Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரஷ்யா இந்தியாவின் முக்கியமான நட்பு நாடு : பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி


பிரதம மந்திரி அவர்களே,   ரஷ்யப் பயணத்துக்கு முன்பாக உங்களைச் சந்திக்க வாய்ப்பளித்தமைக்கு எங்கள் நன்றிகள்.   பிரதமரான பிறகு உங்களின் முதல் ரஷ்யப் பயணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால், இதற்கு முன்னதாகவே நீங்கள் ரஷ்யா சென்றுள்ளீர்கள்.    தற்போது உங்கள் உணர்வுகள் என்ன ?   இந்தப் பயணத்தின் மூலமாக என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் ?

முதலில் ரஷ்ய மக்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    ஏனெனில், ரஷ்யா இந்தியாவின் நீண்ட நாள் நட்பு நாடு.   ரஷ்ய மக்களும் இந்தியாவோடு நெருக்கமான நட்பு பாராட்டி வந்துள்ளனர். அரசியலைத் தவிர்த்து, ரஷ்ய மக்கள், இந்திய பாரம்பரியத்திலும், கலாசாரத்திலும் மிகுந்த ஆர்வத்தைக் காட்டியுள்ளனர்.   இது இந்திய ரஷ்ய உறவை மேலும் வலுவாக்குகிறது.    அலுவல் ரீதியாக முதன் முறை இப்போதுதான் ரஷ்யா செல்கிறேன்.   ஆனால், அதிபர் புதின் அவர்களை அடிக்கடி சந்தித்துள்ளேன்.   ஒரு வகையில் சொல்லப்போனால், ரஷ்ய அதிபர் புதின் அவர்களின் அரசியல் வாழ்வும், எனது அரசியல் வாழ்வும் ஏறக்குறைய ஒரே பாதையில் பயணித்துள்ளன.   அவர் 2000ம் ஆண்டில் பதவியேற்றார்.   நான் 2001ம் ஆண்டில் பதவியேற்றேன்.   2001ம் ஆண்டில், பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்களோடு, அவர் குழுவில் ஒருவராக, ஒரு முதலமைச்சராக நான் ரஷ்யா சென்றுள்ளேன். அதுதான் எனது முதல் சந்திப்பு.     நான் ரஷ்யா செல்கையில், ரஷ்யப் பயணத்தைத் தாமதித்து விட்டேனோ என்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது.   இது ஒரு விதமான தயக்கத்தை ஏற்படுத்துகிறது.   ஆனால் ஒரு நண்பரின் வீட்டுக்குச் செல்வது போன்ற உற்சாகத்தை இது அளிக்கிறது.   ஒரு நண்பர் வீட்டுக்குச் செல்கையில் ஏற்படும் நட்புணர்வும், நெகிழ்ச்சியும் ஏற்படுவதை என்னால் உணர முடிகிறது.    இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நட்புணர்வு, ஆகாயம், பூமி மற்றும் நீர் வழியில் இணைந்துள்ளது.    எங்களது ராணுவ சக்தி,  அதன் திறன் இவை அனைத்திலும் ரஷ்யா பிணைந்துள்ளது.    இது போலவே, உலக அரங்கிலும், நெருக்கடியான நேரங்களிலும் ஒரு நட்பு சக்தியின் தேவை ஏற்படுகையில், ரஷ்யா எப்போதும் உடன் நின்றுள்ளது.    ரஷ்யா என்ன முடிவு எடுக்கும் என்று நாங்கள் காத்திருப்பதற்கான அவசியமே ஏற்பட்டதில்லை.  ஒரு காரியத்தைச் செய்கையில் ரஷ்யா எங்களோடு துணை நிற்கும் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உண்டு.    இது போலவே, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான ஓர் ஆரோக்கியமான நட்பு சூழல் நிலவுகிறது.  ஒரு வகையில் ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பு தந்திரோபயமான ஒரு நிலையில் அமைந்துள்ளது.

0.34592100-1450848819-indian-pm-narendra-modi-russia-remains-our-principal-partner [ PM India 440KB ]

பிரதமர் அவர்களே, இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புணர்வு குறித்து விளக்கமாக கூறினீர்கள்.    பல ஆண்டு காலமாக வரலாற்றுப் பூர்வமான நட்பு நம்மிடையே நிலவுகிறது.    இன்றைய காலகட்டத்தில் இந்த உறவின் பரிமாணங்கள் என்ன ?     அதிபர் புதினை பல முறை சந்தித்துள்ளீர்கள்  உங்கள் இருவரிடையே நிலவும் நட்புணர்வு குறித்து கூறுங்கள்.

என்னை வரவேற்கையில்,  ரஷ்யா தில்லியை விட மிகவும் குளிராக இருக்கும் நேரத்தில் வருகிறீர்கள்.  அதனால் அதற்கேற்றாற் போன்ற உடையை எடுத்து வாருங்கள் என்று கூறினீர்கள்.    என்னுடைய உடனடியான பதில் என்னவென்றால், ரஷ்ய மக்களிடம் இதமான அன்பு உள்ளது.   இந்தக் கடும் குளிரிலும் அவர்களின் இதமான அன்பு தேவையான வெப்பத்தை அளிக்கும்.  இதுதான் நம்மிடையே உள்ள உறவு என்று கூறினேன்.

