Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் புகழ்மிக்க விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் ஓராண்டுகால 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார்

ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் புகழ்மிக்க விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் ஓராண்டுகால 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார்


ஆந்திரப் பிரதேசத்தின் பீமாவரத்தில் புகழ்மிக்க விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் ஓராண்டுகால 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். முதலமைச்சர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், வளமான பாரம்பரியத்தை கொண்ட மகத்தான ஆந்திரப்பிரதேச மண்ணுக்கு  வணக்கம் செலுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை கவுரவமாக கருதுகிறேன் என்று கூறினார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழா போன்ற முக்கியமான நிகழ்வுகளோடு, அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது ஆண்டுவிழாவும் ராம்ப்பா கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாவும் ஒருங்கிணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  “மகத்தான, மான்யம் வீருடு” அல்லூரி சீதாராம ராஜூவின் நினைவுக்கு தலைவணங்கிய பிரதமர், ஒட்டுமொத்த மக்களின் சார்பாக அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.  மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது குறித்து மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தினார். ஆந்திரப்பிரதேச பாரம்பரியத்திலிருந்து உருவான  ‘ஆதிவாசி பாரம்பரியத்திற்கும்’, விடுதலைப் போராட்டத்திற்கும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.

அல்லூரி சீதாராம ராஜூ அவர்களின் 125-வது ஆண்டுவிழாவும், ராம்ப்பா கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாவும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். அவரது பிறந்த ஊரான பாண்டுரங்கியின் புனர் நிர்மானம், சிந்தாப்பள்ளி காவல்நிலையம் புதுப்பித்தல், மொகாலுவில் அல்லூரி தியான மந்திர் கட்டுமானம் ஆகிய பணிகள் அமிர்தப் பெருவிழா உணர்வின் அடையாளங்கள் என்று அவர் கூறினார்.  இன்றைய நிகழ்ச்சி நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் சாகச செயல்கள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ள உறுதியேற்பதை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

விடுதலைப் போராட்டம் என்பது ஒரு சில ஆண்டுகளின், சில பகுதிகளின் அல்லது ஒரு சிலரின் வரலாறு மட்டுமல்ல என்று பிரதமர் கூறினார். இந்த வரலாறு தியாகத்தின் வரலாறு, இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கின் உறுதி மற்றும் தியாகங்களின் வரலாறு ஆகும்.  “நமது பன்முகத்தன்மையின் பலம், கலாச்சாரம், ஒரு தேசம் என்ற முறையில் நமது ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக நமது விடுதலை இயக்க வரலாறு உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

அல்லூரி சீதாராம ராஜூ இந்திய கலாச்சாரத்தின், பழங்குடி மக்களின், வீரத்தின், சிந்தனையின், மாண்புகளின் அடையாளமாக இருக்கிறார் என்று குறிப்பிட்ட பிரதமர், சீதாராம ராஜூவின் பிறப்பு முதல், அவரது தியாகம் வரை அவரின் வாழ்க்கைப் பயணம் நம் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகும்.  பழங்குடி சமூகத்தின் உரிமைகள், அவர்களின் சுக துக்கங்கள், நாட்டின் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். “ஒற்றுமையின் ஒற்றை இழையில் நாட்டை ஒருங்கிணைக்கும் ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ என்ற உணர்வை அல்லூரி சீதாராம ராஜூ பிரதிநிதித்துவம் செய்கிறார்” என்று பிரதமர் தெரிவித்தார்.   

இந்தியாவின் ஆன்மீகம் அல்லூரி சீதாராம ராஜூவுக்கு கருணை மற்றும் இரக்க குணத்தையும் பழங்குடி சமூகத்திற்கான அடையாளம் மற்றும் சமத்துவ உணர்வையும், அறிவு மற்றும் துணிவையும் வழங்கியதாக பிரதமர் கூறினார். ராம்ப்பா கிளர்ச்சியில் இளைஞர் அல்லூரி சீதாராம ராஜூவையும் உயிர்த்தியாகம் செய்த மற்றவர்களையும் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இவர்களின் தியாகம் இன்றும்கூட ஒட்டுமொத்த தேசத்திற்கான ஆதார சக்தியாகவும், உந்துதலாகவும் இருப்பதாகக் கூறினார். “நாட்டின் இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு முன்வர இளைஞர்களுக்கு இன்றைய காலம் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது” என்று பிரதமர் தெரிவித்தார். “புதிய இந்தியாவில் இன்று புதிய வாய்ப்புகள், துறைகள், சிந்தனை நடைமுறைகள், சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.  இந்த சாத்தியக்கூறுகளை    மெய்ப்பிக்கும் பொறுப்பை நமது இளைஞர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திரப்பிரதேசம் என்பது நாயகர்களின், தேசபக்தர்களின் பூமியாகும்.  நாட்டின் கொடியை உருவாக்கிய பிங்காலி வெங்கையா போன்ற விடுதலைப் போராட்ட நாயகர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்.  கானகந்தி, ஹனுமந்து, கண்டுகுரி வீரேசலிங்கம் பந்துலு, பொட்டி ஸ்ரீராமுலு போன்ற நாயகர்களின் பூமியாகும் இது.  அமிர்த காலத்தில் இந்த வீரர்களின் கனவுகளை நனவாக்குவதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நமது புதிய இந்தியா விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின் இந்தியாவாக இருக்க வேண்டும். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ஓர் இந்தியா. கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் பழங்குடி சமூகத்தினரின் நலனுக்கு அரசு ஓய்வின்றி பாடுபட்டிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சுதந்திரத்திற்குப்பின், முதன்முறையாக நாட்டின் பழங்குடி மக்களின் பெருமையையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்த பழங்குடியின அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டுள்ளன.  ஆந்திரப்பிரதேசத்தின் லம்பாசிங்கியில் “அல்லூரி சீதாராம ராஜூ நினைவு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம்” அமைக்கப்படவுள்ளது. அதேபோல் நவம்பர் 15 அன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாள் தேசிய பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்நிய ஆட்சியாளர்கள் பழங்குடி சமூகத்தினர் மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தார்கள்.  அவர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சி செய்தார்கள் என்று பிரதமர் கூறினார்.

