Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடியின் நேர்காணல்: நம்பிக்கையின்மையைப் போக்கி நமது பொறுப்பான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனக்கு சவால்


நீங்கள் பிரதமராக பதவியேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த அரசின் மிகப்பெரும் சாதனையாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்? அரசு சாதிக்க வேண்டும் என்று நினைத்து, நிறைவேற்றப்படாமல் ஏதாவது இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா – அதற்காக வருத்தமடைகிறீர்களா?

அரசுக்கு சாதனை தேவையில்லை. ஆனால், நாட்டின் சாதனை தேவை என்பதே எனது கருத்து. அரசு இருக்கிறது. அது மக்களின் நலனுக்காக தொடர்ந்து இருக்க வேண்டும். கடந்த 25 மாதகால ஆட்சியை மதிப்பிடும்போது, அதற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாங்கள் பதவிக்கு வந்தபோது, எங்கு பார்த்தாலும் நம்பிக்கையின்மையும், இருளும் சூழ்ந்திருந்தன. செய்தித்தாள்களில் முறைகேடுகள் மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் குறித்தே செய்திகள் நிரம்பியிருந்தன. முந்தைய மாதங்களில், பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்திருந்தது. சர்வதேச சந்தையில் இந்தியப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருந்தது. பணவீக்கம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக, எந்த உதவியும் கிடைக்கவில்லை என்ற உணர்வு சாதாரண மக்கள் மத்தியில் இருந்தது. இன்று, அவை அனைத்தும் முந்தைய அரசுடன் மறைந்துவிட்டது. நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். இருள் சூழலில் இருந்து, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஏற்பட்டிருப்பதும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நிலையான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், மாற்றமிகு இந்தியாவுக்கான வாய்ப்பாகும்.

வருத்தத்தைப் பொருத்தவரை, உங்களது விருப்பப்படி எனது பதில் இருக்குமா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. நாடாளுமன்றத் தேர்தலின்போதும், அதற்கு முன்னதாகவும், எங்களால் வெற்றிபெற முடியாது என்று ஊடகங்களில் ஒரு பிரிவினர் வலுவான நம்பிக்கை வைத்திருந்தனர். கடந்த 2 ஆண்டுகளில் எனது வருத்தம் என்னவென்றால், அந்தப் பிரிவினரிடம் என்னால் நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை என்பது தான். இந்த நம்பிக்கையின்மையைப் போக்கி, எங்களது பொறுப்புணர்வையும், நல்ல நோக்கங்களையும் எடுத்துரைப்பது எனக்கு சவாலாக உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள நாடுகள், தங்களைப் பற்றியே அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது அதன் அறிகுறிகளில் ஒன்று. இதனால், விரைவில் மக்கள் நகர்வு, சர்வதேச வர்த்தகம் உள்ளி்ட்டவை பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா?

உலகில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனை சரியான கண்ணோட்டத்தில் கவனிக்க வேண்டியது அவசியம். மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச காரணிகளிலிருந்து உள்ளூர் நிலைமையைப் பிரித்துப் பார்க்க வேண்டும். பல நூற்றாண்டுகளாகவே, ஒவ்வொரு நாட்டுக்கும் தங்களது சொந்த நலனே முக்கியம் என்பது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த நலனை பிரதானமாகக் கொண்டே, வெளியுலக நட்புகளை கட்டமைக்க விரும்புகின்றன. மேலும், உலகின் மற்ற நாடுகளுடன் இணைகின்றன. மற்ற நாடுகளின் நலனை நிறைவேற்றுவதன் மூலம், சர்வதேச உறவுகளை வலுப்படுத்த முடியும். இன்று, தொழில்நுட்பம் அல்லது வர்த்தகம், மனிதவளம் அல்லது மூலதன நகர்வு, ஆய்வு, புத்தாக்கம் என அனைத்திலும் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், ஒருவரை ஒருவர் சார்ந்தும் உள்ளோம். ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தினாலும், தனது நலனை மனத்தில் வைத்திருப்பது இயல்பானது தான். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில், தீவிரமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில், நமது நலனை மனதில் கொண்டு, சரியான முடிவுகளை எடுப்போம்.

ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைப்பு குறித்து நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள். ஆனால், மற்ற கட்சிகளையோ, மற்ற கட்சி ஆளும் மாநிலங்களையோ போதிய அளவில் நீங்கள் சேர்த்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மத்திய அரசு மீது தில்லி, உத்தராகண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புகார் தெரிவிக்கின்றன. வளர்ச்சிப் பாதையில் அவர்களையும் சேர்க்க நீங்கள் விரும்பவில்லையா?