ரஷ்ய  அதிபரோடு எனக்கு நல்ல அறிமுகம் உண்டு என்பது உண்மையே.    உலகம் அவரை ஒரு சக்திவாய்ந்த தலைவராகப் பார்க்கிறது.    தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடியவர்.   இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், அவருக்கு உறவுகளை எப்படிப் பேணுவது என்று நன்றாகத் தெரியும்.   உறவுகளைப் பேணுவதற்காக தேவையான தியாகங்களை செய்யக் கூடியவர் அவர். இது ஒரு அரிதான குணம்.    இது போன்ற தியாக உள்ளத்தோடு உறவுகளைப் பேணுவதே அவரது சிறப்பான தகுதியாகும்.  இத்தகைய சூழலில் ஒரு உறவுக்கு தேவையான நம்பிக்கை உடனடியாக உதயமாகிறது.     எந்த நாட்டுடனும், எந்த தலைவருடனும் இத்தகைய உறவைப் பேண முடியும்.    அதிபர் புதினோடு எனக்கு உள்ள உறவு இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டது.   மேலும் இந்த உறவில் வெளிப்படைத்தன்மை உள்ளது.    ஒரு சிலர் யோசிப்பது ஒன்றாகவும், செயல்படுவது வேறாகவும் இருப்பது உண்டு.     ஆனால் அதிபர் புதினோடு இத்தகைய உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை.    நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் இது குறித்து அலட்டிக் கொள்வது இல்லை.    ஒற்றுமை உணர்வை நட்பாக பகிரக் கூடியவர் அவர்.   கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யாவை சிறப்பாக வழிநடத்தி உள்ளார்.   ரஷ்யா சந்தித்த கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து ரஷ்யாவை மீட்டுள்ளார்.   சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவுக்கு சிறப்பான தலைமையை வழங்கியுள்ளார்.  உலகில் எந்த இடத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் ரஷ்யா புதிய யோசனைகளோடு அதற்கான தீர்வுகளை கூறி வந்துள்ளது.    இவை அனைத்துக்கும் காரணம் அதிபர் புதின் மட்டுமே.   இந்தியா ரஷ்யாவை எப்போதும் ஒரு நண்பனாகவே பார்க்கிறது.   ஆனால் அதிபர் பூட்டின் அவர்களோ, இந்த உறவுக்கு புதிய சக்தியையும் புதிய உற்சாகத்தையும் அளித்துள்ளார்.  அதனால்தான் நான் அவரை நண்பனாகப் பார்க்கிறேன்.  

இந்திய ரஷ்ய உறவு நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது.    இந்த உறவு எவ்விதமான போர் அல்லது சிக்கல்கள் காரணமாக தொய்வடைந்தது இல்லை.   இரு நாட்டு உறவின் பரிமாணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

நம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு வரலாற்று ரீதியாக வேர்களைக் கொண்டது என்பது உண்மையே.  ரஷ்ய வணிகர் அஃபனாசி நிக்கிதின் இந்தியாவுக்கு 1469ம் ஆண்டு வருகை தந்துள்ளார்.   குஜராத்திலிருந்து இந்திய வணிகர்கள் 1615ல் அஸ்ட்ராகானுக்கு வருகை தந்து இந்தியாவோடு வணிக உறவை ஏற்படுத்தியுள்ளனர்.  ஜார் அலெக்சேய் மிக்கைலோவிச் 1646ல் இந்திய மன்னர் ஷாஜஹானோடு அரசியல் ரீதியான உறவுகளை ஏற்படுத்தியுள்ளார்.  

இந்தியாவைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்ட முதல் ஐரோப்பிய நாடாக ரஷ்யா திகழ்கிறது.    பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளிடையே உறவும், இரு நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் இருந்து வந்துள்ளது.  ரஷ்யாவில் இந்திய திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.   ரஷ்ய இலக்கியத்துக்கு இந்தியாவில் பெரும் தாக்கம் உள்ளது.    இரு நாடுகளிடையேயான உறவு ஆழமானது.   நீண்ட வரலாறு கொண்டது.    தனிப்பட்ட முறையில், குஜராத் முதலமைச்சராக எனது முதல் ஒப்பந்தம் அஸ்ட்ராகானோடுதான்.   

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், இந்தியாவும் ரஷ்யாவும் நெருக்கமான உறவைப் பேணி வந்துள்ளன.  அந்த உறவு பரஸ்பர நம்பிக்கை, மற்றும் ஒற்றுமை உணர்வோடு அமைந்துள்ளது.    இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு ரஷ்யா பெரும் வகையில் உதவி புரிந்துள்ளது.  அதே போல விண்வெளி ஆராய்ச்சியிலும் ரஷ்யா பேருதவி புரிந்துள்ளது.   