திறன் இந்தியா இயக்கத்தின் மூலம் பழங்குடியினரின் கலையும், திறன்களும் புதிய அடையாளத்தை பெற்று வருகின்றன என்று பிரதமர் கூறினார்.  ‘உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிப்போம்’ என்பது பழங்குடியினரின் கலைத் திறன்களை வருவாய்க்கான வழியாக மாற்றியிருக்கிறது.  மூங்கில் போன்ற வன மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து பழங்குடி மக்களை தடுத்து நிறுத்திய தசாப்தங்கள் பழமையான சட்டங்களை நாங்கள் மாற்றினோம்.  வன உற்பத்தி பொருள்கள் மீது அவர்களுக்கு உரிமைகளை வழங்கினோம் என்று அவர் கூறினார். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கொள்முதல் செய்யப்படும் வன உற்பத்தி பொருட்களின் எண்ணிக்கை 12-லிருந்து 90-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,000-க்கும் அதிகமான வனமக்கள் நல மையம், 50,000-க்கும் அதிகமான வனமக்கள் சுயஉதவிக் குழுக்கள் ஆகியவை பழங்குடியினரின் பொருட்கள் மற்றும் கலையை நவீன வாய்ப்புகளுடன் இணைக்கின்றன.  முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் பழங்குடியின மாவட்டங்களுக்கு கல்விப்புலத்தில் மிகப்பெரும் பயனை அளிக்கும். 750-க்கும் அதிகமான ஏகலைவ மாதிரி பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின்கீழ் தாய்மொழியில் கல்வி ஊக்கப்படுத்தப்படுகிறது.

பிரிட்டிஷாருடன் போராட்டம் நடத்திய “மான்யம் வீருடு” அல்லூரி சீதாராம ராஜூ, உன்னால் முடிந்தால் என்னை தடுத்து நிறுத்து என்று கூறியதாக பிரதமர் தெரிவித்தார்.  நாடு இன்று இத்தகைய சவால்களை தம்முன் கொண்டுள்ளது. அதே துணிவோடு   ஒற்றுமை மற்றும் பலத்துடன் ஒவ்வொரு சவாலிடமும் 130 கோடி இந்தியர்கள் சொல்கிறார்கள், ‘உனக்கு துணிவிருந்தால், எங்களை தடுத்துநிறுத்து’ என்று கூறியதுடன், பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் பின்னணி

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவும், அவர்களை பற்றி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒருபகுதியாக புகழ்பெற்ற  விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டுகால விழாவை பீமாவரத்தில் பிரதமர் தொடங்கிவைத்தார். 1897 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று பிறந்த அல்லூரி சீதாராம ராஜூ, கிழக்குத் தொடர்ச்சி மலை பிராந்தியத்தின் பழங்குடி சமூகத்தினரின் நலன்களை பாதுகாக்க பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்காக நினைவுகூரப்படுகிறார். 1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராம்ப்பா கிளர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார். உள்ளூர் மக்களால் அவர் “மான்யம் வீருடு” (வனங்களின் நாயகன்) என்று குறிப்பிடப்படுகிறார். ஓராண்டு கால கொண்டாட்டங்களின் பகுதியாக பல்வேறு முயற்சிகளுக்கு அரசு திட்டமிட்டுள்ளது. விஜயநகரம் மாவட்டத்தில் அல்லூரி சீதாராம ராஜூ பிறந்த ஊரான பாண்டுரங்கியும் (ராம்ப்பா கிளர்ச்சியின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்) சிந்தாப்பள்ளி காவல்நிலையமும் (ராம்ப்பா கிளர்ச்சி தொடங்கிய போது தாக்கப்பட்ட காவல்நிலையம்) புனரமைக்கப்பட உள்ளன. மொகல்லூ என்ற இடத்தில் தியான முத்திரையுடன் இருக்கும் அல்லூரி சீதாராம ராஜூ சிலையுடன் அல்லூரி தியான ஆலயத்தை கட்டமைக்கவும், சுவரோவியங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உரையாடல்களை அறியும் முறையுடன் சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை சித்தரிக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

***************