Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

புதுதில்லியில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


புதுதில்லி விக்கியான் பவனில் நடைபெற்ற மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் ஊழல் தடுப்பு வார விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் புதிய புகார் மேலாண்மை முறையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்தார் படேலின் பிறந்த தினத்துடன் ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரம் தொடங்கியதாக கூறினார். சர்தார் படேல் தமது வாழ்க்கையை நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் அர்ப்பணித்தார் என்றும் இதன் மூலமே பொதுச்சேவை முறை கட்டமைக்கப்படுவதாக தெரிவித்தார். விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான இயக்கம்  இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஊழல் இல்லாத இந்தியாவின்  எதிர்ப்பார்ப்புகளையும், கனவுகளையும் உணரும் வகையில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு வார இயக்கம் கடைப்பிடிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அனைத்து குடிமக்களின் வாழ்வாதரத்தின் முக்கியத்தும் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவாக இருப்பதற்கு உண்மை மற்றும் நம்பகத்தன்மை முக்கியம் என்று பிரதமர் கூறினார். அரசு மீதான நம்பகத்தன்மை குறித்த மக்களின் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது இது என்று தெரிவித்தார். முந்தைய அரசுகள் மக்களின் நம்பிக்கையை இழந்ததோடு மக்களை நம்பவும் தவறினார்கள் என்று குற்றம் சாட்டினார்.

ஊழல், சுரண்டல் மற்றும் வளங்களின் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றின் நீண்ட கால அடிமை பாரம்பரியம், எதிர்பாராத வகையில், சுதந்திரத்திற்குப் பிறகு அதிக வலிமை அடைந்ததாக கூறினார். இது இந்த நாட்டின் குறைந்தது நான்கு தலைமுறையினரைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக, கூறிய அவர்,  விடுதலை பெருவிழா அமிர்த காலத்தில் பல ஆண்டுகளாக நிலவும் இந்த சூழ்நிலையை நாம் முழுமையாக மாற்ற வேண்டும்” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக செங்கோட்டையில் இருந்து தாம் உரையாற்றியது குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஊழலுக்கும், மக்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்களைச் சுட்டிக் காட்டினார். அதாவது, வசதி பற்றாக்குறை மற்றும் அரசிடமிருந்து தேவையற்ற அழுத்தம். மிக நீண்ட காலமாக, இந்த வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாதது வேண்டுமென்றே உயிர்ப்புடன் வைக்கப்பட்டு, ஒரு இடைவெளியை விரிவுபடுத்த அனுமதிக்கப்பட்டது,  ஆரோக்கியமற்ற போட்டிக்கு வழிவகுத்ததாக தெரிவித்தார்.  இது ஊழலுக்கேற்ற சூழலுக்கு வழிவகுத்தது. இந்த பற்றாக்குறையால் ஏற்படும் ஊழல் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக கூறினார். “ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடிப்படை வசதிகளுக்காக தங்கள் சக்தியைச் செலவிட்டால், நாடு எப்படி முன்னேறும்?” என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். அதனால்தான், கடந்த 8 ஆண்டுகளாக நிலவி வரும் பற்றாக்குறை அழுத்ததை மாற்ற முயற்சித்து வருகிறோம் என்று கூறினார். விநியோகம் மற்றும் தேவைக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப அரசு முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், அடிப்படை சேவைகளை செறிவூட்டும் நிலைக்கு எடுத்துச் செல்லல், இறுதியாக தற்சார்பு இந்தியாவை நோக்கிச் செல்வது ஆகிய மூன்று வழிகள் மூலம்  இதனை அடையலாம் என்று கூறினார்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து குறிப்பிட்ட பிரதமர்,  பொது விநியோக திட்டத்தை தொழில்நுட்பத்துடன் இணைத்து, கோடிக்கணக்கான போலி பயனாளிகளை நீக்கி, நேரடி வங்கி பண பரிமாற்றத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தவறானவர்களுக்கு செல்வதில் இருந்து 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அதேபோல், வெளிப்படையான மின்னணு பரிவர்த்தனைகள்,  அரசு மின்னணு சந்தை மூலம் வெளிப்படையான அரசு கொள்முதல் ஆகியவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

அடிப்படை வசதிகளை நிறைவான நிலைக்குக் எடுத்துச் செல்வது குறித்துப் பேசிய பிரதமர், எந்தவொரு அரசு திட்டமும் தகுதியுடைய பயனாளியை சென்றடைவதும், நிறைவான இலக்குகளை அடைவதும், ஊழலின் நோக்கத்தை களைவதன் மூலம் சமூக  பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுவதாக சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு திட்டத்திற்குமான  அரசு கடைப்பிடிக்கும் செறிவூட்டல் கொள்கையை எடுத்துரைத்த பிரதமர், தண்ணீர் குழாய் இணைப்புகள், தொகுப்பு வீடுகள், மின் இணைப்புகள் மற்றும் எரிவாயு இணைப்புகள் போன்ற உதாரணங்களை கூறினார்.