பாதுகாப்புத் துறையில் உதவி தேவைப்பட்டபோது, வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில் ரஷ்யாவே முன்வந்து உதவி புரிந்துள்ளது. மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் ரஷ்யா அளித்த உதவிகளை இந்தியா ஒரு போதும் மறக்காது.    பனிப்போர் முடிந்து, சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உலகில் அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  ஆனால் இந்த நெருக்கடியாக காலகட்டத்திலும், நமது உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இருபதாண்டு கால உறவில் ரஷ்ய அதிபர் புதின் அவர்களும், இந்தியத் தலைவர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.  

நமது நட்புணர்வை இன்று பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.   பல பரிமாணங்கள் கொண்ட இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் தந்திரோபாயமான பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா கையெழுத்திட்ட முதல் நாடு ரஷ்யா. இரு நாடுகளின் உறவு மேலும் வளர்வதற்கான வாய்ப்புகளை நான் பார்க்கிறேன்.   அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் ரஷ்யாவின் பலம், இந்தியாவின் இளம் தலைமுறைக்கு அவசியமாக இருக்கிறது. இந்த வகையில் நம் இரு நாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.    

இரு நாடுகளிடையே உள்ள பரஸ்பர உறவுகள், ஒரு தந்திரோபாயமான கூட்டணியின் தன்மையை உருவாக்கியுள்ளது.   இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும், பல்வேறு துறைகளில் கூட்டுறவை மேற்கொண்டுள்ளன.   இவற்றில் எந்த துறையில் நமது உறவுகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன ?   இன்னும் எந்தத் துறையில் மேலும் ஒத்துழைப்பை மேற்கொள்ள முடியும் ?

மனித சக்தியின் அனைத்துத் தளங்களிலும் ரஷ்யாவுடனான உறவு உதவியுள்ளது.    அரசியல் ரீதியாக இரு நாடுகளிடையே நல்ல புரிதல் உளளது.   ராணுவத் துறை, அணுசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மிகச் சிறந்த கூட்டுறவு இரு நாடுகளிடையே உள்ளது.  இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் வழங்குவதில் ரஷ்யா முன்னணி நாடாக இருந்து வந்துள்ளது.  இனியும் அவ்வாறே இருக்கும்.   

எரிசக்தித் துறையில் நாம் மேலும் சிறப்பாகச் செயல்பட முடியும்.   ரஷ்யாவில் ஏராளமாக ஹைட்ரோகார்பன் உள்ளது.  இந்தியா ஹைட்ரோகார்பன்களை இறக்குமதி செய்யும் ஒரு முக்கிய நாடாக திகழ்கிறது.   இத்துறையில் கணிசமான முதலீடு செய்துள்ளோம்.   எங்களது ஹைட்ரோகார்பன் நிறுவனங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக ரஷ்ய சந்தையில் கொள்முதல் செய்து வருகின்றன.   சாக்காலினில் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது.  தற்போது, வான்கோர், டாஸ்யுர்யாக் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.   

அணுசக்தித் துறையில் இந்தியாவின் முதலீடு ரஷ்ய நாட்டிலிருந்துதான் தொடங்கியது.    எரிசக்தி பாதுகாப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிற கூறாகும்.   ரஷ்யா ஒரு முக்கிய கூட்டணி நாடாக இருந்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பைப் பொருத்தவரை அணுசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது.    இத்துறையில் சர்வதேச அளவில் ரஷ்யா முக்கிய கூட்டணி நாடாக விளங்குகிறது.  அணுசக்தியை அமைதிக்கான வழியில் பயன்படுத்துவதில் ரஷ்யா இந்தியாவின் முக்கிய பங்குதாரராக இருக்கிறது.      கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளதும், மேலும் விரிவாக்கம் அடைய உள்ளதற்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    அணுசக்தித் துறையில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு மேலும் வளரும் என்று நம்புகிறேன்.    கூடங்குளத்தை அடுத்து, ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட அணு உலைகளை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்வு செய்து வருகிறோம்.   அணுசக்தித் துறையைப் பொறுத்தவரை மிக மிக பாதுகாப்பான வகையில் வடிவமைக்கப்பட்ட மேலும் 12 அணு உலைகளை அமைக்க உள்ளோம்.    மிக உயர்ந்த அணுசக்தி தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் இரு நாடுகளும் சேர்ந்து அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்த உள்ளோம்.  

விண்வெளியைப் பொறுத்தவரை, இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டா ரஷ்யாவால் 1975ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது.   ரஷ்யா செலுத்திய விண்வெளி வாகனத்தில் 1984ம் ஆண்டு இந்திய வீரர்  ராகேஷ் சர்மா, ரவி மல்ஹோத்ரா பயணம் செய்தார்.   மருந்து தயாரிப்புத் துறையில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பு காரணமாக, உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.   