நீங்கள் உண்மையைப் பார்த்தீர்களானால், நாடு சுதந்திரமடைந்த பிறகு, எந்த அரசையும் விட, எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது என்ற அடிப்படையைப் பார்க்காமல், மாநிலங்களுக்கு அதிக அளவில் இந்த அரசு செய்துள்ளதை உங்களால் காண முடியும். 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் மூலம், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு, 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்வேறு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கும் மாறாக, இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடிவுசெய்தோம். மாநிலத்தின் பங்கை அதிகரிப்பதால், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று தொடக்கத்தில் சிலர் குறைகூறினார்கள். 2015-16-ம் நிதியாண்டின் விவரங்கள் தற்போது உள்ளன. அதில், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தவிர்க்க முடியாத காரணங்களால் குறைத்தபோதும் கூட, மத்திய அரசிலிருந்து மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட நிதி, 2015-16-ம் நிதியாண்டில் 21 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் குறைத்தபிறகு, மாநிலங்களுக்குக் கூடுதலாக வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நிதி சுமார் ரூ.1,44,800 கோடியாகும். நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையால் செயல்படுத்தியதன்மூலம், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆணையம், முந்தைய அரசால் அமைக்கப்பட்ட அரசுசாரா அமைப்பு ஆகும்.

சில உதாரணங்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன். மாநிலங்கள் அடிப்படையில், கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிகர நிதி என்பது, மேற்கு வங்காளத்துக்கு 37%. இதுவே கேரளாவுக்கு 38%, தெலங்கானாவுக்கு 25%, ஹிமாசலப்பிரதேசத்துக்கு 49%, உத்தரப் பிரதேசத்துக்கு 22%, கர்நாடகாவுக்கு 21%. ஒரே இந்தியா (Team India) என்ற நிலைப்பாட்டில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களையும் கூட முழுமையான மற்றும் சரிசமமான பங்காளியாக எனது அரசு நடத்திவருவதில் நான் பெருமைப்படுகிறேன்.

இதற்கு, மற்றொரு வலுவான உதாரணத்தைக் கூறுகிறேன். நிதி ஆணையத்தால், வரி வருவாயில் மத்திய அரசின் பங்கு பெருமளவில் குறைந்ததால், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உண்மையில், தங்களது பங்கை ஆணையம் நீக்கியுள்ளது. நாடு சுதந்திரமடைந்தது முதல், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் அமைப்பு மற்றும் நிதி வழிமுறைகளை எப்போதுமே மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுசெய்து வந்தது. இந்த முறை, நிதிஆயோக் அமைப்பின் கீழ், மாநில முதலமைச்சர்களைக் கொண்ட துணைக் குழுவை அமைத்தோம். புதிய வழிமுறையை உருவாக்கும் இலக்கை அவர்களிடம் ஒப்படைத்தோம். கேரளா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களைக் கொண்ட இந்தக் குழு, ஒருமனதாக பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டவுடன், அதனை நாங்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டோம். வளர்ச்சிப் பாதையில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டுள்ளோம் என்ற உறுதிப்பாட்டுக்கு இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்லை.

இந்தியாவின் நலன்களுக்கு சீனா தொடர்ந்து தடையாக உள்ளது.  வர்த்தகமாக இருந்தாலும் சரி, அல்லது அண்மையில் என்எஸ்ஜி விவகாரத்தில் கூட தடையாக இருந்தது. சீனாவை இந்தியா நேரில் பார்க்கும் நிலையில், இதுபோன்ற தலையீடுகளிலிருந்து சீனாவைத் தடுக்க உங்களது பலத்தை எவ்வாறு அதிகரித்துக் கொள்வீர்கள்?

உங்கள் கேள்வியைக் பார்த்தால் சர்வதேச உறவுகள் இல்லைபோல் தோன்றுகிறது ஒவ்வொரு நாடும் சில துறைகளில் மற்றவர்களுடன் உள்ள முரண்பாடுகளைக் கையாளும் நிலையில் பல துறைகளில் தங்களது நாட்டின் நலன்களில் முன்னேற்றம் காணலாம் என்று நம்புகிறேன். இன்று எந்த நாடும் தனித் தீவு கிடையாது. நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகள். ஆசியாவை வழிநடத்தும் முக்கிய நாடுகளாக உள்ளன. சர்வதேச அரங்கிலும் முக்கிய நாடுகளாக மாறி வருகின்றன. நாம் அதிக அளவில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம். மற்ற நாடுகளின் நலன்களையும், முக்கியத்துவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். பரஸ்பர பிரச்சினைகள் மற்றும் நலன்களையும் உணர வேண்டும். எனினும், நமது பாதுகாப்பு நலன் என்ன என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதனைத் தொடர்ந்து, வலுவாக செயல்படுத்துவேன்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவது உங்களுக்கும், உங்களது கட்சிக்கும் எவ்வளவு முக்கியம்? இந்தத் தேர்தல் முடிவை, மத்திய அரசின் மீதான மக்களின் கருத்தாக பார்ப்பீர்களா?

