Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனேயின் தேஹுவில் ஜெகத்குரு ஸ்ரீசந்த் துக்காராம் மகராஜ் மலைக்கோயிலை பிரதமர் தொடங்கி வைத்தார்

புனேயின் தேஹுவில் ஜெகத்குரு ஸ்ரீசந்த் துக்காராம் மகராஜ் மலைக்கோயிலை பிரதமர் தொடங்கி வைத்தார்


புனேயின் தேஹுவில் ஜெகத்குரு ஸ்ரீசந்த் துக்காராம் மகராஜ் மலைக்கோயிலை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

     அங்கு திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், புண்ணிய பூமியான தேஹுவில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார்.  நமது வேதங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், துறவிகளின் சத்சங்கம் மனிதப்பிறப்பில் அரிய சிறப்புரிமையாகும் என்றார். துறவிகளின் பெருமையை உணர்ந்தால், கடவுளை தானாக உணர முடியும். “இந்தப் புனித புண்ணிய பூமியான தேஹுவுக்கு இன்று வந்தபோது அதே உணர்வை நான் பெற்றேன்” என்று அவர் கூறினார். “தேஹு மலைக்கோவில் பக்தியின் ஆற்றல் மையமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் கலாச்சார எதிர்காலத்தின் வழியாகும். கோவிலின் அறக்கட்டளைக்கும் இந்த ஆலயத்தை கட்டமைத்த அனைத்து பக்தர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறினார்.

     சில மாதங்களுக்கு முன்பு பாலிக்கி வழியில் இரண்டு நான்குவழி தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியதை அவர் நினைவுகூர்ந்தார். ஸ்ரீசந்த் தியானேஸ்வரர் மகராஜ் பல்க்கிமார்க் 5 கட்டங்களாக நிறைவடையும் என்றும், பக்த துக்காராம் பல்க்கிமார்க் 3 கட்டங்களாக நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.  இந்த கட்டங்களில் 350 கிலோமீட்டருக்கும் அதிகமான நெடுஞ்சாலை ரூ.11,000 கோடி செலவில் அமைக்கப்படும்.

“உலகில் வாழ்ந்து வரும் மிகப்பழமையான நாகரீகங்களில் ஒன்றாக இருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகும். “இதற்கான பெருமை யாரையாவது சாரவேண்டுமானால் அது   துறவிகள் மற்றும் முனிவர்களின் பாரம்பரியத்துக்கு சொந்தமானதாகும்” என்று அவர் தெரிவித்தார். இந்தியா துறவிகளின் பூமிக்காக இருப்பதே இந்தியாவின் நிலைத்தன்மைக்கு காரணமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  ஒவ்வொரு யுகத்திலும் சில சிறந்த ஆன்மா நமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் வழியை காட்டி வந்தன. இன்று நாடு கபீர்தாசரின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.  ஸ்ரீதியானேஸ்வரர் மகராஜ், சந்த் நிவ்ருட்டிநாத், சந்த் சோபன்தேவ், ஆதிசக்தி முக்தா பாய்ஜி ஆகிய துறவிகளின் பிறந்தநாளையும் அவர் குறிப்பிட்டார்.

பக்த துக்காராமின் அன்பு, கருணை, சேவை ஆகியவை அவரது பாடல்களின் வடிவில் இன்னும் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பாடல்கள் பல தலைமுறையினரை ஊக்குவித்துள்ளது. அவை காலாகாலத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது என்று அவர் விளக்கினார்.  இன்றைக்கும் நாடு தனது கலாச்சார மாண்புகளுடன் முன்னேறி செல்வதற்கு துக்காராமின் பாடல்கள் நமக்கு சக்தியை அளிக்கின்றன என்று பிரதமர் கூறினார். துறவிகளின் சிறந்த பாரம்பரியத்துக்கு பிரதமர் மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்தார். மனிதர்களுக்கு இடையிலான பாகுபாடுகளை எதிர்க்கும் போதைகனைகளை பிரதமர் விளக்கினார். இந்த போதைகனைகள் ஆன்மீக பக்தியை ஏற்படுத்துவதால், இது நாட்டின் பக்திக்கும் சமுதாயத்துக்கும் ஏற்றதாக உள்ளது. இந்த செய்தி, வர்க்காரி பக்தர்களின் வருடாந்திர பந்தர்பூர் யாத்திரைக்கானது என்று அவர் கூறினார்.  இந்த சிறந்த பாரம்பரியங்களால் உந்தப்பட்டதுதான் அனைவருடன், அனவரின் நலனுக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் என்ற மந்திரமாகும். “தலித், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தொழிலாளர்களின் நலன்களே இன்று நாட்டின் முதல் முன்னுரிமையாகும்” என்று பிரதமர் கூறினார்.      