வணிகம் மற்றும் முதலீட்டை இன்னும் சிறப்பாக மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன.    இரு நாடுகளிடையே உள்ள வர்த்தக உறவு மேம்பட்டாலும், வளர்ந்து வந்தாலும் இன்னும் அதன் முழுத்திறனையும் அடையவில்லை. 2025ம் ஆண்டுக்குள் வணிகத்தை 30 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.   இரு நாடுகளின் முதலீடுகளை 15 பில்லியன் டாலர்கள் அளவுக்கு 2025ம் ஆண்டுக்குள் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.    

நம் இரு நாட்டுத் தொழில்களையும், அதன் தலைமை அதிகாரிகளையும் ஒன்றிணைப்பதற்காக, வர்த்தக ஒப்பந்தம் ஒன்றையும் யூரேஷியா பொருளாதார கூட்டமைப்பையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம்.   சர்வதேச வடக்கு மற்றும் தெற்கு பாதை வழியாக நேரடியான வணிகப் பாதையை ஏற்படுத்தி அதன் மூலம், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பொருட்களை எடுத்துச் செல்வதற்கான செலவையும் நேரத்தையும் குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.   ரஷ்யாவிலிருந்து வரும் வைரங்களை மூன்றாவது நாடுகள் மூலாக வரவழைப்பதற்குப் பதிலாக நேரடியாக வரவழைப்பதற்கு ஒரு வணிக வர்த்தக மையத்தை இந்தியாவில் அமைத்துள்ளோம்.  

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அரை நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.    இது குறித்த உங்களின் பார்வை என்ன ?

பல ஆண்டுகளாக ரஷ்யா இந்தியாவுக்கு ராணுவ ஒத்துழைப்பை நல்கி வருகிறது.  இந்தியாவின் பல்வேறு ராணுவ தளவாடங்கள் ரஷ்யா வழங்கியதே.  இந்தியாவுக்கு சர்வதேச உதவிகள் கிட்டாத காலகட்டத்தில் ரஷ்யா எங்களுக்கு உதவி புரிந்ததை நினைவு கூர்கிறோம்.    தற்போதைய சூழலில், குறிப்பாக இந்தியா சர்வதேச அளவில் தளவாடங்களை வாங்கும் சக்தி உள்ளபோது கூட, இத்துறையில் ரஷ்யாவே முன்னணி பங்குதாரராக இருந்து வருகிறது.    ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் சுகோய் போர் விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்த ஒத்துழைப்பை பறைசாற்றுகின்றன.     இவை இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் வெளிப்பாடு.  

நமது ராணுவ உறவுகள் ஒரு வியாபார உறவாக மட்டும் அமையாமல், கூட்டு ஆராய்ச்சி, வளர்ச்சி, பிரம்மோஸ் ஏவுகணைகள் போன்ற முன்னேறிய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சுகோய் 30 எம்கேஐ விமானங்கள் மற்றும் ‘ட்டி 90’ டாங்கிகள் ஆகியவையும் இந்தியாவில் ரஷ்ய ஒத்துழைப்போடு தயாரிக்கப்படுகின்றன.   மேலும் ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இரு நாட்டு ராணுவங்களும் கூட்டு பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.   ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்படி, ராணுவத் தளவாடங்களை இணைந்து தயாரிப்பதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.  

பிரதமர் அவர்களே, நீங்கள் இந்திய அரசை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வழிநடத்தி வருகிறீர்கள்.   பல விஷயங்களைச் செய்து முடித்துள்ளீர்கள்.  பல விஷயங்களை மேலும் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்.  பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.    இந்தியாவுக்கு எந்த மாதிரியானதொரு எதிர்காலத்தை காண்கிறீர்கள் ?   உங்கள் முக்கிய இலக்குகள் என்ன ?  மேலும் என்ன செய்ய விரும்புகிறீர்கள். ?

