எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் 91ஆவது பகுதி இது. இதுவரை நாம் ஏராளமான விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறோம், பல்வேறு விஷயங்கள் குறித்து நமது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறோம் என்றாலும், இந்த முறை மனதின் குரல் மிகவும் சிறப்பானது. காரணம் என்னவென்றால், இந்த முறை சுதந்திரத் திருநாள், தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டினை பாரதம் நிறைவு செய்யவிருக்கிறது. நாம் அற்புதமான-சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தின் சான்றுகளாக ஆக இருக்கிறோம். இறைவன் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பேற்றினை அளித்திருக்கிறார். நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் அடிமை வாழ்வின் காலகட்டத்தில் பிறந்திருந்தோம் என்று சொன்னால், இந்த நாள் பற்றிய நமது கற்பனை எவ்வாறு இருந்திருக்கும்? அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைந்திடத் துடிக்கும் தவிப்பு, விடுதலைச் சிறகுகளை அணிந்து பறக்க விழையும் பேரார்வம் – எத்தனை பெரியதாக இருந்திருக்கும். அதே நிலையில் நாம் இருந்திருந்தோம் என்றால், ஒவ்வொரு நாளும், இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் விடுதலை வேண்டிப் போராடுவதையும், துன்பம் சகிப்பதையும், உயிர்த்தியாகங்கள் புரிவதையும் பார்த்திருப்போம். ஒவ்வொரு நாள் காலையும், எப்போது எனது பாரதம் விடுதலை அடையும் என்ற கனவோடு நாம் விழித்தெழுந்திருப்போம், வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷங்களை உதடுகளில் உச்சரித்த வண்ணம் நமது நாட்கள் கழிந்திருக்கும், வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்க்கையை அர்ப்பணித்திருப்போம், நமது இளமையைத் துறந்திருப்போம்.
நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா என்பது ஒரு மக்கள் பேரியக்கமாக வடிவடுத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்துத் துறைகள், சமூகத்தின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது போன்றதொரு நிகழ்ச்சி, இந்த மாதம் மேகாலயாவில் தொடங்கப்பட்டது. மேகாலயாவின் வீரம்நிறைந்த போராளி, யூ. டிரோத் சிங் அவர்கள் காலமான நாளன்று, மக்கள் அவரை நினைவு கூர்ந்தார்கள். காஸி மலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அங்கே வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை டிரோத் சிங் அவர்கள் வலுவாக எதிர்த்தார். இந்த நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் அழகான படைப்புக்களை அளித்தார்கள். வரலாற்றிற்கு உயிர் கொடுத்தார்கள். ஒரு கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்; இதிலே, மேகாலயாவின் மகத்தான கலாச்சாரத்தை நேர்த்தியான முறையிலே காட்சிப்படுத்தினார்கள். சில வாரங்கள் முன்னதாக, கர்நாடகத்தில், அம்ருதா பாரதீ கன்னடார்த்தீ என்ற பெயர் கொண்ட வித்தியாசமான இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதிலே மாநிலத்தின் 75 இடங்களில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு இணைந்த பிரும்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில் கர்நாடகத்தின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவில் கொள்ளுவதோடு, வட்டார இலக்கிய சாதனைகளையும் முன்னிறுத்தும் முயல்வு மேற்கொள்ளப்பட்டது.
நண்பர்களே, இதே ஜூலை மாதத்தில் ஒரு மிகவும் சுவாரசியமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது, இதன் பெயர் – சுதந்திரத்தின் ரயிலும் ரயில் நிலையமும். இந்த முயற்சியின் நோக்கம் என்னவென்றால், மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வே துறையின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. தேசத்தில் பல ரயில் நிலையங்களோடு சுதந்திரப் போராட்ட வரலாறு பின்னிப் பிணைந்திருக்கிறது. நீங்களும் கூட, இந்த ரயில் நிலையங்கள் பற்றித் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஜார்க்கண்டின் கோமோ ரயில் சந்திப்பு, இப்போது அதிகாரப்பூர்வமாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ரயில் சந்திப்பு கோமோ என்ற பெயரால் அறியப்படுகிறது. ஏன் தெரியுமா? அதாவது இந்த ரயில் நிலையத்தில் தான், கால்கா மெயிலில் பயணித்து நேதாஜி சுபாஷ், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தந்திரமாகப் போக்குக் காட்டுவதில் வெற்றி பெற்றார். நீங்கள் அனைவரும் லக்னௌவுக்கு அருகிலே காகோடீ ரயில் நிலையத்தின் பெயரைக் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையத்தோடு ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் போன்ற தீரர்களின் பெயர் இணைந்திருக்கிறது. இங்கே ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் கஜானாவைக் கொள்ளையடித்த வீரமான புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்குத் தங்களுடைய பலம் என்ன என்பதைக் காட்டினார்கள். நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினான்.
