இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் சம்பந்தமான விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு டிசம்பர் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ஜி20 தலைமைத்துவம், ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரியது என்றும், உலகம் முழுவதுக்கும் இந்தியாவின் வலிமையை எடுத்துரைப்பதற்கான தனித்துவமான வாய்ப்பு இது என்றும் பிரதமர் கூறினார். இன்று இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் திறனை மேலும் அதிகரிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஜி20-இன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதில் சர்வதேச தலைவர்களின் ஒத்துழைப்பைக் கோரினார். வழக்கமான பெரிய பெருநகரங்களைக் கடந்து இந்தியாவின் சில பகுதிகளைக் காட்சிப்படுத்த ஜி20 தலைமைத்துவம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இதனால் நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவமும் வெளிப்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
இந்தியாவின் ஜி20 தலைமையின் போது நம் நாட்டிற்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், ஜி20 கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் உள்ளூர் பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும் சாத்திய கூறுகள் பற்றி விளக்கினார்.
பிரதமரின் உரைக்கு முன்பு, திரு மு. க. ஸ்டாலின், திரு எடப்பாடி கே. பழனிச்சாமி, திரு ஜே.பி. நட்டா, திரு மல்லிகார்ஜுன் கார்கே, திருமிகு மம்தா பானர்ஜி, திரு நவீன் பட்நாயக், திரு அரவிந்த் கெஜ்ரிவால், திரு ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, திரு சீதாராம் யெச்சூரி, திரு சந்திரபாபு நாயுடு, திரு பசுபதிநாத் பராஸ், திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரு கே.எம் காதர் மொகிதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் குறித்த தங்களது மேலான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களும் உரையாற்றினார்கள். இந்தியாவின் தலைமையிலான ஜி20 அமைப்பின் முன்னுரிமைகளை எடுத்துரைக்கும் விரிவான விளக்கக் காட்சியும் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அமித் ஷா, திருமதி நிர்மலா சீதாராமன், டாக்டர் எஸ். ஜெயசங்கர், திரு பியூஷ் கோயல், திரு பிரல்ஹாத் ஜோஷி, திரு புபேந்தர் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர் திரு ஹெச்.டி. தேவகவுடா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
(Release ID: 1881059)
**************
SRI/RB/RR
The All-Party meet on India's G-20 Presidency was a productive one. I thank all leaders who participated in the meeting and shared their insights. This Presidency belongs to the entire nation and will give us the opportunity to showcase our culture. https://t.co/wMaI0iSU8R pic.twitter.com/JVB9fEzGXm
— Narendra Modi (@narendramodi) December 5, 2022