Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசியலமைப்பு தினத்தில் பிரதமரின் உரை

அரசியலமைப்பு தினத்தில் பிரதமரின் உரை


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி.ஒய். சந்திரசூட் அவர்களே, மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜுஜு அவர்களே, நீதிபதி திரு சஞ்சய் கிஷன் கவுல் அவர்களே, நீதிபதி திரு அப்துல் நசீர் அவர்களே, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு எஸ்.பி. சிங் பாகேல் அவர்களே, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர். வெங்கட்ரமணி அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு விகாஸ் சிங் அவர்களே, நீதிபதிகளே, மாண்புமிகு விருந்தினர்களே, தாய்மார்களே, அன்பர்களே, வணக்கம்!

அரசியலமைப்பு தினத்தன்று உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். 1949- ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் நமது சுதந்திர இந்தியா புதிய எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டது. விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை இந்தியா நிறைவு செய்து, அமிர்த பெருவிழாவை நாம் கொண்டாடி வருவதால், இந்த ஆண்டு அரசியலமைப்பு தினம் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

நவீன இந்தியா குறித்து கனவு கண்ட பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கிய அனைத்து உறுப்பினர்களையும் நான் வணங்குகிறேன். இன்று தான் கொடூரமான மும்பை தாக்குதல் சம்பவமும் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு  மரியாதை செலுத்துகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் வேகமான வளர்ச்சி, அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மேம்பட்ட சர்வதேச தோற்றம் ஆகியவற்றுக்கு இடையே உலக நாடுகளின் நம்பிக்கை இந்தியாவின் மீது உள்ளது. நமது அரசியலமைப்பின் அசாதாரணமான வலிமையால் இது சாத்தியமானது.

 

மக்களுக்கு உகந்த கொள்கையின் காரணமாக இன்று நம் நாட்டின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. சாமானிய மனிதனுக்கு ஏதுவாக சட்டங்கள் எளிதாக்கப்படுகின்றன. உரிய நேரத்தில் நீதி கிடைப்பதற்காக நமது நீதித்துறை தொடர்ந்து ஏராளமான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விடுதலையின் அமிர்த காலமான இது, நாட்டிற்கான கடமையை ஆற்றும் காலமாகும். நாம் கடமையின் பாதையைப் பின்பற்றினால் நாட்டை புதிய  உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அடுத்த ஒரு வாரத்தில் ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பு. உலகளவில் இந்தியாவின் மதிப்பை மேம்படுத்தி, இந்தியாவின் பங்களிப்பை உலகிற்கு முன் வைப்போம். இதுவும் நம் அனைவரது கூட்டு பொறுப்பு. இளைஞர்களிடையே அரசியலமைப்பு குறித்த புரிதலை உறுதி செய்வதற்காக அரசியலமைப்பு சம்பந்தமான தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களில் அவர்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும். அரசியலமைப்பு தினம் நமது உறுதிப்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

**************

(Release ID: 1879048)

SRI/RB/KRS