நண்பர்களே, பட்டியல் மிகவும் நீளமானது. நாடெங்கிலும் 24 மாநிலங்களில் பரந்து விருந்திருக்கும் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இந்த 75 நிலையங்கள் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. நீங்களும் கூட, கொஞ்சம் நேரம் ஒதுக்கி, உங்கள் அருகிலே இருக்கும் ஏதாவது ரயில் நிலையத்திற்குச் சென்று வாருங்கள். சுதந்திரப் போராட்டம் பற்றி, உங்களுக்கும் தெரியாத தகவல்கள் உடைய, இப்படிப்பட்ட சரித்திரம் பற்றி விரிவாகத் தெரியவரும். அக்கம்பக்கத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களிடத்திலே நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஆசிரியர்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்கள் பள்ளியைச் சேர்ந்த சின்னச்சின்ன பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, ரயில் நிலையம் செல்லுங்கள், மொத்த சம்பவத்தையும் அந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், புரிய வையுங்கள்!!
என் மனம்நிறை நாட்டுமக்களே, சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவின்படி, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுங்கள், அல்லது அதை உங்கள் வீட்டில் ஏற்றுங்கள். மூவண்ணக் கொடி நம்மை இணைக்கிறது, நாம் தேசத்தின் பொருட்டு பங்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. உங்களிடத்திலே எனக்கு மேலும் ஒரு ஆலோசனையும் உண்டு; அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நீங்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில், மூவண்ணத்தைப் பதிவிடலாம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதிக்கு, நமது மூவண்ணக் கொடியோடு ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த நாளன்று தான் பிங்கலீ வெங்கையா அவர்கள் பிறந்தார், இவர் தான் நமது தேசியக் கொடியை வடிவமைத்தார். நான் அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். நமது தேசியக் கொடி பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், மகத்தான புரட்சியாளர் மேடம் காமாவையும் கூட நாம் நினைவுகூருவோம். மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
நண்பர்களே, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் நடந்தேறி வரும் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அளிக்கும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், நாட்டுமக்களாகிய நாமனைவரும் நமது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும் என்பது தான். அப்போது தான் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நம்மால் நிறைவேற்ற இயலும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும். ஆகையால் நமது அடுத்த 25 ஆண்டுகளின் இந்த அமிர்தகாலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமைக்காலம் போன்றதாகும். தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்த, நமது சாகஸமான வீரர்கள், நமக்கெல்லாம் ஒரு பொறுப்பை விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கொரோனாவிற்கு எதிராக நாட்டுமக்களாகிய நம்முடைய போராட்டம் இப்போதும் தொடர்கிறது. உலகம் முழுமையும் கூட இதைச் சந்தித்து வருகிறது. முழுமையான உடல் பராமரிப்பின் மீது அதிகரித்துவரும் மக்களின் ஆர்வம் தான் இந்த கட்டத்தில் அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது. பாரதநாட்டுப் பாரம்பரியமான வழிமுறைகள் எந்த அளவுக்கு இதிலே உதவிகரமாக இருக்கிறது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலே, ஆயுஷ் அமைச்சகம், உலகளாவிய அளவில், முக்கியமான பங்களிப்பைப் புரிந்திருக்கிறது. உலகெங்கிலும் ஆயுர்வேதம் மற்றும் பாரதநாட்டு மருந்துகள் மீது ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆயுஷ் ஏற்றுமதிகளில் சாதனை படைக்கும் வேகம் வந்திருப்பதற்கு இது ஒரு மிகப்பெரிய காரணம்; மேலும் ஒரு மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால், இந்தத் துறையில் பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் வரத் தொடங்கியிருக்கின்றன. தற்போது தான் ஒரு உலக அளவிலான ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சிமாநாடு நடந்தேறியது. இதிலே கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கான முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நடந்த மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனா காலகட்டத்தில் மருத்துவ மூலிகைகள் மீதான ஆய்வுகளிலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தான். இது தொடர்பாக பல ஆய்வுகளும் பதிப்பிடப்பட்டு வருகின்றன. கண்டிப்பாக இது ஒரு நல்ல தொடக்கம் தான்.
