Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹசீரா உருக்காலை விரிவாக்கத்தின் போது பிரதமர் உரை

ஹசீரா உருக்காலை விரிவாக்கத்தின் போது பிரதமர் உரை


ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

உருக்கு ஆலையின் மூலம் முதலீடு அதிகரிப்பதுடன், ஏராளமான புதிய வாய்ப்புகளுக்கு கதவுகளை திறக்கும் என்று பிரதமர் கூறினார். “ரூ.60,000 கோடிக்கும் அதிகமான முதலீடு குஜராத் மற்றும் நாட்டின் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த விரிவாக்கத்திற்கு பின்னர் ஹசீரா ஆலையின் கச்சா உருக்கு உற்பத்தி திறன் 9 மில்லியன் டன்னில் இருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

2047-ம் ஆண்டு வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் உருக்கு தொழில்துறையின் இலக்குகள் வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், வலுவான உருக்குத்துறை உள்கட்டமைப்பு துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார். இதே போல சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகங்கள், கட்டுமானம், வாகனத் தொழில், மூலதனப்பொருட்கள், பொறியியல் உற்பத்தி ஆகியவற்றில் உருக்குத்துறை பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

 விரிவாக்கத்துடன் முற்றிலும் புதிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாக கூறிய பிரதமர், மின்சார வாகனம், வாகனம் மற்றும் இதர உற்பத்தி துறையில் இது மிகப்பெருமளவில் உதவிகரமாக இருக்கும் என்றார். “இந்த திட்டம் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் (மேக்-இன்-இந்தியா)  தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளுக்கு இது  புதிய வலிமையை அளிப்பதுடன், உருக்குத்துறையில் தற்சார்பு இந்தியா என்னும் நிலையை எட்ட உதவும்” என்று  பிரதமர் கூறினார்.

இந்தியாவில் இருந்து உலகின் எதிர்பார்ப்புகளைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்றார். இந்த துறையில் மேம்பாட்டுக்கு தேவையான கொள்கை சூழலை உருவாக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.  “கடந்த 8 ஆண்டுகளில் அனைவரது முயற்சியின் காரணமாக இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப்பிடித்துள்ளது என்று  கூறினார். இந்த தொழிலில் முன்னேற்றத்திற்கு மகத்தான வாய்ப்புகள் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

 இந்தியாவின் உருக்கு தொழிலை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பட்டியலிட்ட பிரதமர், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் இத்துறையின் வளர்ச்சிக்கு புதிய வழிகளை உருவாக்கியுள்ளதாக கூறினார். ஐஎன்எஸ் விக்ராந்த் பற்றி குறிப்பிட்ட பிரதமர், முக்கிய பாதுகாப்பு தளவாடங்களில் பயன்படுத்தப்படும் உயர்தரமான உருக்கு உற்பத்தியில் நாடு நிபுணத்துவம் பெற்றுள்ளது என்றார். இந்த விமானம் தாங்கி கப்பலுக்கான விசேஷமான உருக்கை டிஆர்டிஓ விஞ்ஞானிகள்  உருவாக்கியதாக பிரதமர் தெரிவித்தார்.  இந்திய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான மெட்ரிக்டன் உருக்கை உற்பத்தி செய்கின்றன. ஐஎன்எஸ் விக்ராந்த் உள்நாட்டு உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்பத்துடன் முழுமையாக தயாராகியுள்ளது. இந்த திறனை மேம்படுத்த கச்சா உருக்கு உற்பத்தி திறனை இருமடங்காக்க நாடு தற்போது இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது நாம் 154 மில்லியன் டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்து வருகிறோம். இதனை அடுத்த 9, 10 ஆண்டுகளில் 300 மில்லியன் டன் என்ற அளவாக உயர்த்துவதே நமது இலக்காகும் என்றார் அவர். வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும் போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், உருக்குத்துறையில்  கார்பன் உமிழ்வை உதாரணமாக குறிப்பிட்டார். ஒரு பக்கம் இந்தியா கச்சா உருக்கு உற்பத்தி திறனை விரிவாக்கும் நிலையில், மறுபக்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.  இந்தியா இத்தகைய உற்பத்தி தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இது கார்பன் உமிழ்வை குறைப்பதுடன்,  கார்பன் மறு பயன்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்றார். நாட்டில் சுற்றுப்பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்த திசையில்  அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து பாடுபட்டு வருகின்றன என்றார். ஹசீரா திட்டத்தில் பசுமை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 பிரதமர் தமது உரையின் நிறைவாக, “இலக்கு நோக்கிய முயற்சிகளை ஒவ்வொருவரும் முழுவேகத்துடன் தொடங்கும் போது அதனை எட்டுவது கடினமாக இராது” என்று தெரிவித்தார். உருக்கு தொழிலை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறிய அவர், “இந்த திட்டம் பிராந்தியம் முழுவதையும் மட்டும் அல்லாமல் உருக்குத்துறை மேம்பாட்டுக்கும் உத்வேகம் அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.  

**************

(Release ID: 1871563)

MSV/PKV/AG/KRS