Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜி-20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் காணொளி காட்சி மூலம் வெளியிட்டார்

ஜி-20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் காணொளி காட்சி மூலம் வெளியிட்டார்


கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 2022 டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கும் என்றும், இது நாட்டுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் நான் கூறி வந்தேன் என்றார்.

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதம்  மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி-20 உள்ளது என்று பிரதமர் கூறினார்.

இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்று கூறிய பிரதமர், சுதந்திர பெருவிழா ஆண்டில் ஜி-20 தலைவர் பதவி வகித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றார்.

ஜி-20 மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்த அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜி-20 இலச்சினை வெளியீட்டில் குடிமக்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், இலச்சினைக்காக ஆயிரக்கணக்கான ஆக்கபூர்வமான யோசனைகளை அரசு பெற்றதாகக் கூறினார்.

அனைவரின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த பிரதமர், இந்த ஆலோசனைகள் உலகளாவிய நிகழ்வின் முகமாக மாறிவருகின்றன என்றார்.

ஜி-20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு என்று கூறினார்.

“வாசுதைவ குடும்பகம்’-உலகமே ஒரே குடும்பம் என்பது நம் எண்ணங்களில் எங்றும்  நிறைந்திருக்கும் ஒரு தீர்மானம்.

உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி-20 இலச்சினை மூலம் பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது.

அத்வைத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்றும், இந்த தத்துவம் இன்றைய மோதல்களைத் தீர்க்கும் ஊடகமாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த இலச்சினை மற்றும் கருப்பொருள், இந்தியாவில் இருந்து பல முக்கிய செய்திகளைக் குறிக்கிறது.

“போரில் இருந்து விடுதலை பெற புத்தரின் போதனை, வன்முறையை எதிர்கொள்ள மகாத்மா காந்தியின் தீர்வுகள், ஜி-20 மூலம், இந்தியா அவர்களுக்கு ஒரு புதிய உயரத்தை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவி நெருக்கடி மற்றும் குழப்பமான நேரத்தில் வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் உலகளாவிய தொற்றுநோய், மோதல்கள் மற்றும் பல பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் பின்விளைவுகளை உலகம் கையாள்கிறது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“ஜி-20 இலச்சினையில் உள்ள தாமரை இது போன்ற கடினமான காலங்களில் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

உலகம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், அதை சிறந்த இடமாக மாற்ற நாம் முன்னேற முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், அறிவு மற்றும் செழுமையின் இரு தெய்வங்களும் தாமரையின் மீது அமர்ந்திருப்பதாக குறிப்பிட்டார்.

G-20 இலச்சினையில் தாமரையின் மீது வைக்கப்பட்டுள்ள பூமியை சுட்டிக்காட்டிய பிரதமர், பகிரப்பட்ட அறிவு கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவுகிறது, அதே நேரத்தில் பகிரப்பட்ட செழிப்பு கடைசி மைலை அடைய உதவுகிறது என்று கூறினார்.

தாமரையின் ஏழு இதழ்களின் முக்கியத்துவம் என்னவெனில் ஏழு கண்டங்களையும், ஏழு உலகளாவிய இசைக் குறிப்புகளையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் விளக்கினார்.

அவர் மேலும் கூறுகயில், “ஏழு இசைக் குறிப்புகள் ஒன்றாக இணைந்தால், அவை சரியான இணக்கத்தை உருவாக்குகின்றன.”, என்றார்.

பன்முகத்தன்மையை மதிக்கும் அதே வேளையில் உலகை நல்லிணக்கத்துடன் ஒன்றிணைப்பதை ஜி-20 நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு மோடி கூறினார்.

இந்த உச்சி மாநாடு வெறும் ராஜதந்திர சந்திப்பு அல்ல என்று பிரதமர் கூறினார்.

இந்தியா அதை ஒரு புதிய பொறுப்பாகவும், உலகின் நம்பிக்கையாகவும் எடுத்துக்கொள்கிறது.

“இன்று, இந்தியாவை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் உலகில் முன்னெப்போதும் இல்லாத ஆர்வம் உள்ளது. இன்று இந்தியா ஒரு புதிய வெளிச்சத்தில் காணப்படுகிறது.

நமது தற்போதைய வெற்றிகள் மதிப்பிடப்பட்டு, நமது எதிர்காலம் பற்றிய முன்பு என்றும் இல்லாத  நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றன”, என்று அவர் தொடர்ந்தார், “அத்தகைய சூழலில், இந்த எதிர்பார்ப்புகளைத் தாண்டி, இந்தியாவின் திறன்கள், தத்துவம், சமூகம் மற்றும் அறிவுசார் திறன்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவது குடிமக்களின் பொறுப்பாகும்.