நண்பர்களே, தேசத்தில் பலவகையான மருத்துவத் தாவரங்கள், மூலிகைகள் தொடர்பான ஒரு அற்புதமான முயல்வு நடந்திருக்கிறது. சில நாள் முன்பாகத் தான் ஜூலை மாதத்தில் Indian Virtual Herbarium – இந்திய மெய்நிகர் மூலிகைத் தொகுப்பு தொடங்கப்பட்டது. டிஜிட்டல் உலகினைப் பயன்படுத்தி, நமது வேர்களோடு நாம் எப்படி இணைய முடியும் என்பதற்கான உதாரணமும் கூட இது. இந்திய மெய்நிகர் மூலிகைத் தொகுப்பு, பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் அல்லது செடி பாகங்களின் டிஜிட்டல் படங்களின் சுவாரசியமான தொகுப்பு, இது இணையத்தளத்தில் எளிதாகக் காணக் கிடைக்கிறது. இந்த மெய்நிகர் மூலிகைத் தொகுப்பிலே இப்போது இலட்சத்திற்கும் மேற்பட்ட வகைமாதிரிகளும், இவற்றோடு தொடர்புடைய அறிவியல் தகவல்களும் கிடைக்கிறது. மெய்நிகர் மூலிகைத் தொகுப்பில், பாரதத்தின் தாவரவியல் பன்முகத்தன்மையின் நிறைவான காட்சியும் காணக் கிடைக்கிறது. இந்திய மெய்நிகர் தாவரத் தொகுப்பு, பாரத நாட்டுத் தாவரங்கள் மீதான ஆய்வுகள் பற்றிய ஒரு முக்கியமான ஆதாரமாக விளங்கும் என்பது என் நம்பிக்கை.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் ஒவ்வொரு முறையும் நாட்டுமக்களின் பலவகைப்பட்ட வெற்றிகள் பற்றி விவாதிக்கிறோம், இவை நம் இதழ்களில் இனிமையான புன்னகையை மலரச் செய்கிறது. ஒரு வெற்றிக்கதை, இனிமையான புன்னகையைத் ஏற்படுத்துகிறது, நாவில் இனிய சுவையை நிரப்புகிறது என்று சொன்னால், இதை நாம் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல் என்போம் அல்லவா!! நமது விவசாயிகள் இப்போதெல்லாம் தேன் உற்பத்தியில் என்னவெல்லாம் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? தேனின் சுவை நமது விவசாயிகளின் வாழ்வையே மாற்றியமைத்து, அவர்களின் வருவாயை அதிகரித்தும் வருகிறது. ஹரியாணாவிலே, யமுனாநகரிலே, ஒரு தேனீ வளர்ப்பாளர் இருக்கிறார் – சுபாஷ் கம்போஜ் அவர்கள். சுபாஷ் அவர்கள் விஞ்ஞான முறைப்படி தேனீ வளர்ப்பிற்கான பயிற்ச்சியைப் பெற்றார். ஆறு பெட்டிகளோடு தன் பணியைத் தொடங்கினார். இன்று இவர் கிட்டத்தட்ட 2,000 பெட்டிகளோடு தேனீக்களை வளர்த்து வருகிறார். இவருடைய தேன் பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜம்முவின் பல்லீ கிராமத்தைச் சேர்ந்த விநோத் குமார் அவர்களும் 1500க்கும் மேற்பட்ட காலனிகளில் தேனீக்களைப் பராமரித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு, இராணித் தேனீ வளர்ப்பில் பயிற்சி பெற்றார். இந்தப் பணி வாயிலாக இவர் ஆண்டுதோறும் 15 முதல் 20 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, மதுகேஷ்வர் ஹெக்டே அவர்கள் பாரத அரசிடமிருந்து 50 தேனீ காலனிகளுக்கான உதவித்தொகை பெற்றார். இவர் வசம் 800க்கும் அதிகமான காலனிகள் உள்ளன, இவர் பல டன்கள் தேனை விற்பனை செய்கிறார். இவர் தனது வேலையில் புதுமையைப் புகுத்தியிருக்கிறார், மேலும் நாவல் தேன், துளசி தேன், நெல்லித் தேன் போன்ற தாவரத் தேன்களையும் ஏற்படுத்தி வருகிறார். மதுகேஷ்வர் அவர்களே, தேன் உற்பத்தியில் உங்களின் நூதனக் கண்டுபிடிப்புகளும் வெற்றியும், உங்களுடைய பெயருக்குப் பொருள் சேர்க்கிறது.