14 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து பிரதமராகும் வாய்ப்பை பெற்ற முதல் பிரதமர் நான்தான்.   இதன் காரணமாக மாநில அரசுகள் மற்றும் குடியரசு முறை ஆகியவற்றின் பலத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளேன்.   இதனால் எனது நிர்வாகத்தில் முக்கியமாக நான் கருதுவது இந்தியா ஒற்றைத் தூணில் நிற்க முடியாது.    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தூண்.   அதுவே இந்தியாவின் முக்கிய பலமாக திகழ்கிறது.   இதனால் டீம் இந்தியா என்ற தத்துவத்துக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன்.   கூட்டுறவு குடியாட்சி, போட்டி உணர்வுள்ள கூட்டுறவு குடியாட்சி ஆகியவை வருங்காலத்தில் நல்ல பயனைத் தர உள்ளன. இரண்டாவதாக ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் நாட்டு மக்களின் மகிழ்ச்சி முக்கிய இலக்காக உள்ளது.   நம் நாட்டின் மக்களின் வாழ்க்கைத் தரம் எப்போது மாற்றப்படும் ?   வாழ்க்கைத் தரத்தில் எப்படி முன்னேற்றத்தை ஏற்படுத்துவது ?  அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும்.   சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டும்.   கல்வியில் தரமான மாற்றங்கள் வர வேண்டும்.    தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும்.  இதற்குப் பெருமளவில் மாற்றம் நிகழ வேண்டும்.     மனிதனின் முக்கிய தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.    இந்தத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசினுடையதாக இருக்க வேண்டும்.     இவற்றை வழங்கினால் குடிமக்கள் தானாக முன்னேறுவார்கள்.     நமது நோக்கம் வாய்ப்புகளை வழங்குவதாக இருக்க வேண்டும்.     திறன் வளர்ச்சி மற்றும் மனிதவள வளர்ச்சியே நமது பிரதான இலக்கு.   “மேக் இன் இந்தியா” என்ற உற்பத்தி மையம் எனது முயற்சியே.  இதே போல இளைஞர்களின் திறனை வளர்ப்பது பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும்.   இது பொருளாதாரத்துக்குப் பெரும் உந்துசக்தியை வழங்கும்.  நான் இந்த திசையை நோக்கி எனது உழைப்பைச் செலுத்துகிறேன்.   உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.   வெறும் சாலைகளை முன்னேற்றுவது மட்டுமல்ல.  தேசிய நெடுஞ்சாலைகளை முன்னேற்றுவது மட்டுமல்ல.   தகவல்களை வழங்கும் பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.  வெறும் தண்ணீர் வழங்குவது மட்டும் எனது திட்டமல்ல.    எரிவாயு வழங்குவதும், டிஜிட்டல் இணைப்பு வழங்குவதும் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கம்.   எனது ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தில் இந்தியா இந்த இலக்கை அடைந்துள்ளது என்று என்னால் கூற முடியும்.   சமீப காலத்தில் இந்தியா உலக அரங்கில் ஒரு முக்கிய பொருளாதார சக்தியாக உயர்ந்துள்ளதை நீங்கள் காணலாம்.     இன்று இந்தியா உலக அரங்கில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக திகழ்கிறது.    இன்று இந்தியா ஒரு மிகப் பெரிய பொருளாதார சக்தியாகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் உருவாகி உள்ளது.  பொருளாதார தர நிர்ணயம் செய்யும் உலகின் பல்வேறு அமைப்புகள் இந்தியா ஒரு பிரகாசமான வளர்ச்சி அடையக் கூடிய நாடு என்று கணித்துள்ளன.  இந்தியாவின் வளர்ச்சி துரிதமாக நடந்து வருகிறது.    இதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.    21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருப்பதால் இந்தியாவின் பொறுப்பு கூடியுள்ளது.  ஒரு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது.   இதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.    ஜனநாயகம் மற்றும் மனித மதிப்பீடுகள் ஆகிய இரண்டையும் இணைத்து எப்படி இந்தியா செயல்பட வேண்டும் ?   மனிதகுலத்துக்காக உழைப்பது, ஜனநாயகம், ஏழை நாடுகளுக்கு உதவுதல் ஆகியவை இந்தியாவின் பலம்.    இந்தியா அமைதியாக வேடிக்கை பார்க்கும் நாடாக அல்லாமல், தன் பங்களிப்பைச் செய்யும் நாடாக உள்ளது.  

பிரதமர் அவர்களே, இந்தியா, ரஷ்யா மற்றும் உலக நாடுகள் பெரும் தீமையை எதிர்கொண்டுள்ளன.   தீவிரவாதம்தான் அது.    ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சிரியா நாட்டை ஆக்ரமித்துள்ளது.  பல நாடுகள் அதை எதிர்த்து போரிட்டு வருகின்றன.    இந்தியாவும் தீவிரவாதத்துக்குப் பல்வேறு உயிர்களை பலி கொடுத்துள்ளது.  உலகம் இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?    ரஷ்யா மற்றும் இந்தியா இணைந்து எப்படிப்பட்ட நடவடிக்கைகளை தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

எகிப்தில் நடந்த தீவிரவாதிகளின் விமானத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி ரஷ்யர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.   கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது.    தீவிரவாதத்தின் மோசமான வடிவங்களை நாங்கள் சந்தித்துள்ளோம்.    அப்பாவி பொதுமக்களுக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.    இது மெதுவாக உலகெங்கும் பரவி வருகிறது.    

தீவிரவாதத்தால் நாங்கள் பாதிக்கப்படுகையில் உலகிற்கு எல்லையே இல்லை என்று நாங்கள் சொல்வதுண்டு.    ஆனால் உலகம் எங்களின் கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.    புரிந்து கொள்ளவும் முயலவில்லை. இது இந்தியாவின் பிரச்சினை என்று நினைத்தார்கள்.  ஆனால், நாங்கள் சொன்னது உண்மையாகி விட்டது என்பதை வருத்தத்துடன் நினைவு கூர்கிறோம்.     உண்மையில் மிகவும் வருத்தப்படுகிறோம்.    