வெளிநாட்டு பொருட்களை அதிகம் சார்ந்திருப்பது  ஊழலுக்கு பெரிய காரணம் என்று பிரதமர் கூறினார். பாதுகாப்பு துறையில் தற்சார்பை நோக்கிய அரசின்  முயற்சியை எடுத்துரைத்த அவர்,  துப்பாக்கிகள் முதல் போர் விமானங்கள் மற்றும் பயண விமானங்கள் வரை இந்தியா தமது சொந்த பாதுகாப்பு தளவாட உபகரணங்களைத் தயாரிக்கும் என்பதால், ஊழல் வாய்ப்புகள் முடிவுக்கு வருவதாக சுட்டிகாட்டினார்.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான அனைவரின் முயற்சிகளையும் ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு என்று தெரிவித்தார். கடந்த முறைதடுப்பு விழிப்புணர்வுக்கான தனது கோரிக்கையை நினைவு கூர்ந்த பிரதமர்,  அதையொட்டிய  திசையில் சென்றதாக  மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தை  பாராட்டினார். தணிக்கை மற்றும் ஆய்வுகளை நவீனமயமாக்குவது குறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பினர் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை அனைத்து துறைகளிலும் காண வேண்டியது அவசியம் என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காக, ஊழல் இல்லா நிர்வாகச் சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஊழல் தொடர்புடைய ஒழுங்கு நடவடிக்கைகள் உரிய காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். குற்றவியல் வழக்குகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளின் அடிப்படையில் துறைகளை தரவரிசைப்படுத்தவும், அது தொடர்பான அறிக்கைகளை மாதந்தோறும் அல்லது காலாண்டு அடிப்படையில் வெளியிடவும் அவர் பரிந்துரைத்தார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஊழல் தடுப்பு கண்காணிப்பு  செயல்முறையை சீரமைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். பொதுமக்களின் குறைகளின் தரவுகளைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர்,  சம்பந்தப்பட்ட துறையின் ஊழலுக்கான அடிப்படைக் காரணங்களை தெரிந்துகொள்ள முடியும் என்று  குறிப்பிட்டார்.

ஊழலைக் கண்காணிக்கும் பணியில் சாதாரண மக்களை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். “ஊழல்வாதிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றப்படக்கூடாது, அது உங்களைப் போன்ற அமைப்புகளின் பொறுப்பு என்று கூறினார்.  ஊழல்வாதிகள் எவருக்கும் அரசியல்சமூக ஆதரவு கிடைக்கக்கூடாது என்றும்  ஒவ்வொரு ஊழல்வாதியையும் சமூகம் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், அதற்கான சூழலை உருவாக்குவதும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

 ஊழலில் ஈடுபட்டவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, பலமுறை அவர்கள் புகழப்படுவதைப் பார்த்திருக்கிறோம் என்றும், இந்த நிலை இந்திய சமுதாயத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் கூறினார். இன்றும் சிலர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட ஊழல்வாதிகளுக்கு ஆதரவான வாதங்களை முன்வைப்பதாக தெரிவித்தார். அவர்களுடைய கடமை குறித்து சமூகம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார். இதில் உங்களுடைய  துறை சார்பில்  எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைக்கு பெரிய பங்களிப்பு  இருப்பதாக குறிப்பிட்டார்.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் போன்ற ஊழலுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள் எந்த வகையிலும் தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் வலியுறுத்தினார். எந்தவொரு அரசியல் சார்பாகவும் பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு பணியாற்ற  வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  இதற்கு எதிரானவர்கள் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளைத் தடுக்கவும், தனிநபர்களை அவதூறு செய்யவும் முயற்சிப்பார்கள் என்று  பிரதமர் கூறினார். ஜர்தா ஜனார்தன் என்பது கடவுளின் வடிவம் என்று கூறிய அவர், அவர்கள் உண்மையை அறிவார்கள் என்றும், சோதிப்பார்கள் என்றும், தக்க தருணத்தில் உண்மைக்கு ஆதரவானவர்களுடன் நிற்பார்கள் என்றும் தெரிவித்தார். ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற சத்தியத்தின் பாதையில் நடக்க வேண்டும் என்று மேலும் அவர் வலியுறுத்தினார் .நீங்கள் உறுதியுடன் செயல்படும் போது,  நாடே ​​ உங்களுடன் நிற்கும் என்று குறிப்பிட்டார்.

 தமது உரையின் நிறைவாக பேசிய பிரதமர், கடமை மிகப்பெரியது என்றும், சவால்களும் மாறிக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்.  விடுதலை பெருவிழா அமிர்த காலத்தில்  ஒரு வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த சூழலை உருவாக்குவதில் நீங்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பிரதமர் கூறினார். இந்தச் சவாலைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளில் நிலையான நடவடிக்கையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், வருங்காலத்தில் பேச்சுப் போட்டியை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தார். ஊழலுக்கு எதிரான போராட்ட தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற 5 வெற்றியாளர்களில் 4 பேர் சிறுமிகள் என்பதை அணிந்த பிரதமர், இந்தப் பயணத்தில் சிறுவர்கள் அணிதிரள வேண்டும் என்று வலியுறுத்தினார். அசுத்தத்தை அகற்றும் போதுதான் தூய்மையின் முக்கியத்துவம் புரியும்என்று அவர் மேலும் கூறினார். சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது அவர்களை வரிசைப்படுத்தி காட்டிவிடும் என்று கூறினார். ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் முடிந்தவரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முடித்தார்.

 

இந்நிகழ்ச்சியில்  முதன்மை செயலர், டாக்டர் பி.கே.மிஸ்ரா, பணியாளர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர், டாக்டர்.ஜிதேந்திர சிங், அமைச்சரவை செயலாளர், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் திரு சுரேஷ் என். படேல், ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர்கள் திரு பி.கே.ஸ்ரீவஸ்தவா, அரவிந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

**************

SM/IR/RS/IDS