நண்பர்களே, நம்முடைய பண்டைய மருத்துவ முறைகளில் தேனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். ஆயுர்வேத நூல்களில் தேனை அமுதம் என்றே அழைத்திருக்கிறார்கள். தேன் என்பது, நமக்கு சுவையை மட்டும் அளிப்பதில்லை, உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. தேன் உற்பத்தியில் இன்று இந்த அளவுக்கு சாத்தியக்கூறுகள் என்பதால், தொழில்ரீதியான படிப்புகளை மேற்கொள்ளும் இளைஞர்களும் கூட இதன் மூலமாக சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் இளைஞர் தான் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த நிமித் சிங்க். நிமித் சிங் அவர்கள் தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கிறார். இவருடைய தந்தையார் மருத்துவர் என்றாலும், படித்த பிறகு நிமித் சிங் அவர்கள் சுயவேலைவாய்ப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். இவர் தேன் உற்பத்தி செய்யும் வேலையைத் தொடங்கினார். தரக் கட்டுப்பாட்டிற்காக லக்னௌவில் தனக்கென ஒரு பரிசோதனைக் கூடத்தையும் உருவாக்கி இருக்கிறார். நிமித் அவர்கள் இப்போது தேன் மற்றும் தேன் மெழுகு வாயிலாக நன்கு வருவாய் ஈட்டி வருகிறார். மேலும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். இப்படிப்பட்ட இளைஞர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே இன்று தேசம் இத்தனை பெரிய தேன் உற்பத்தியாளராக ஆகி வருகிறது. தேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேனின் அளவு அதிகரித்திருப்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். தேசிய தேனீவளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் போன்ற இயக்கங்களை நாடு முடுக்கி விட்டதாலும், விவசாயிகளின் முழுமையான உழைப்பினாலும், நமது தேனின் சுவை, உலகெங்கிலும் சுவை கூட்டி வருகிறது. இதுமட்டுமல்ல, இந்தத் துறையில் மேலும் பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நமது இளைஞர்கள் இந்த சந்தர்ப்பங்களோடு தங்களை இணைத்துக் கொண்டு, இவற்றால் ஆதாயமடைந்து, புதிய சாத்தியக்கூறுகளை சாத்தியமாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மனதின் குரலின் நேயர் ஒருவரான ஆஷீஷ் பஹல் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் தனது கடிதத்தில் சம்பாவின் மிஞ்ஜர் மேலே என்பது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது மக்காச்சோளத்தின் மலர்களையே மிஞ்ஜர் என்று அழைக்கிறார்கள். மக்காச்சோளத்தில் மிஞ்ஜர் அதாவது அதன் மலர்கள் தோன்றும் போது, மிஞ்ஜர் விழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கொண்டாட்டத்தில், நாடெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். தற்போது இந்த மிஞ்ஜர் கொண்டாட்டம் நடைபெற்று வருவது ஒரு தற்செயல் நிகழ்வு. ஒருவேளை நீங்கள் ஹிமாச்சலுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறீர்கள் என்றால், இந்தக் கொண்டாட்டத்தைக் காண சம்பா செல்லலாம். சம்பா மிகவும் அழகான இடம், இங்கே நாட்டுப்பாடல்களில் மீண்டும்மீண்டும் என்ன கூறப்படுகிறது என்றால் – சம்பே இக் தின் ஓணா கனே மஹீனா ரைணா. அதாவது, ஒரு நாள் மட்டும் யாரெல்லாம் சம்பாவுக்கு வருகிறார்களோ, அவர்கள் இதன் அழகைக் கண்டு மயங்கி ஒரு மாதம் வரை தங்கி விடுவார்கள்.