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக, மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தைப் பாதுகாக்க வளர்ச்சியை ஏற்படுத்துவதே ஒரே வழி. பா.ஜ.க. வினால் மட்டுமே வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும். 15 ஆண்டுகால மோசமான ஆட்சியால், மாநிலம் கல்வித் துறையில் மட்டுமன்றி, தொழில் துறை வளர்ச்சியிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி குறியீடான யூ-டைஸின் தரவரிசையில் 2014-15-ம் ஆண்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடைசி நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளது. இந்த தரவரிசை என்பது 4 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதாவது, மக்களுக்கு திட்டங்கள் கிடைப்பது, கட்டமைப்பு, ஆசிரியர்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதாவது, இந்த ஒவ்வொரு காரணியிலும் உத்தரப்பிரதேசம் மோசமான நிலையில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதே எங்களது உத்தியாக இருக்கும். உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சாலைப் பணிகளுக்கு ரூ.68,000 கோடியும், ரயில்வே, மின்சாரம் மற்றும் பெட்ரோலியத் திட்டங்களுக்கு ரூ.27,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சரிசமமான தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியை ஒதுக்கிவிட முடியாது. அந்தப் பகுதி, பொருளாதாரம், கல்வி, தொழில் துறை ஆகியவற்றில் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த சமநிலையற்ற தன்மையைக் குறைக்கும் வகையில், அந்தப் பிராந்தியத்தில் சரக்கு முனையத் திட்டத்துக்கு போதிய முதலீடு செய்ய உள்ளோம். சரக்கு முனையத்துடன் 18 திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

முனையத்தை அமைப்பதன்மூலம், ரசாயனம், சிமென்ட், உரம் மற்றும் பிற தொழில் துறைகள் ஊக்குவிக்கப்படும். கோரக்பூரில் உள்ள உர ஆலையை ரூ.6,000 கோடியில் மீண்டும் தொடங்குவதற்கான பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் தொழில் துறை மற்றும் பொருளாதார நிலை மாற்றியமைக்கப்படும்.

அரசின் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் குறித்து உங்களது வெறுப்புணர்வை அடிக்கடி வெளிப்படுத்துகிறீர்கள். உங்களது இலக்கை நிறைவேற்ற, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள், தங்களுக்கு என்று தனி கொள்கைகள், தனிப்பட்ட உத்திகள் மற்றும் முக்கியத்துவங்களைக் கொண்டிருக்கும். இது வலுவான ஜனநாயகத்தில் அடிப்படை அம்சம். எனினும், அவர்களது கொள்கைகள் மற்றும் கட்டாயங்களுடன், அனைத்துக் கட்சிகளும், கட்சி அடிப்படையிலான நிலைப்பாட்டை விட்டுவிட்டு, நாட்டின் நலனே முக்கியம் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தில் நான் பேசும்போது, மக்களவையில் எண்ணிக்கை அடிப்படையில், நமக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவே விரும்புகிறோம். மேலும், பொது உடன்பாட்டின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றே விரும்புவதாக தெரிவித்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றம் பயனுள்ள வகையில், செயல்பட்டு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

அதிக அளவிலான சட்டமியற்றும் பணிகள் முடிவடைந்ததோடு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றுள்ளது. அதாவது, டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் முதல், வறட்சி, பதான்கோட் தாக்குதல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளோம். இந்த விவாதங்கள் அனைத்தும் ஆரோக்கியமான உணர்வுடன் நடைபெற்றன.

சட்டமியற்றும் விவகாரத்தில், தேசிய நலன் கருதி, அரசுடன் பெரும்பாலான கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

உங்களது கேள்வியில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் இணைத்து நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில், ஒரு கட்சியைத் தவிர, மற்ற எதிர்க்கட்சிகள் தேசிய நலன் அடிப்படையில், பணிகளை மேற்கொள்ள உறுதுணையாக உள்ளன. தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரே கட்சி மட்டும் செயல்பட்டு வருவது ஒட்டுமொத்த தேசத்துக்கும் தெரியும். அந்தக் கட்சி, நாட்டுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட, ஒவ்வொரு விவகாரத்திலும் தடையை ஏற்படுத்தி வருகிறது.