Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜூன் 30-ஆம் தேதி ‘தொழில்முனைவு இந்தியா’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு


புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ‘தொழில்முனைவு இந்தியா’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காலை 10:30 மணிக்குக் கலந்து கொள்ளவிருக்கிறார். ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்’ திட்டம், ‘முதல் முறை ஏற்றுமதி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ உள்ளிட்டவற்றையும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில் புதிய அம்சங்களையும் நிகழ்ச்சியின்போது பிரதமர் தொடங்கி வைப்பார். மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டப் பயனாளிகளுக்கான உதவிகளை காணொலி வாயிலாக பிரதமர் வழங்குவார்; எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2022 இன் முடிவுகளை அறிவிப்பார்; 2022 ஆம் ஆண்டுக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேசிய விருதுகளை வழங்குவார்; தற்சார்பு இந்தியா நிதியில் 75 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்னணு பங்கு சான்றிதழ்களை வழங்குவார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, பதவியேற்ற முதல் நாளிலிருந்து அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை ‘தொழில்முனைவு இந்தியா’ பிரதிபலிக்கும்.  நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைய உதவியாக உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறைக்கு தேவையானவற்றையும், உரிய ஆதரவையும் அளிப்பதற்காக முத்ரா திட்டம், அவசரகால கடன் உறுதித் திட்டம், பாரம்பரிய தொழில்களை புதுப்பிப்பதற்கான நிதி திட்டம் போன்ற ஏராளமான திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

ரூ. 6000 கோடி செலவிலான ‘குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கவிருக்கிறார். இது போன்ற நிறுவனங்களுக்காக தற்போது இயங்கி வரும் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் மாநிலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயலாக்கத் திறன் மற்றும் அளவை அதிகரிப்பது இதன் நோக்கமாகும். முதல் முறை ஏற்றுமதி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் திறன் மேம்பாட்டு திட்டம், சர்வதேச சந்தையில் உலகளாவிய தரத்தில் பொருட்களையும், சேவைகளையும் வழங்க இந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும்.

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில் புதிய அம்சங்களை பிரதமர் அறிமுகப்படுத்துவார். உற்பத்தித் துறைக்கான அதிகபட்ச திட்ட செலவு ரூ. 25 லட்சத்திலிருந்து 50 லட்சமாகவும், சேவை துறையில் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ 20 லட்சமாகவும் உயர்த்துவது, அதிக மானியங்களைப் பெறுவதற்கு, முன்னேற விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் திருநங்கைகளை சிறப்பு பிரிவுகளில் சேர்ப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

***************