நண்பர்களே, நமது தேசத்தில் கொண்டாட்டங்களுக்கென பெரிய கலாச்சார மகத்துவம் இருந்து வந்துள்ளது. விழாக்கள், மக்களையும் மனங்களையும் இணைக்கின்றன. ஹிமாச்சலில் ஏற்பட்ட மழைக்குப் பிறகு, முன்பட்டப் பயிர்கள் முதிர்ச்சி பெறத் தொடங்குகின்றன, அப்போது செப்டம்பரில், ஷிம்லா, மண்டி, குல்லு, சோலன் ஆகிய இடங்களில் சைரீ அல்லது சைர் கொண்டாடப்படுகிறது. செப்டம்பரில் ஜாக்ரா வரவிருக்கிறது. ஜாக்ராவின் கொண்டாட்டங்களில் மஹாசூ தேவதையை அழைத்து, பீஸூ கீதங்கள் பாடப்படுகின்றன. மஹாசூ தேவதையின் இந்தப் போற்றுதல், ஹிமாச்சலில் ஷிம்லா, கின்னௌர், சிர்மௌர் தவிர, உத்தராக்கண்டிலும் நடக்கிறது.
நண்பர்களே, நமது தேசத்தில் பல்வேறு மாநிலங்களில் பழங்குடியினங்களின் பல பாரம்பரியமான விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சில விழாக்கள் பழங்குடியினக் கலாச்சாரத்தோடு தொடர்புடையன, சில விழாக்கள், பழங்குடியின வரலாறு மற்றும் மரபோடு இணைந்தவை, எடுத்துக்காட்டாக, உங்களுக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், தெலங்கானாவின் மேடாரமின், 4 நாட்கள் நடக்கக்கூடிய சமக்கா-சரலம்மா ஜாத்ரா விழாவைக் காணக் கண்டிப்பாகச் செல்லுங்கள். இந்த விழாவை தெலங்கானாவின் மஹாகும்பமேளா என்று அழைப்பார்கள். சரலம்மா ஜாத்ரா விழா, இரண்டு பழங்குடியினப் பெண் தலைவிகளான சமக்கா, சரலம்மா ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது தெலங்கானாவில் மட்டும் இல்லை, மாறாக சத்தீஸ்கட், மஹாராஷ்ட்ரம், ஆந்திரப் பிரதேசத்தின் கோயா பழங்குடியினத்தவர்களின் நம்பிக்கைகளின் மையக்களம். ஆந்திரப் பிரதேசத்தின் மாரீதம்மா விழாவும் கூட, பழங்குடியினச் சமூகத்தின் நம்பிக்கைகளோடு இணைந்த ஒரு விழா. ஆனி அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை நடைபெறும் இந்த மாரீதம்மா விழாவில், இங்கிருக்கும் பழங்குடியினச் சமூகம், இதை சக்தி உபாசனையோடு இணைக்கிறது. கிழக்கு கோதாவரியின் பெத்தாபுரத்தில் கோயிலும் இருக்கிறது. இதைப் போலவே, ராஜஸ்தானத்தின் கராசியா பழங்குடியினத்தவர் சித்திரையின் வளர்பிறை சதுர்தசியை, சியாவாத் திருவிழா அல்லது மன்கான் ரோ திருவிழா என்று பெயரிட்டுக் கொண்டாடுகிறார்கள்.