தீவிரவாதம் மனித குலத்துக்கே எதிரி.    மனிதத்தை நம்பும் அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு அணியில் திரள வேண்டும்.  மனிதம் அரசியல் எல்லைக்குள் அடைத்து வைக்கப்படுவதில்லை.   அரசியல் தத்துவங்கள் மனிதத்தை எடைபோட முடியாது.    மனிதம், மனிதத்தினால் மட்டுமே அளவிடப்பட வேண்டும்.  மனிதத்தை நம்பும் அனைத்து சக்திகளும், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒரே அணியில் தீவிரவாதத்துக்கு எதிராக போராட முன் வர வேண்டும்.  

இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் அவை உருவானது.   போர்கள் இல்லை ஆனால் தீவிரவாதம் அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது.     போர்கள் போர் வீரர்களின் எல்லைகளில் நடந்தது.    ஆனால், தீவிரவாதமோ, அப்பாவி பொதுமக்களை குறி வைக்கிறது.  இது போர்களை விட மோசமானது. நாம் அனைவரும் இணைந்து ஐக்கிய நாடுகள் அவையில் தீவிரவாதத்தை விளக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.    தீவிரவாதத்தை நாம் வரையறுக்க முடியாது.    யார் தீவிரவாதி ?  யார் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பவர் ?   தீவிரவாதத்துக்கு உதவு புரிபவர் யார் ?    அத்தகைய நாடுகளை என்ன செய்ய வேண்டும் ?    ஐ.நா அவையால் இது குறித்து விவாதிக்கக் கூட முடியவில்லை.    ஏனெனில், உலகில் உள்ள சில நாடுகள், இந்த விவாதத்தை நடைபெற விடாமல் தடுக்கின்றன.   உலகம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

சிரியா மற்றும் மேற்காசியாவைப் பொறுத்தவரை, மேற்காசியா வளத்தை நோக்கி பயணித்து வருகிறது.   ஆனால், வளம், அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்கவில்லை.   சொத்து, பணம், அதிகாரம் மட்டுமே மகிழ்ச்சியை வழங்குவதில்லை.   மேற்காசியா இதைக் கண்டு வருகிறது.  மனித இனம், இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.   சொத்துகளும் வளமும் மட்டுமே மகிழ்ச்சியை வழங்கி விடாது.   அதற்கு மேலும் சில தேவைப்படுகின்றது.  அதுதான் மதிப்பீடுகள்.  

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் கூறுவதை நாம் பார்க்கிறோம்.  ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் செல்கின்றனர்.  இந்தச் சூழல் தீவிரவாதிகளுக்குப் பலத்தைத் தருகிறது.   எந்த தீவிரவாத இயக்கமும் சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை.    அப்படியென்றால் உலகில் ஏதோ ஒரு நாடு இந்த தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது.   எந்த வழியாக இது நடக்கிறது ?   ஏன் அந்தப் பாதை தடை செய்யப்படவில்லை .    தீவிரவாதிகள் பணம் அச்சடிக்கும் இயந்திரங்களை வைத்திருப்பதில்லை.    அப்படியென்றால் அவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது ?  இத்தகைய தாக்குதல்களை நடத்த அவர்களுக்கு எங்கிருந்து பலம் வருகிறது ?   நிதி உதவியோ, அல்லது தகவல் தொடர்பு உதவியோ, உலக நாடுகள் இதில் ஏதாவதொரு பங்கை வகிக்கின்றன.    உலகில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே  இதை நிறுத்த முடியும்.   ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சம்பவங்களைத் தடுப்பது எந்த விதத்திலும் உதவாது.    இதனால்தான் மனிதகுலம் அனைத்தும இணைந்து போராட வேண்டும்.   இரண்டாவதாக சிலர் மதத்தின் அடிப்படையில் உணர்வுரீதியாக மிரட்டுகிறார்கள்.  உலகின் அனைத்து மக்களும், அனைத்து சமூகங்களும், மதத் தலைவர்களும் ஒரே குரலில் மதத்திலிருந்து தீவிரவாதத்தைப் பிரிக்க முயற்சிகள் எடுக்கவேண்டும்.    தீவிரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பதை ஆணித்தரமாக கூற வேண்டும்.     உணர்வு ரீதியாக மதத்தைப் பயன்படுத்தி இளைஞர்கள் தீவிரவாதம் பக்கம் திரும்புவதை அப்போதுதான் தடுக்க முடியும்.     மேலும் மற்றொரு விஷயம் என்னவென்றால், சமூக வலைத்தளங்கள் மூலமாக தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறுகிறது.  நாம் அவற்றை எதிர்க்க வேண்டும்.    நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.  அவர்கள் யார் சொன்னால் கேட்பார்களோ, அவர்களை வைத்து சொல்ல வேண்டும்.   இப்படிப்பட்டவர்களை அடையாளம் காண வேண்டும்.  இளைஞர்கள் அவர்களால் தொடர்ந்து வழிநடத்தப்பட வேண்டும். இதன் மூலமாகத்தான் நாம் நமது வருங்கால சந்ததியினரைப் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.  

