இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் இரண்டு ஆண்டுகால ஆட்சியில், சிலர் எதிர்பார்த்ததைப் போன்று, பொருளாதாரக் கொள்கை முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவில்லை. நம்பிக்கை உள்ள சிலர் எதிர்பார்த்தது போன்று, பொருளாதாரத்தை முற்றிலுமாக மாற்றியமைக்காமல், பொருளாதாரக் கொள்கையில் சிறிதளவு மாற்றங்களைக் கொண்டுவருவதிலேயே திரு. மோடி அதிக கவனம் செலுத்தினார்.
இதுவரை இல்லாத வகையில், வர்த்தகர்களுக்கு ஏற்ற இந்தியப் பிரதமராக திரு.மோடி இருப்பார் என்று நம்பிக்கை கொண்டிருந்த முதலீட்டாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது. எனினும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகிறது. திரு.மோடியும், அவரது கட்சியும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாடு இருந்ததைவிட, தற்போது மற்ற நாடுகளுடன் சிறப்பான நட்புறவு கொண்டுள்ளது. நாடு மிகவும் சிறப்பாக உள்ளது.
12 முக்கிய காரணிகளைப் பார்க்கும்போது, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, முந்தைய காங்கிரஸ் கட்சி மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியைவிட மிகவும் சிறப்பான அடித்தளத்துடன் உள்ளது.
மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6% உயர்ந்துள்ளது. இதன்மூலம், உலகில் வேகமாக வளர்ந்துவரும் மிகப்பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் சீனாவைத் தாண்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த கடந்த முழு நிதியாண்டு காலத்தில் இருந்த 6.6%-லிருந்து அதிகரித்துள்ளது.
பணவீக்க அளவானது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில் பாதியாக குறைந்துள்ளது. இந்தியாவின் நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறையானது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4%-லிருந்து 3.9%-ஆகக் குறைந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு, அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
பி.எம்.ஐ. ஆய்வு மையத்தில் உள்ள ஆசிய ஆய்வாளரான சுவா ஹான் டெங் “இந்தியாவின் பருவினப் பொருளாதார (macroeconomic) வாய்ப்புகள், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பதற்கு சற்று முந்தைய காலத்தில் இருந்ததை விட நிச்சயமாக முன்னேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்,’ கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள 12 காரணிகளில் 8-ல் திரு.மோடி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டில் இருந்ததைவிட, கடந்த நிதியாண்டில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இந்தியாவின் பங்குச்சந்தை, ஏற்றுமதி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டியது ஆகியவற்றில், பிரதமர் மன்மோகன் சிங்கின் கடைசி ஆண்டில் சிறப்பாகவே இருந்தது. எனினும், மோடியின் உத்வேகம் மூலம், இந்தியா சில அனுபவங்களைப் பெற்றுள்ளது.
திரு.மோடியின் அரசு, காப்பீடு, ஓய்வூதியம், ரயில்வே உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறைகளில், அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. திவால் நடவடிக்கைகளை எளிதாக்கவும், அறிவுசார் சொத்துரிமையை வலுப்படுத்தவும், சட்டமியற்றும் பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், சாலை அமைத்தல், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை அதிவேகமாக மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் விவகாரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவை வரி, முக்கியமான திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டம் போன்றவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற முடியாதது போன்ற மிகப்பெரும் தோல்விகள் சிலவற்றையும் சந்தித்துள்ளது.
அதேநேரத்தில், வலுவான பொருளாதார அடித்தளத்தால், தொழில் நிறுவனங்களின் வருவாயைப் பெருக்கவோ அல்லது நுகர்வோரின் செலவு செய்யும் திறனை அதிகரிக்கச் செய்யவோ பெரிய அளவில் செய்ய முடியவில்லை. வாராக் கடன் பெருமளவில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய வங்கிகள் திணறி வருகின்றன. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எவ்வாறு கணக்கிடுவது என்பதில், கடந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் காரணமாகவே, வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசின் செயல்பாடுகளுக்கு 10-க்கு 7 மதிப்பெண்ணை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு அசோசெம் (The Associated Chambers of Commerce and Industry of India) அளித்துள்ளது. அரசின் செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மோடி அரசின் கொள்கைகளுக்கு பலன் கிடைக்க மேலும் சில காலம் தேவைப்படுவதாக சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்டேண்டர்டு சார்ட்டர்டு வங்கி, தனது ஆய்வுக்குறிப்பில், “தற்போதைய அரசு செயல்படுத்திவரும் சில கொள்கைகளால், நடுத்தர முதல் நீண்டகாலம் வரையில் ஏற்பட்டுள்ள சாதகமான செயல்பாடுகளுக்கு பெரும்பாலான முதலீட்டாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது. “எனினும், கொள்கை மாற்றங்கள் மிதமானது மற்றும் முன்னேற்றமானது, அவை சரியான கோணத்தில் செல்கின்றன” என்றும் தெரிவித்துள்ளது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அளித்த நேர்காணலின் சுருக்கப்பட்ட தொகுப்பு…
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: டிம் குக் இந்தியாவில் இருந்தார். அவர், தனது பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்தார் போல உள்ளது. அது சிறப்பாக சென்றதா?