சத்தீஸ்கட்டின் பஸ்தரைச் சேர்ந்த நாராயண்புரில் மாவ்லீ விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அருகே இருக்கும் மத்திய பிரதேசத்திலே, பகோரியா விழா மிகவும் பிரசித்தமானது. பகோரியா விழாவின் தொடக்கம், போஜ ராஜா காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது பீல் ராஜாவான காஸூமராவும் பாலூனும், அவரவர் தலைநகரங்களில் முதன்முறையாக இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது முதல் இன்று வரை, இந்த விழாவானது, அதே அளவு உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றது. இதைப் போலவே, குஜராத்தின் தர்ணேதர், மாதோபூர் போன்ற பல விழாக்கள் மிகவும் பிரசித்தமானவை. திருவிழாக்கள் என்பன இயல்பாகவே நமது சமூகத்தில், வாழ்க்கையில் ஆற்றலுக்கான ஊற்றுக்களாக விளங்குகின்றன. உங்களுக்கு அருகிலே இப்படிப்பட்ட பல திருவிழாக்கள் நடந்து வரலாம். நவீனகாலத்தில், சமூகத்தின் தொன்மையான தொடர்புகள், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினை பலப்படுத்த மிகவும் அவசியமானது. நமது இளைஞர்களை இதோடு நாம் இணைக்க வேண்டும், நீங்கள் எப்போதெல்லாம் இத்தகைய திருவிழக்களுக்குச் சென்றாலும், அங்கே காணப்படும் காட்சிகளைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிருங்கள். நீங்கள் விரும்பினால், ஒரு சிறப்பான ஹேஷ்டேகைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக அந்தத் திருவிழாக்கள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திலும் நீங்கள் எடுத்த படங்களைத் தரவேற்றம் செய்யலாம். அடுத்த சில தினங்களில் கலாச்சார அமைச்சகம் ஒரு போட்டியைத் தொடங்க இருக்கிறது, அதிலே திருவிழாக்கள் தொடர்பான மிகவும் அருமையான படங்களை அனுப்புவோருக்குப் பரிசுகள் வழங்கப்படும். சரி, இனியும் ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனே விழாக்களைச் சுற்றிப் பாருங்கள், அவற்றின் படங்களைப் பகிருங்கள், உங்களுக்குப் பரிசு கிடைக்கலாம், இல்லையா!!
என் கனிவுநிறை நாட்டுமக்களே, உங்களுக்கு நினைவிருக்கலாம், மனதின் குரலின் ஒரு பகுதியில், பொம்மைகள் ஏற்றுமதியில் முதலிடம் பெறும் ஆற்றல் பாரதத்திடம் இருப்பதாக நான் கூறியிருந்தேன், அல்லவா? விளையாட்டுக்களில் பாரத நாட்டின் நிறைவான பாரம்பரியம் பற்றிக் குறிப்பாக நான் விவாதித்திருந்தேன். பாரத நாட்டின் வட்டார பொம்மைகள் – பாரம்பரியம், இயற்கை என இரண்டுக்கும் இசைவானதாக இருக்கின்றது, அதாவது சூழலுக்கு இசைவானவையாக இருக்கின்றன. நான் இன்று உங்களோடு பாரத நாட்டுப் பொம்மைகளின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நம்முடைய இளைஞர்கள், ஸ்டார்ட் அப்புகள், தொழில் முனைவோர் காரணமாக நமது பொம்மைத் தொழில் சாதித்திருக்கும் சாதனைகளும், பெற்றிருக்கும் வெற்றிகளும் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. இன்று பாரதநாட்டு விளையாட்டுப் பொருட்கள் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கையில், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பதன் எதிரொலி அனைத்து இடங்களிலிருந்தும் எதிரொலிக்கிறது. பாரதத்தில் இப்போது, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் இங்கே 3000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள் வெளியிலிருந்து வந்தன, அதுவே இப்போது 70 சதவீதம் குறைந்திருப்பது சந்தோஷம் அளிப்பதாகும்; அதே வேளையில் பாரதம், 2600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான விளையாட்டுப் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. முன்பெல்லாம் 300-400 கோடி ரூபாய் பெறுமானமுள்ள விளையாட்டுப் பொருட்கள் தாம் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்தச் சாதனைகள் அனைத்தும் கொரோனா காலகட்டத்தில் நடந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதத்தின் விளையாட்டுப் பொருட்கள் துறையானது இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியிருக்கிறது. இந்தியத் தயாரிப்பாளர்கள் இப்போது, இந்தியப் புராணங்கள், வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றார்கள். தேசத்தின் பல இடங்களில் விளையாட்டுப் பொருட்களின் தொகுதிகள், விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் சின்னச்சின்ன தொழில்முனைவோர், இவர்கள் இதனால் பயனடைந்து வருகிறார்கள். இந்தச் சிறிய தொழில்முனைவோர் தயாரிக்கும் விளையாட்டுப் பொருட்கள் இப்போது உலகெங்கும் பயணிக்கிறது. பாரதத்தின் விளையாட்டுப் பொருள் தயாரிப்பாளர்கள், உலகின் முக்கியமான உலக அளவிலான விளையாட்டுப் பொருட்கள் ப்ராண்டுகளோடு இணைந்தும் பணிபுரிந்து வருகிறார்கள். நம்முடைய ஸ்டார்ட் அப் துறையும் கூட, விளையாட்டுப் பொருட்களின் உலகின் மீது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்தத் துறையில் பல சுவாரசியமான விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூரூவில், ஷூமி பொம்மைகள் என்ற பெயர் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப், சூழலுக்கு ஏற்புடைய பொம்மைகளின் மீது கவனம் செலுத்தி