  இங்கே கல்பேனீ தீவிலே ஒரு கிளப் இருக்கிறது, இதன் பெயர் கூமேல் பிரதர்ஸ் சேலஞ்ஜர்ஸ் கிளப்.  இந்த கிளப்பானது வட்டார கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் கலைகளின் பாதுகாப்புக் குறித்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.  இங்கே இளைஞர்களுக்கு உள்ளூர் கலையான கோல்களி, பரசைகளி, கிளிப்பாட்டு மற்றும் பாரம்பரிய பாடல்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.  அதாவது பண்டைய மரபு, புதிய தலைமுறையினரின் கைகளில் பாதுகாக்கப்படுகிறது, முன்னேறுகிறது; மேலும் நண்பர்களே, இவை போன்ற முயற்சிகள் தேசத்தில் மட்டுமல்ல, அயல்நாடுகளிலும் நடந்தேறி வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.   தற்போது தான் துபாயிலிருந்து ஒரு செய்தி வந்தது, அங்கே களறி கிளப்பானது கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் பதிவேற்படுத்தியிருக்கிறது.  துபாயிலே ஒரு கிளப் ஒரு பதிவை ஏற்படுத்துகிறது, இதிலே பாரத நாட்டிற்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்று எண்ணமிடுவது இயல்பு தான்.  உள்ளபடியே, இந்தப் பதிவு, பாரதத்தின் பண்டைய போர்க்கலையான களறிப்பாயட்டோடு தொடர்புடையது.  ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் மக்கள் களறியில் ஈடுபடுவது தான் இந்தப் பதிவு. களறி கிளப்பானது துபாய் காவல்துறையோடு இணைந்து திட்டமிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தேசிய நாளன்று இதைக் காட்சிப்படுத்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நான்கே வயதான சிறுவர்கள் முதல் 60 வயதானவர்கள் வரை, பங்கெடுத்தவர்கள் களறியில் தங்களுடைய திறமையை, மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தினார்கள்.  பல்வேறு தலைமுறையினர் எப்படி ஒரு பண்டைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள், முழுமையான மனோயோகத்தோடு செயல்படுத்துகிறார்கள் என்பதற்கான அற்புதமான எடுத்துக்காட்டு இது.

 

நண்பர்களே, மனதின் குரல் நேயர்களுக்கு, கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தில் வசிக்கும் க்வேம்ஸ்ரீ பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன்.  க்வேம்ஸ்ரீ என்பது, தெற்கிலே கர்நாடகத்தின் கலை-கலாச்சாரத்தை மீளுயிர்ப்பிக்கும் குறிக்கோளோடு கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  அவர்களுடைய தவமுயற்சி எத்தனை மகத்தானது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்!!  முன்பு அவர்கள் ஹோட்டல் நிர்வாகத் தொழிலில் இணைந்திருந்தார்கள்.  ஆனால் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மீதான அவர்களின் பற்று எத்தனை ஆழமாக இருந்தது என்றால், அவர்கள் இதைத் தங்களுடைய பெருங்குறிக்கோளாக ஆக்கிக் கொண்டார்கள்.  அவர்கள் கலா சேதனா என்ற பெயருடைய ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள்.  இந்த அமைப்பு, இன்று கர்நாடகத்தின் மற்றும் உள்நாட்டு-அயல்நாட்டுக் கலைஞர்களின் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.  இதிலே உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பல நூதனமான செயல்பாடுகளும் இடம் பெறும். 

 

நண்பர்களே, தங்களுடைய கலை-கலாச்சாரம் தொடர்பாக நாட்டுமக்களின் இந்த உற்சாகம், தங்களுடைய மரபின் மீதான பெருமித உணர்வின் வெளிப்பாடு தான்.  நமது தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் இப்படி எத்தனையோ வண்ணங்கள் நிரம்ப இருக்கின்றன.  நாமும் அவற்றை அழகுபடுத்தி-மெருகேற்றிப் பாதுகாக்கும் பணிகளில் இடைவிடாது பணியாற்ற வேண்டும். 