சத்ரபதி சிவாஜி மகராஜ் போன்ற தேசிய வீரர்களின் வாழ்க்கையில் பக்த துக்காராம் போன்ற துறவிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்று பிரதமர் கூறினார்.  சுதந்திரப் போராட்டத்தின்போது வீரசாவர்கர் தண்டிக்கப்பட்ட போது, கைவிலங்கை இசைக்கருவி போல பயன்படுத்தி, அவர்  துக்காராமின் பாடல்களை பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என பிரதமர் நினைவுகூர்ந்தார்.  பல்வேறு சமயங்களில் பக்த துக்காராம் நாட்டிற்கு சக்தியையும், எழுச்சியையும் புகுத்தியுள்ளார் எனக்கூறிய அவர், பந்தர்பூர், ஜெகன்னாத், மதுராவில் பிரிஜ் பரிக்ரமா, காசியில் பஞ்ச் கோசி பரிக்ரமா, சார் தாம் அல்லது அமர்நாத் யாத்திரை போன்ற யாத்திரைகள் நாட்டின் வேற்றுமையை ஒன்றுபடுத்தி, ஒரேபாரதம் – உன்னத பாரதம் என்ற எழுச்சியை உருவாக்குவதாகத் தெரிவித்தார்.

நமது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த நமது பழைய அடையாளம் மற்றும் பாரம்பரியங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது கடமையாகும் என பிரதமர் வலியுறுத்தினார்.  ஆகவே, “இன்று “நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு உகந்ததாக மாறியுள்ள நிலையில், வளர்ச்சியும் பாரம்பரியமும் ஒன்று சேர்ந்து முன்னேறுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். பல்க்கி யாத்திரையின் நவீனமயமாக்கல், சார் தாம் யாத்திரைக்கான புதிய நெடுஞ்சாலைகள், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில், காசி விஸ்வநாதர் ஆலய புனரமைப்பு, சோம்நாத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக அவர் தெரிவித்தார். பிரசாத் திட்டத்தின்கீழ், புனித யாத்திரை தலங்கள் மேம்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். ராமாயண சுற்றுலா, பஞ்ச தீர்த்த பாபா சாஹேப் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.  அனைவரது முயற்சிகளும் சரியான திசையில் ஒன்று சேர்ந்தால், எத்தகைய தீவிரமான சிக்கல்களுக்கும் தீர்வுகாண முடியும் என்று பிரதமர் கூறினார்.  சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டில் நாடு நலத்திட்டங்களை 100 சதவீதம் முன்னேற்ற உறுதிபூண்டுள்ளது என்றும் இந்தத் திட்டங்கள் மூலம் ஏழைகள் அடிப்படை வசதிகளை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரது பங்களிப்பும் அவசியம் எனக்குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் தூய்மையை பராமரிக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.  இத்தகைய தேசிய உறுதிமொழிகள், ஆன்மீக உறுதிமொழிகளின் பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  இயற்கை வேளாண்மை, யோகாவை பிரபலப்படுத்துதல் ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார். 

பக்த துக்காராம் வர்க்காரி துறவி மற்றும் கவிஞராவார். அவரது அபங்கா பக்தி பாடல்கள் மிகவும் பிரபலமானவை.  கீர்த்தனைகள் என்ற ஆன்மீக பாடல்கள் வழியாக சமுதாய வழிபாட்டை அவர் மேற்கொண்டார்.  அவர் தேஹுவில் வாழ்ந்தார்.  அவரது மறைவுக்குப்பின் மலைக்கோவில் கட்டப்பட்டது.  ஆனால் அது ஒரு கோவில் வடிவில் முறையாக கட்டப்படவில்லை. 36 கோபுரங்களை கொண்ட கல் கட்டடமாக கட்டப்பட்டுள்ள அந்தக் கோவிலில் பக்த துக்காராமின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    ***************