Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்ய அதிபருடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரை

ரஷ்ய அதிபருடனான இருதரப்பு சந்திப்பின் போது  பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய  தொடக்க உரை


மேதகு அதிபர் அவர்களே,

தங்களை மீண்டும் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பும், பல தலைப்புகளில் விவாதிக்கும் வாய்ப்பும் கிடைதத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உங்களது பயணத்தின் போது, நாம் பல விஷயங்கள் பற்றி  விவாதித்தோம், அதற்குப் பிறகும், நீங்கள் சொன்னது போல், நாம் ஒரு முறை தொலைபேசியில் விவாதித்தோம், மேலும் உலக விவகாரங்கள், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தோம். இன்று நாம் மீண்டும் ஒருமுறை சந்திக்கின்றோம், இன்று உலகமும் குறிப்பாக வளரும் நாடுகளும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கவலைகள் உணவுப் பாதுகாப்பு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள்; நாம் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும், அதற்கு நீங்களும் பங்களிக்க வேண்டும்.

மேதகு அதிபர் அவர்களே,

உங்களுக்கும் உக்ரைனுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஏனென்றால் ஆரம்ப நாட்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைனில் சிக்கியபோது, நெருக்கடியின் போது, உங்கள் உதவியுடனும், உக்ரைனின் உதவியுடனும், நாங்கள் எங்கள் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்தது. அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றதற்காக இரு நாடுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இன்றைய காலம் போர்க்காலம் அல்ல என்பதை நான் அறிவேன், ஜனநாயகம், இராஜதந்திரம், உரையாடல் போன்றவை உலகைத் தொடும் விஷயங்கள் என்று நாம் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளோம். இனிவரும் நாட்களில் நாம் எவ்வாறு அமைதிப் பாதையில் முன்னேறுவது என்பது பற்றி கலந்துரையாடுவதற்கு இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  உங்கள் எண்ணத்தைப் புரிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

மேதகு அதிபர் அவர்களே, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம், ஏனென்றால் கடந்த பல தசாப்தங்களாக ஒவ்வொரு நொடியும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தோம், மேலும் இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு எப்படி இருந்தது, ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு எப்படி இருந்தது என்பதை உலகம் முழுவதும் அறியும். அது பிரிக்க முடியாத நட்பு என்று தெரியும். தனிப்பட்ட முறையில் பேசினால், நம் இருவரின் பயணம் ஒரே நேரத்தில் தொடங்கியது. 2001ஆம் ஆண்டு நீங்கள் அரசுத் தலைவராகப் பணிபுரிந்து, மாநில அரசுத் தலைவராகப் பணிபுரியத் தொடங்கியபோது உங்களை முதன்முதலில் சந்தித்தேன். இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன, நமது நட்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது, இந்த பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்காக, மக்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறோம். இன்று, எஸ்சிஓ உச்சி மாநாட்டில், இந்தியாவுக்காக நீங்கள் வெளிப்படுத்திய அனைத்து உணர்வுகளுக்கும் நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இன்றைய இருதரப்பு சந்திப்புகளும், இன்றைய பேச்சு வார்த்தைகளும் வரவிருக்கும் நாட்களில் நமது உறவுகளை மேலும் ஆழப்படுத்தும், மேலும் உலகின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவும் என்று நான் நம்புகிறேன். இன்று நேரத்தை ஒதுக்கியதற்காக நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

 

பொறுப்பு துறப்பு – இது பிரதமர் உரையின்  தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை  இந்தியில் வழங்கப்பட்டது.

**********