 

என் உளம்நிறை நாட்டுமக்களே, தேசத்தின் பல இடங்களில் மூங்கிலால் பல அழகான, பயனுள்ள பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.  குறிப்பாக பழங்குடிகள் பகுதிகளில் மூங்கில் தொடர்பான நேர்த்தியான கைவினை வல்லுநர்களும், திறமையான கலைஞர்களும் இருக்கின்றார்கள்.   மூங்கிலோடு தொடர்புடைய, ஆங்கிலேயர்கள் காலத்துச் சட்டங்களை தேசம் மாற்றியதிலிருந்து, இதற்கென ஒரு பெரிய சந்தை தயாராகி விட்டது.  மஹாராஷ்டிரத்தின் பால்கர் போன்ற பகுதிகளிலும் கூட பழங்குடி சமூகத்தவர்கள் மூங்கிலால் பல அழகான பொருட்களைத் தயாரிக்கிறார்கள்.  மூங்கிலால் ஆன பெட்டிகள், நாற்காலிகள், தேநீர் மேஜைகள், தட்டுகள், கூடைகள் போன்ற பொருட்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.  இது மட்டுமல்ல, இவர்கள் மூங்கில் புல்லால் அழகான ஆடைகள், அழகுபடுத்தும் பொருட்கள் ஆகியவற்றையும் தயாரிக்கிறார்கள்.  இதனால் பழங்குடியினப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, அவர்களின் திறன்களுக்கும் அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

 

நண்பர்களே, கர்நாடகத்தின் ஒரு தம்பதி, பாக்குமர நார்களால் உருவாக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த பொருட்களை சர்வதேச சந்தை வரை கொண்டு சேர்த்து வருகிறார்கள்.  கர்நாடகத்தின் ஷிவமோகாவைச் சேர்ந்த இந்த தம்பதியான சுரேஷ் அவர்களும் அவருடைய மனைவி மைதிலி அவர்களும், பாக்குமர நார் வாயிலாகத் தாம்பாளங்கள், தட்டுகள், கைப்பைகள் தொடங்கி, அழகுப் பொருட்கள் உட்பட, பல பொருட்களைத் தயாரித்து வருகிறார்கள்.  இந்த நாரினால் தயாரிக்கப்படும் காலணிகள் இன்று அதிக அளவில் விரும்பப்படுவதாக இருக்கிறது.  இவர்களுடைய பொருட்கள் இன்று லண்டன் மற்றும் ஐரோப்பாவின் பிற சந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  இது தான் நமது இயற்கை ஆதாரங்கள் மற்றும் பாரம்பரிய திறன்களின் அழகு, இவை தான் அனைவரையும் கொள்ளை கொண்டு வருகின்றன.   பாரதத்தின் இந்தப் பாரம்பரியமான ஞானத்தில், நீடித்த எதிர்காலத்திற்கான பாதையை உலகம் கண்டு வருகிறது.  நாமும் கூட, இந்தப் போக்கில் அதிகப்படியான விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.  மேலும் இத்தகைய சுதேசி மற்றும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், பிறருக்கும் இவற்றைப் பரிசாக அளிக்க வேண்டும்.  இதனால் நமது அடையாளமும் பலப்படுவதோடு, உள்ளூர்ப் பொருளாதார அமைப்பும் பலப்படும், பெரிய அளவில் மக்களின் எதிர்காலம் ஒளிமயமானதாகும். 

 

எனதருமை நாட்டுமக்களே, இப்போது நாம் மெல்லமெல்ல மனதின் குரலின் 100ஆவது பகுதி என்ற இதுவரை காணாத படிநிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  நாட்டுமக்களின் பல கடிதங்கள் எனக்குக் கிடைக்கின்றன, இவற்றில் அவர்கள் 100ஆவது பகுதியைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  100ஆவது பகுதியில் நாம் என்ன பேசலாம், அதை எப்படி சிறப்பானதாக ஆக்கலாம் என்பது தொடர்பாக நீங்கள் உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும்.  அடுத்த முறை நாம் 2023ஆம் ஆண்டிலே சந்திப்போம்.   உங்கள் அனைவருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த ஆண்டும், தேசத்தின் பொருட்டு சிறப்பாக அமைய வேண்டும், தேசம் புதிய சிகரங்களைத் தொடர்ந்து தொட்டு வர வேண்டும், நாமனைவரும் இணைந்து உறுதிப்பாடு மேற்கொள்வோம், அதை சாதித்தும் காட்டுவோம்.  இந்த சமயம், பலரும் விடுமுறை மனோநிலையில் இருப்பார்கள்.  நீங்கள் திருநாட்களை, இந்தச் சந்தர்ப்பங்களை ஆனந்தமாக செலவிடுங்கள், ஆனால் சற்று எச்சரிக்கையோடும் இருங்கள்.  உலகின் பல நாடுகளில் கொரோனா பெருகி வருவதை நீங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆகையால் நாம் முககவசம் அணிதல், கைகளைக் கழுவி வருதல் போன்ற முன்னெச்சரிக்கைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.   நாம் எச்சரிக்கையாக இருந்தால், பாதுகாப்பாக இருந்தால், நமது கொண்டாட்டத்தில் எந்தத் தடையும் ஏற்படாது.  உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம். 

******

SM/DL