வருகிறது. குஜராத்தின் Arkidzoo–ஆர்க்கிட்ஜூ என்ற நிறுவனம், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் முன்னேறிய வடிவமான Augmented realityயை ஆதாரமாகக் கொண்ட மின்னட்டைகள், அதனை ஆதாரமாகக் கொண்ட கதைப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. புணேயின் நிறுவனமான ஃபன்வென்ஷன் லேர்னிங், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செயல்பாட்டுப் புதிர்கள் வாயிலாக அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகியவற்றின் மீது பிள்ளைகளுக்கு ஆர்வத்தை அதிகரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. விளையாட்டுப் பொருட்கள் உலகத்தில் இத்தகைய அருமையான செயல்களைப் புரிந்து வரும் அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார்ட் அப்புகளுக்கும் நான் பலப்பல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள், நாமனைவருமாக இணைந்து, பாரதநாட்டு விளையாட்டுப் பொருட்களை உலகெங்கிலும், மேலும் விரும்பத்தக்கவையாக ஆக்குவோம். இதோடு கூடவே, நான் காப்பாளர்களிடம் விடுக்கும் வேண்டுகோள், நீங்களும் இயன்றவரை அதிக அளவில் இந்திய விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், பொம்மைகளை வாங்குங்கள் என்பது தான்.
நண்பர்களே, வகுப்பறையாகட்டும், விளையாட்டு மைதானமாகட்டும், இன்று நமது இளைஞர்கள், அனைத்துத் துறைகளிலும் தேசத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாதம், பி.வி. சிந்து சிங்கப்பூர் ஓப்பன் போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். நீரஜ் சோப்ராவும் தனது மிகச் சிறப்பான வெளிப்பாட்டால், உலக தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறார். அயர்லாந்தின் பேரா பேட்மிண்டன் இண்டர்நேஷனல் – மாற்றுத் திறனாளிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டியிலும் கூட, நமது விளையாட்டு வீரர்கள் 11 பதக்கங்களை வென்று தேசத்திற்குப் பெருமிதம் சேர்த்திருக்கிறார்கள். ரோம் நகரில் நடைபெற்ற உலக கேடட் மல்யுத்தப் போட்டியிலும் பாரத நாட்டு விளையாட்டு வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். நமது தடகளச் சாதனையாளர்கள், இந்த கிரேக்க ரோமானியப் போட்டியில் அபாரமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் 32 ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்கள். விளையாட்டு வீரர்களைப் பொறுத்த மட்டிலே, இந்த மாதம் முழுவதுமே செயல்பாடுகள் நிறைந்த சுறுசுறுப்பான மாதமாக இருந்திருக்கிறது. சென்னையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் புரவலர்களாக இருப்பது கூட, பாரத நாட்டிற்கு மிகப்பெரிய கௌரவம் அளிக்கக்கூடிய விஷயம். ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று இந்தப் போட்டி தொடங்கியது, இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதே நாளன்று, இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுக்களும் தொடங்கின. உற்சாகம் கொப்பளிக்கும் இந்திய இளைஞர் அணி, தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நான் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், தடகள வீரர்களுக்கும் நாட்டுமக்கள் தரப்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீஃபா 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியையும் பாரதம் நடத்த இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் மாத வாக்கில் நடைபெறும், இது விளையாட்டுக்கள் மீது பெண் குழந்தைகளின் உற்சாகத்தை அதிகரிக்கும்.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக நாடெங்கிலும் 10ஆவது, 12ஆவது வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடினமாக உழைத்து, ஈடுபாட்டோடு வெற்றியை அடைந்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். பெருந்தொற்றுக் காலமான, கடந்த ஈராண்டுகள், மிகவும் சவால் நிறைந்தவையாக இருந்தன. இந்தச் சூழ்நிலைகளிலும் நமது இளைஞர்கள் மிகுந்த நெஞ்சுரத்தையும், சுயகட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுதல்களுக்கு உரியது. அனைவரின் பொன்னான எதிர்காலத்திற்கான என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இன்று நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் தொடர்பாக, தேசத்தின் பயணத்தோடு நமது விவாதத்தைத் தொடங்கினோம். அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, நமது அடுத்த 25 ஆண்டுகளின் பயணம் தொடங்கியிருக்கும். நமது இல்லம், நம்மைச் சேர்ந்தோர் இல்லங்களில், நமக்கு மிகவும் பிரியமான மூவண்ணக் கொடி பறக்கட்டும், இதன் பொருட்டு நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் அனைவரும் இந்த முறை, சுதந்திரத் திருநாளை எப்படிக் கொண்டாடினீர்கள், சிறப்பாக என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதை எல்லாம் கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த முறை நாம் நமது இந்த அமுதகாலத்தின் பல்வேறு வண்ணங்கள் பற்றி மீண்டும் உரையாடி மகிழ்வோம், விடை தாருங்கள் நண்பர்களே, பலப்பல நன்றிகள்.