திரு.மோடி: இது டிம் குக்-கின் முதலாவது இந்தியப் பயணமாக இருந்தது. இதில் அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தார். இந்தியாவில் வேற்றுமையின் முழு பலத்தையும், அளவையும் அவர் அறிந்துகொண்டார் என்று நான் கருதுகிறேன். எனக்கு தொழில்நுட்ப புலமை உண்டு. எனவே, எங்களது மனஓட்டம் விரைந்து இணைந்துவிட்டதாக கருதுகிறேன்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்றபோது, உங்களது அமோக வெற்றி குறித்து உலகம் முழுவதும் பெரிய அளவில் வியப்புடன் பார்த்தார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வியப்பு ஏற்பட்டு, 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதுவரை மாற்றத்தை ஏற்படுத்தவும், இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
திரு.மோடி: 2014ம் ஆண்டில் நான் தேர்தலைச் சந்தித்தது ஒரு சந்தர்ப்பம். அப்போது, கொள்கை பாதிப்புகள், மோசமான பொருளாதார சூழ்நிலைகள், ஊழல் ஆகியவையே இருந்தது. இந்த விவகாரங்கள் விரிவடைந்து, எங்களது நாடு முழுவதும் 2012, 2013-ம் ஆண்டுகளில் பரவியிருந்தது. இந்த இருள் சூழலைப் போக்கி, நம்பிக்கையை மீட்டெடுப்பது என்பது எனக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவில் இருக்க வேண்டிய நம்பிக்கையும், பலமும் மீண்டும் வந்துவிட்டதாக உறுதியான நம்பிக்கையுடன் நான் கூறுவேன். தேர்தல் நேரத்தில் வெளியான கருத்துகளை நீங்கள் பார்த்தீர்களானால், பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் ஐ (India) விழுந்துவிட்டதாக மக்கள் கூறினார்கள. தற்போது இந்தியாவை ஒரு நிலைக்கு கொண்டுவந்துவிட்டேன் என்று நான் கருதுகிறேன். பிரிக்ஸ் அமைப்பில் தலைமையாக ஐ உள்ளது.
கொள்கை பாதிப்புகள் என்று நான் குறிப்பிடும்போது, அதனுடன் பாதகமான நிலைப்பாடுகளே இருந்தன. அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்ததாகவே இருந்தது.
எனது மக்கள் நிதித் திட்டத்தை (Jan Dhan Yojana) நீங்கள் பார்த்தீர்களானால், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நான் பயன்படுத்தியுள்ளேன். எனவே, குறிப்பிட்ட காலத்துக்குள், நாட்டின் ஏழைகள், பொருளாதாரத்தின் முக்கிய இடமான வங்கி அமைப்பில் இணைக்கப்படுவார்கள். இதற்கு இதுபோன்ற மேலும் பல உதாரணங்களை என்னால் கூற முடியும்.
மூன்றாவது விவகாரம், எனது அரசு பொறுப்பேற்றபோது ஊழல் இருந்தது. அரசின் முடிவெடுக்கும் சூழலில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிலக்கரி முறைகேடு, 2ஜி அலைவரிசையை ஏலம் விடுவதில் முறைகேடு ஆகியவற்றால், எனது நாடு முகத்தை இழந்தது. எனினும், மிகவும் குறுகிய மற்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் வெளிப்படைத் தன்மையை நாங்கள் உறுதிப்படுத்தினோம். தற்போது ஏல முறைகள், வெளிப்படையாகவும், ஆன்லைன் மூலமாகவும் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: அந்த விவகாரங்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாறிவிட்டன. ஆனால், உங்களது அரசு பரிந்துரைத்த முக்கியமான சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று மக்கள் எதிர்பார்த்ததும் உண்மை. அதாவது, நிலம் கையகப்படுத்துதல், வரி அமைப்பில் மாற்றம் போன்ற சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று கூறினீர்கள். ஆனால், இதனை உங்களால் இதுவரை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மாற்றங்களை நாங்கள் எதிர்பார்ப்பது சரியானதுதானா?