“நாம் அனைவரையும் ஒன்றிணைத்து, உலகத்திற்கான அவர்களின் பொறுப்புகளுக்காக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று இந்தியா இந்த நிலையை அடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயணம் மேற்கொண்டது என்றார் திரு மோடி.

“உலக வரலாற்றில் மிக உயர்ந்த செழிப்பு மற்றும் இருண்ட கட்டத்தை நாங்கள் கண்டிருக்கிறோம்.

பல படையெடுப்பாளர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கொடுமையான ஆட்சி அனுபவத்தோடு  இந்தியா இங்கு வந்துள்ளது.

அந்த அனுபவங்களே இன்றைய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப்பெரிய பலம்.

சுதந்திரத்திற்குப் பிறகு, பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, உச்சத்தை இலக்காகக் கொண்டு ஒரு பெரிய பயணத்தைத் தொடங்கினோம்.

கடந்த 75 ஆண்டுகளில் அனைத்து அரசுகளின் முயற்சிகளும் இதில் அடங்கும்.

அனைத்து அரசுகளும், குடிமக்களும் இணைந்து இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.

உலகம் முழுவதையும் அழைத்துச் செல்லும் புதிய ஆற்றலுடன் இந்த உணர்வோடு நாம் இன்று முன்னேற வேண்டும்”, என்றார்.

இந்தியாவின் கலாச்சாரத்தின் முக்கிய பாடத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார், “நாம் நமது முன்னேற்றத்திற்காக பாடுபடும்போது, உலகளாவிய முன்னேற்றத்தையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம் “, என்றார்.

“இந்தியா உலகின் செழிப்பான மற்றும் வாழும் ஜனநாயகம். ஜனநாயகத்தின் தாயின் வடிவில் நமக்கு மதிப்புகள் மற்றும் பெருமைமிக்க பாரம்பரியம் உள்ளது.

இந்தியாவிற்கு பன்முகத்தன்மை உள்ளதைப் போலவே தனித்துவமும் உள்ளது. “ஜனநாயகம், பன்முகத்தன்மை, சுதேசி அணுகுமுறை, உள்ளடக்கிய சிந்தனை, உள்ளூர் வாழ்க்கை முறை மற்றும் உலகளாவிய சிந்தனைகள், இன்று உலகம் அதன் அனைத்து சவால்களுக்கும் இந்த யோசனைகளில் தீர்வு காண்கிறது”, என்றார்.

ஜனநாயகத்தைத் தவிர, நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் முயற்சிகளையும் பிரதமர் முன்வைத்தார்.

“நாம் நிலையான வளர்ச்சியை அரசின் அமைப்பாக இல்லாமல் தனிமனித வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.சுற்றுச்சூழல் நமக்கு உலகளாவிய நோக்கமும்,  தனிப்பட்ட பொறுப்பும் ஆகும்” என்று பிரதமர் வலியுறுத்தினார்.

 

அவர் ஆயுர்வேதத்தின் பங்களிப்பை உயர்த்தி, யோகா மற்றும் கரடுமுரடான தானியங்கள் மீதான உலகளாவிய ஆர்வத்தையும் குறிப்பிட்டார்.

அவர் ஆயுர்வேதத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி, யோகா மற்றும் அரிசி, கோதுமை அல்லாத இதர தானியங்கள் மீதான உலகளாவிய ஆர்வத்தையும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பல சாதனைகளை உலகின் பிற நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பிரதமர் கூறினார்.

வளர்ச்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஒட்டுமொத்த செயல்பாடுகள், ஊழலை அகற்றுதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் எளிதாக வாழ்வது ஆகியவை பல நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கலாம்.

இந்தியாவின் பெண்கள் அதிகாரம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் ஜன்தன் கணக்கின் மூலம் நிதி உள்ளடக்கம் போன்றவைகள் ஜி-20 தலைமை பதவியின் மூலம் உலகை அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார். ஜி7, ஜி77 அல்லது ஐநா பொதுக்குழு  எதுவாக இருந்தாலும் கூட்டுத் தலைமையை உலகம் நம்பிக்கையுடன் நோக்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி ஒரு புதிய முக்கியத்துவத்தை பெறுகிறது.

இந்தியா ஒருபுறம் வளர்ந்த நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகவும், அதே சமயம் வளரும் நாடுகளின் கருத்துக்களை நன்கு புரிந்துகொண்டு வெளிப்படுத்துவதாகவும் அவர் விரிவாகக் கூறினார்.