மாஸ்கோ மற்றும் புதுதில்லி ஆகிய இரண்டுக்கும் இடையே சர்வதேச விவகாரங்களில் நெருக்கமான உறவு நிலவுகிறது.   அனைத்து உலக நாடுகளின் நலன்களும் பாதுகாக்கப்படக் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று நம் இரு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.  இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்து தங்கள் கருத்து என்ன ?  

வலுவான சர்வதேச உறவு நம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை உட்பட சர்வதேச அரங்குகளில் ரஷ்யா இந்தியாவுக்கு அளித்து வரும் ஆதரவு, இந்தியாவில் பெரிதும் மதிக்கப்படுகிறது.   இன்றைய காலகட்டத்தில் நமது சர்வதேச ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது.    ப்ரிக்ஸ், ஷாங்காய் கார்ப்பரேஷன் (இதில் ரஷ்ய உதவியால் இந்தியா முழுமையான உறுப்பினராக முடிந்தது), ஜி 20 மற்றும் கிழக்காசிய மாநாடு போன்ற சர்வதேச அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுகின்றன.  

ரஷ்ய அதிபரால் உருவாக்கப்பட்ட ப்ரிக்ஸ் அமைப்பு சர்வதேச அளவில் நிதி, வர்த்தகம், வளர்ச்சி நிதி, சர்வதேச தீவிரவாதம், பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கிறது. சர்வதேச அளவில் ஒரு நிலையான சூழலை ஏற்படுத்துவதில் ப்ரிக்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.   எஸ்.சி.ஓ மற்றும் கிழக்காசிய மாநாடுகளில் நாம் இணைந்து பணியாற்றி அமைதி மற்றும் வளத்தை உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் உருவாக்க முடியும்.   

பன்முகத்தன்மை என்பது யதார்த்தமான ஒரு விஷயம்.   இந்த பன்முகத்தன்மையின் இரு பக்கங்களாக இந்தியாவும் ரஷ்யாவும் செயல்பட்டு வருகின்றன.  இரு நாட்டின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் ஒரு அமைதியான, நிலையான உலகத்தை உருவாக்க இரு நாடுகளும் பாடுபட வேண்டும்.  

பிரதமர் அவர்களே, எனக்குத் தெரிந்தவரை, செப்டம்பரில் உங்கள் வயது 65.   ஆனால், நீங்கள் மிகவும் இளமையாகத் தெரிகிறீர்கள்.  இதற்கு தற்போது பிரபலமாகி வரும் யோகாதான் காரணமா ?  ரஷ்யாவில் யோகாசன பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் ?  இதை ரஷ்யாவில் வளர்க்க என்ன செய்ய வேண்டும் ?  அதிபர் புதின் அவர்களும் நீங்கள் கூறிய பிறகு யோகாவில் ஆர்வம் காட்டி வருவதாக நான் அறிகிறேன்.  

இது ஒரு நல்ல கேள்வி.    முதலில் உங்கள் மூலமாக ஐ. நா அவைக்கும் இதர உலக நாடுகளுக்கும், அதன் குடிமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச யோகா தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை நான் ஐக்கிய நாடுகள் அவையில் முன்மொழிந்த உடன் 100 நாட்களுக்குள் பெரும்பாலான நாடுகள் அதை ஏற்றுக்கொண்டன.   192 நாடுகளில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.  ரஷ்யாவில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் யோக தினம் கொண்டாடப்பட்டு 45,000க்கும் அதிகமான மக்கள் அதில் பங்கேற்றனர்.     இது மிகவும் முக்கியமானது.  யோகக் கலை இந்தியாவில் உருவானது.    இது இந்தியாவுக்குச் சொந்தமானது என்று என்னால் கூற முடியும்.   ஆனால், அது இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல.   அது மனித குலத்துக்குச் சொந்தமானது.  உலக கலாசாரத்துக்கு சொந்தமானது.   உலகில் உள்ள பல நாடுகள் பல்வேறு வடிவங்களில் யோகக் கலையைப் பயின்று வந்ததால் அது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பல்வேறு தரப்பினர் பங்களித்துள்ளார்கள்.     இதனால் நானும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவனாகிறேன்.   எதனால் யோகா பிரபலமானது ?   அதன் முக்கியத்துவம் ஏன் அதிகரிக்கிறது ?   ஏனென்றால், ஆரோக்கியம் குறித்து நாம் பேசுகையில், நோய்க்குச் சிகிச்சை அளிப்பதே ஆரோக்கியம் என்று நினைத்து வந்துள்ளோம்.    உடல் நலன் குறித்து கவனிப்பது மிகவும் முக்கியம்.    நோயா ஆரோக்கியமா என்றால் யோகாசனம்  ஆரோக்கியம் என்று கூறுகிறது.   இன்று ஒட்டுமொத்த ஆரோக்கியம் குறித்து உலகம் விவாதிக்கிறது.  அதற்கு சரியான விடை யோகாசனம். மூன்றாவதாக மனித வாழ்வு பிளவுபட்டதாக உள்ளது.    மனம் ஒன்று சிந்திக்கிறது. உடல் ஒன்று செய்கிறது.     இதனால் குழப்பம் நேர்கிறது.    உடல், மனம், ஆன்மா ஆகியவை பிளவுபட்டு உள்ளது.  இதை நாம் உணர்வது கூட இல்லை.     மனம், உடல் மற்றும் ஆன்மா இணைந்து செயல்பட வேண்டும்.   இதை யோகாசனத்தால் அடைய முடியும்.    யோகாசனம் மனத்துக்கு பலத்தைத் தருகிறது.    யோகாசனம் வெறும் உடற்பயிற்சி அல்ல.   சிலர் யோகாசனம் உடலை வளைப்பது என்று கருதுகிறார்கள்.   சர்க்கஸில் பணி புரிபவர்கள் உடலை வளைக்கிறார்கள்.   ரஷ்யா சர்க்கஸ் கலையில் உலகில் முதலிடத்தில் உள்ளது.  ஆனால் அது யோகா அல்ல.   யோகாசனம் என்பது, மனம், உடல் ஆன்மா ஆகியவற்றோடு தொடர்புடையது.  இத்தகைய யோகாசனம் மிகுந்த பலன் தரும்.   அதிபர் புதின் யோகக் கலையில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை நானும் கேள்விப்பட்டேன்.   உலகத் தலைவர்களை நான் சந்திக்கையில் யோகாசனம் குறித்து விவாதிக்கிறேன்.    நீங்கள் சொல்வது சரி.  நானும் யோகப் பயிற்சி செய்து வருகிறேன். எனக்கென நேரம் கிடைக்கையில் யோகாசனப் பயிற்சி செய்கிறேன்.  அதனால் பலனடைந்துள்ளேன்.  