திரு.மோடி: இதற்கு சிறிதளதவு எளிதான முறையில் பதிலளிக்க என்னை அனுமதியுங்கள். நான் அரசுக்கு வந்தவுடன், வல்லுநர்கள் அனைவருடனும் அமர்ந்து பேசினேன். அப்போது, அவர்களைப் பொருத்தவரை, மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்துபவை என்ன என்பதை வரையறுக்குமாறு நான் கேட்டேன். பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று எந்தெந்த சீர்திருத்தங்களை வகைப்படுத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். நான் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன். மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது எது என்பதை யாராலும் தெளிவாக கூற முடியவில்லை.
இரண்டாவது, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைப் பொறுத்தவரை, அது எனது கட்சியின் தேர்தல் அறிக்கையிலோ அல்லது எனது கட்சியின் கொள்கையிலோ இல்லை. எனினும், நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, ஊரக வளர்ச்சிக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அப்போது, இந்த சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவராமல், எங்களால் எந்தவொரு மிகப்பெரும் வளர்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று கட்சிப் பாகுபாடு இன்றி அனைத்து முதலமைச்சர்களும் தெரிவித்தனர். எனவே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த முதலமைச்சர்கள், அரசிடம் கோரிக்கை விடுக்கும்போது, இயற்கையாகவே, இதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரலாம் என்று நாங்கள் நினைத்தோம். எனவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர முடிவுசெய்தோம். ஆனால், என்ன நடந்தது என்றால், இதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்தவுடன், அரசியல் கட்சிகள், அரசியல் அடிப்படையில் நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கின. எனவே, மீண்டும் முதலமைச்சர்கள் கூட்டத்தை நாங்கள் கூட்டினோம். நாங்கள் இதனை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று அவர்களிடம் கேட்டோம். அப்போது அவர்கள், இந்த விவகாரத்தில் தாங்களே முடிவுசெய்ய அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இது மாநில விவகாரம் என்று தெரிவித்தனர். இதனை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால், நாங்கள் மாற்றங்களைச் செய்வோம். முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை என்றால், செய்ய முடியாது. இது தங்களது விவகாரம் என்று அவர்கள் தெரிவித்தனர். அப்போது, மத்திய அரசால் தலையிட முடியாது.
சில மாநிலங்கள் ஒருபடி முன்னே சென்று, இந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டன. அவர்களுக்கு மத்திய அரசு ஆதரவாக உள்ளது.
இந்தியாவில் காப்பீட்டுத் துறை, பாதுகாப்புத் துறை, திவால் நடவடிக்கைகள் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது பல ஆண்டுகளாகவே நிலுவையில் உள்ளது. எனவே, உண்மையில் கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தங்களை நான் மேற்கொண்டுள்ளேன். தற்போது, இந்த சீர்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால், மோடியின் மாற்றத்துக்கான மாபெரும் நடவடிக்கைகள் நின்றுவிட்டன என்று மக்கள் கூறுவார்கள். இது இப்போது நடந்துள்ளது. இது மிகப்பெரும் பிரச்சினையாக நீண்ட நாட்களுக்கு இருக்காது.
உண்மையில், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சீர்திருத்தங்களையும், கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் செய்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால், கடந்த 2 ஆண்டுகளில் அதிக அளவில் சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: கடந்த 2 ஆண்டுகளில் உங்களது நடவடிக்கைகள் மூலம், அதிக வலுவான இந்தியப் பொருளாதாரத்தை நீங்கள் உருவாக்கியுள்ளீர்களா? இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
திரு.மோடி: நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைப் பொருத்தவரை, தற்போது முடிந்துவிட்டது. மாநில அரசுகள் செயல்படுத்தலாம். அதற்கு நாங்கள் அனுமதி அளிப்போம். ஜிஎஸ்டி-யைப் (சரக்கு மற்றும் சேவை வரி) பொறுத்தவரை, இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவோம் என்று எதிர்பார்க்கிறோம். பெரும்பாலும், காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவாக உள்ளன. போதிய உறுப்பினர்களின் ஆதரவையும் (நாடாளுமன்ற மேலவையில்) பெறுவோம்.
