சர்வதேச ரோட்டரி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். ரோட்டரி சங்க உறுப்பினர்களை ‘வெற்றி மற்றும் சேவையின் உண்மையான கலவை’ என்று குறிப்பிட்ட பிரதமர், “ரோட்டரி சங்கத்தின் இதுபோன்ற ஒவ்வொரு கூட்டமும் சிறிய அளவிலான சர்வதேச மன்றத்தைப் போல் உள்ளது. இவற்றில் பன்முகத்தன்மையும், துடிப்பும் உள்ளன”, என்று கூறினார்.
‘சுயநலத்ததைவிட மேலானது, சேவை’ மற்றும் ‘சிறந்த சேவை அளிப்பவர், அதிக லாபங்களைப் பெறுவார்’ ஆகிய ரோட்டரி சங்கத்தின் இரண்டு பொன்மொழிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனிற்கு இவை மிக முக்கிய கோட்பாடுகளாகத் திகழ்வதாகவும், நமது துறவிகள் மற்றும் முனிவர்களின் போதனைகளை இவை எதிரொலிப்பதாகவும் குறிப்பிட்டார். “பிறருக்காக வாழ்வதைப் பற்றி தங்களது செயலில் காட்டிய புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பிறப்பிடம், நம் நாடு”, என்றார் அவர்.
சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டிய பிரதமர், “நாம் அனைவரும் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மற்றும் இணைக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். அதனால்தான் நமது பூமியை மேலும் வளமானதாகவும், நிலையானதாகவும் மாற்ற தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுகள் இணைந்து பணியாற்றுவது முக்கியம்”, என்று தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா முன்னிலை வகிப்பதாக அவர் கூறினார். “நிலையான வளர்ச்சி என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம். இயற்கையுடன் இணைந்த வாழ்வு என்ற நமது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தால் உந்தப்பட்டு, நமது பூமியை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்றும் முயற்சியில் 1.4 பில்லியன் இந்தியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்”, என்று பிரதமர் தெரிவித்தார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, ‘ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு தொகுப்பு’, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற லைஃப் இயக்கம் உள்ளிட்ட இந்தியாவின் முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார். 2070-ஆம் ஆண்டிற்குள் கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாததாக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலகநாடுகள் பாராட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மனித சமூகத்தில் ஏழில் ஒரு பகுதியினர் வாழும் நாடு இந்தியா என்பதால், இந்தியாவின் எந்த ஒரு சாதனையும் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். கொவிட்-19 தடுப்பூசியின் பயணம் மற்றும் காசநோயை முற்றிலும் ஒழிக்க 2030-ஆம் ஆண்டை சர்வதேச நாடுகள் இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே 2025-ஆம் ஆண்டிற்குள் அதை ஒழிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் போன்றவற்றை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.
இதுபோன்ற முயற்சிகளில் அடிமட்ட அளவில் ஆதரவளிக்குமாறு ரோட்டரி சங்கத்தினருக்கு திரு மோடி அழைப்புவிடுத்தார். அதே போல, உலகம் முழுவதும் யோகா தினத்தை மிகப்பெரிய அளவில் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
***************
(Release ID: 1831391)
My remarks at Rotary International Convention 2022 in Houston. https://t.co/HAmyHK8ywA
— Narendra Modi (@narendramodi) June 5, 2022