பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
இந்த மருத்துவமனையின் சி பிளாக்கிற்கு பிரதமர் வருகை தந்தார். பின்னர் பிலாஸ்பூர் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாண மாதிரி காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் இந்த மருத்துவமனை திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிடி ஸ்கேன் மையம், அவசரகால சிகிச்சை மற்றும் விபத்துக்கான சிகிச்சை பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்.
பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம், நாடு முழுவதும் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. 2017 அக்டோபரில் இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் பிரதமரால் நாட்டப்பட்டது. பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இது நிறுவப்பட்டுள்ளது
இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 1470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 18 சிறப்பு பிரிவுகள் 17 பன்னோக்கு சிறப்பு துறைகள் ஆகியவற்றுடன் நவீன முறையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. 18 அறுவை சிகிச்சைக் கூடங்கள், 64 ஐசியு படுக்கைகளுடன் 750 படுக்கைகள் உள்ளன. 247 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த மருத்துவமனையில் 24 மணி நேர அவசர கால சிகிச்சை, டயாலிசிஸ் வசதி, அல்ட்ராசோனோகிராஃபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற நவீன நோய்கண்டறிதல் கருவிகளும் இங்கு உள்ளன. அம்ரித் மருந்தகம், மக்கள் மருத்துவ மையம், 30 படுக்கை வசதி கொண்ட ஆயுஷ் பிரிவு ஆகியவையும் உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் பழங்குடி பகுதி மற்றும் தொலைதூர பகுதிகளிலும் சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக டிஜிட்டல் சுகாதார மையத்திற்கான அமைப்பையும் இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. எளிதில் சென்றடைய முடியாத பழங்குடிப் பகுதிகள், காஜா, சலூனி, கீலாங் போன்ற மிக உயரத்தில் உள்ள இமாலயப் பகுதிகள் ஆகியவற்றில் சுகாதார முகாம்கள் மூலம் சிறப்பு சுகாதார சேவைகளையும் இந்த மருத்துவமனை வழங்கும். இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் வகுப்புகளில் 100 மாணவர்களும் செவிலியர் வகுப்புகளில் 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.
பிரதமருடன் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாக்கூர், இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினரும் பிஜேபி தேசிய தலைவருமான திரு ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் சென்றிருந்தனர்.
*******