பிரதமர் அவர்களே, அதிகாரத்தின் சூத்திரம் என்று நமது நிகழ்ச்சிக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.     இதை விளக்க முடியுமா ?   உங்களின் அதிகாரத்தின் சூத்திரம் என்ன ? இதை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் ?  

எங்கள் நாடு ஆன்மீக சிந்தனை உள்ள நாடு.   கடவுள் உருவான நாடு.   நான் எப்போதும் ஜனதா ஜனார்தன் என்று கூறுவதுண்டு.  இது கடவுளின் ஒரு வடிவம்.     நான் மக்களையே கடவுளாகப் பார்க்கிறேன்.    மனிதகுலம் அனைத்தையும் எனக்கு சக்தி வழங்குவதாகப் பார்க்கிறேன்.    எனக்கு அதிகாரம் வழங்குவது 1.25 பில்லியன் மக்கள்.   அந்த மக்களையே அதிகாரத்தின் வடிவமாகப் பார்க்கிறேன். அவர்களுக்காக நான் வாழ்கையில் அவர்கள் தேசத்துக்காக வாழ்வார்கள்.   அதுதான் எனக்கு அதிகாரம் வழங்குகிறது.    இந்தியாவில் அதிகாரம் என்பதற்கு தவறான பொருள் உண்டு.  அதனால் நான் கவனமாக இருக்க வேண்டும். 1.25 மக்களின் 2.5 பில்லியன் கரங்கள் எனக்கு அதிகாரம் வழங்குவதாக நினைக்கிறேன்.    இந்தியாவில் பில்லியன் பிரச்சினைகள் இருந்தால், பில்லியன் தீர்வுகளும் உண்டு.  இதுதான் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.  

பிரதமர் அவர்களே, சில நாட்களில் புத்தாண்டு வர உள்ளது.   ரஷ்யாவில் மிகச் சிறப்பாக புத்தாண்டு கொண்டாடப்படும். அதை ஆவலாக எதிர்பார்த்து உள்ளோம்.    ரஷ்ய மக்களுக்கு புத்தாண்டு செய்தியாக என்ன கூற விரும்புகிறீர்கள் ?

ரஷ்ய மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.    அது குரங்கு வடிவில் வருகையில் அதை முக்கியமாக கருதுகிறீர்கள்.  இது எனக்கும் தெரியும்.   இது ஒரு நல்ல சகுனம்.   ரஷ்யா உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக விளங்குகிறது.  மேலும் பெரும் சக்தியாக உலக அரங்கில் ரஷ்யா திகழும்.   ரஷ்யாவின் பலம், உலக அமைதிக்கு பயன்படும் என்று நான் நம்புகிறேன்.  ரஷ்ய மக்கள், இந்தியாவோடு நெருக்கமான உறவில் இருப்பார்கள்.  இந்தப் புத்தாண்டில் இந்த உலகை தீவிரவாதம் அற்ற உலகாகவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் உலகமாகவும், மனிதகுலத்தின் கடமையை ஆற்றும் புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன்.  மீண்டும் ஒரு முறை ரஷ்ய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

TASS Source