* * * * * * * * * * * *
#MannKiBaat has begun. Hear LIVE! https://t.co/lUVmrLJfxS
— PMO India (@PMOIndia) July 31, 2022
इस बार ‘मन की बात’ बहुत खास है।
— PMO India (@PMOIndia) July 31, 2022
इसका कारण है, इस बार का स्वतंत्रता दिवस, जब भारत अपनी आज़ादी के 75 वर्ष पूरे करेगा।
हम सभी बहुत अद्भुत और ऐतिहासिक पल के गवाह बनने जा रहे हैं।
ईश्वर ने ये हमें बहुत बड़ा सौभाग्य दिया है: PM during #MannKiBaat https://t.co/ByoPHD02AO
Tributes to Shaheed Udham Singh Ji and other greats who sacrificed their all for the country. #MannKiBaat pic.twitter.com/Dt0M8m77ab
— PMO India (@PMOIndia) July 31, 2022
Glad that the Azadi Ka Amrit Mahotsav is taking the form of a mass movement.
— PMO India (@PMOIndia) July 31, 2022
People from all walks of life and from every section of the society are participating in different programmes across the country. #MannKiBaat pic.twitter.com/eJWpHBXi5P
An interesting endeavour has been undertaken by @RailMinIndia named 'Azadi Ki Railgadi Aur Railway Station.'
— PMO India (@PMOIndia) July 31, 2022
The objective of this effort is to make people know the role of Indian Railways in the freedom movement. #MannKiBaat pic.twitter.com/fs3LYmbuiG
Under the Azadi Ka Amrit Mahotsav, from the 13th to the 15th of August, a special movement – 'Har Ghar Tiranga' is being organised.
— PMO India (@PMOIndia) July 31, 2022
Let us further this movement by hoisting the National Flag at our homes. #MannKiBaat pic.twitter.com/NikI0j7C6Z
There is a growing interest in Ayurveda and Indian medicine around the world.
— PMO India (@PMOIndia) July 31, 2022
AYUSH exports have witnessed a record growth. #MannKiBaat pic.twitter.com/cGOcgYO5cu
Initiatives like National Beekeeping and Honey Mission are transforming the lives of our farmers by helping increase their income.
— PMO India (@PMOIndia) July 31, 2022
Here are some success stories... #MannKiBaat pic.twitter.com/aQzSYIaLay
Fairs have been of great cultural importance in our country.
— PMO India (@PMOIndia) July 31, 2022
PM @narendramodi refers to various fairs organised across the country... #MannKiBaat pic.twitter.com/DQz7saQDK9
Fairs strengthen the spirit of 'Ek Bharat, Shreshtha Bharat'. #MannKiBaat pic.twitter.com/K9MqXeUCWL
— PMO India (@PMOIndia) July 31, 2022
India is becoming a powerhouse in toys exports. #MannKiBaat pic.twitter.com/O6wPyOmRSX
— PMO India (@PMOIndia) July 31, 2022
The month of July has been full of action, when it comes to sports.
— PMO India (@PMOIndia) July 31, 2022
Indian players have performed exceptionally well on world stage. #MannKiBaat pic.twitter.com/v3flQQHob1
Few days ago the results of class 10th and 12th have been declared across the country.
— PMO India (@PMOIndia) July 31, 2022
I congratulate all those students who have achieved success through their hard work and dedication: PM @narendramodi during #MannKiBaat pic.twitter.com/WDkNdRm7mP