“இந்த அடிப்படையில்தான், பல தசாப்தங்களாக வளர்ச்சிப் பாதையில் இந்தியாவின் இணைப் பயணிகளாக இருந்த ‘குளோபல் சவுத்’ நண்பர்கள் அனைவரும் இணைந்து நமது ஜி-20 தலைமைப் பொறுப்பின்  செயல் திட்டத்தை உருவாக்குவோம்” என்று அவர் மேலும் கூறினார்.

உலகில் முதல் உலகமோ.  மூன்றாம் உலகமோ இருக்கக்கூடாது.  ஒரே உலகம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சியை பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் தொலைநோக்கு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக முழு உலகையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கான பொதுவான நோக்கத்தை பிரதமர், ஒரு சூரியன், ஒரே உலகம், ஒரே கட்டம் ஆகிய உதாரணங்கள் மூலம் விளக்கினார். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உலகில் புரட்சிக்கான இந்தியாவின் தெளிவான அழைப்பாக இருந்தது.

ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற உலகளாவிய சுகாதார பிரச்சாரம் இயக்கமாக அமையப்பட்டுள்ளது.

ஜி-20 மந்திரம் – ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்று அவர் மேலும் கூறினார்.

“இந்தியாவின் இந்த எண்ணங்களும், மதிப்புகளும்தான் உலக நலனுக்கு வழி வகுக்கின்றன” என்று அவர் தொடர்ந்தார், “இந்த நிகழ்வு இந்தியாவுக்கு மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும், ஆனால் எதிர்காலமும் அதை மதிப்பிடும் என்று நான் நம்புகிறேன்.

உலக வரலாற்றில் ஒரு முக்கியமான சந்தர்ப்பம்.

ஜி-20 மாநாடு மத்திய அரசின் ஒரு நிகழ்வு அல்ல என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வானது இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ‘விருந்தினரே கடவுள்’ என்ற நமது பாரம்பரியத்தின் ஒரு பார்வையை வெளிப்படுத்த ஜி-20 எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

ஜி-20 தொடர்பான நிகழ்வுகள் புதுதில்லி அல்லது ஒரு சில இடங்களில் மட்டுப்படுத்தப்படாது, ஆனால் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“நம் மாநிலங்கள் ஒவ்வொன்றும் அதன் சொந்த குணாதிசயங்கள், பாரம்பரியம், கலாச்சாரம், அழகு, ஒளி மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றைக் கொண்டுள்ளன” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

ராஜஸ்தான், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் விருந்தோம்பல் பண்புக்கு உதாரணங்களாகத் திகழ்கின்றன  என்று கூறிய பிரதமர், இந்த விருந்தோம்பல் மற்றும் பன்முகத்தன்மைதான் உலகை வியக்க வைக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்புக்கான  முறையான அறிவிப்புக்காக, வரும் வாரத்தில்  இந்தோனேஷியா செல்லவிருப்பதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாநில அரசுகள், இந்த விஷயத்தில் முடிந்தவரை தங்கள் பங்கை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“நாட்டின் அனைத்து குடிமக்கள் மற்றும் அறிவு ஜீவிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்க முன்வர வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

உலக நலனில் இந்தியா தனது பங்கை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்து புதிதாக தொடங்கப்பட்ட ஜி-20 இணையதளத்தில் அனைவரும் தங்கள் ஆலோசனைகளை அனுப்பவும், தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் அவர் வலியுறுத்தினார்.

“இது G-20 போன்ற ஒரு நிகழ்வின் வெற்றிக்கு புதிய உயரங்களை கொடுக்கும்,” என்று அவர் தனது உரையை முடித்தார், “இந்த நிகழ்வு இந்தியாவிற்கு ஒரு மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும், ஆனால் எதிர்காலத்தில் உலக வரலாற்றில் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..”, என்றார்

 

பின்னணி

 

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் தலைமைப் பொறுப்பை மேற்கொள்ளும் வகையில் உருவாகி வருகிறது.

இதன் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக, 1 டிசம்பர் 2022 அன்று இந்தியா G-20 தலைமைப் பொறுப்பை ஏற்கும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் உலகளாவிய தீர்வு குறித்த பங்களிப்பிற்கு ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

நமது ஜி-20 தலைமைப் பொறுப்பின் இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளம் ஆகியவை இந்தியாவின் செய்தி மற்றும் உலகிற்கான அதிக முன்னுரிமைகளை பிரதிபலிக்கும்.

ஜி -20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் , உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதம்  மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகியவற்றைக் குறிக்கும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும்.

ஜி-20 தலைமைப் பொறுப்பின் போது, இந்தியா முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாடு, இந்தியா நடத்தும் மிக உயர்ந்த சர்வதேச கூட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

ஜி-20 இந்தியா இணையதளத்தை https://www.g20.in/en/ இல் அணுகலாம்.

********

MSV/GS/IDS