எனது நாட்டுக்காக நான் நிறைவேற்ற வேண்டிய மிகப்பெரும் பணி உள்ளது. தற்போது, மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையேயான உறவு, கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பாக இருந்து வருகிறது. இதனை போட்டியிடும் ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைப்பாக உருவாக்க நான் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இதன்மூலம், மாநில அரசுகளுக்கு இடையே தங்களது பொருளாதார வளர்ச்சி அடிப்படையில், போட்டி ஏற்படும்.
நாட்டின் பொருளாதாரத்தை மூன்று தூண்களைச் சுற்றி கட்டமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: மூன்றில் ஒவ்வொரு பாகமும், வேளாண்மை, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றிலிருந்து வர வேண்டும். நாட்டின் நீடித்த மற்றும் சரிசமமான பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கியம் என்று நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, மிகப்பெரும் முக்கியத்துவம் என்றால், அது இளைஞர்கள்தான். எனக்கு இளைஞர்களே முக்கியம். ஏனெனில், இந்திய மக்கள் தொகையில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 80 கோடி பேர். இளைஞர்களுக்குத் திறனை வளர்க்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் அரசு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தி வருகிறது.
பாரம்பரியமாக, தனியார் துறை, அரசுத் துறை என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு துறைகளும் ஏராளமான வேலைவாய்ப்புகளை அளித்து வருகின்றன. மூன்றாவது துறையை உருவாக்க வேண்டும் என்று நான் கவனம் செலுத்தி வருகிறேன். அதாவது, தனிநபர் துறை. சந்தையில் ஒரு நபர், வேலைவாய்ப்பை தேடும் நபராக இல்லாமல், வேலைவாய்ப்பை அளிப்பவராக உருவாக வேண்டும். தொழில்முனைவோர் திறன் மூலம், வேலைவாய்ப்பு அளிப்பவராக மாற முடியும்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாராட்டுக்குரியதாக இருந்தது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி பாராட்டுதல்களைப் பெற்றது. அதனை நாங்கள் இப்போது எதிர்பார்க்கலாமா? இல்லையென்றால், உங்களது இலக்குகளை நிறைவேற்றுவதில் தனியார் துறை எவ்வாறு பங்களிக்க முடியும் என்று மக்களுக்கு கூறுங்கள்?
திரு.மோடி: உண்மையில், உலகில் உள்ள எந்தவொரு வளரும் நாட்டுக்கும், பொதுத்துறை, தனியார் துறை என்ற இரண்டுமே மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திடீரென பொதுத்துறையை முற்றிலுமாக நீக்கிவிட முடியாது. எனினும், நீங்கள் எனது தலைமையிலான இரண்டு ஆண்டுகால ஆட்சியையும், சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசின் ஒட்டுமொத்த மாற்றங்களையும் பார்த்தால், பண மதிப்பு அடிப்படையில், கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்சமாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டுள்ளதைக் காண முடியும்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: எனவே, தனியார்மயமில்லை, பிறகு என்ன?
திரு.மோடி: இந்த நடவடிக்கையில் அரசின் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தனியார்மயம் குறித்து நான் பேசுகிறேன். எனது நாட்டில் பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு இல்லாமல் இருந்தது. இன்று, நான் 100 சதவீதம் அனுமதித்துள்ளேன். காப்பீட்டுத் துறையில், தனியார் முதலீடு அனுமதிக்கப்படாமல் இருந்தது. நான் அனுமதி அளித்தேன். ரயில்வே துறையில், ரயில் நிலையங்களை அமைப்பதற்காக முதல் முறையாக அரசு – தனியார் கூட்டமைப்பு மாதிரியை உருவாக்கினேன். இதன்மூலம், ரயில்வே துறையின் பொருளாதார பலமும், திறனும் அதிகரிக்கும். ரயில்வே துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளேன். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும், இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்டுள்ளேன். இதற்கு பெரிய பலன்களை நீங்கள் பார்ப்பீர்கள்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று நம்புகிறீர்களா? பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு சீர்திருத்த திட்டங்களை கூறுகிறீர்களா, இதன்மூலம் மற்ற மாநிலங்களும் செயல்படுத்த முடியுமே? தற்போதைய நிலையில், இந்த நடவடிக்கைகள் மிகவும் குறைவான வேகத்திலேயே உள்ளது.
திரு.மோடி: இந்த நடவடிக்கைகள் குறைந்த வேகத்தில் இருப்பதாக நான் கருதவில்லை. உண்மையில் அது அதிவேகத்தில் உள்ளது. உதாரணமாக, இந்தியா முழுவதும் பொலிவுறு நகரங்களை (Smart Cities) உருவாக்குவது எனது அரசின் இலக்கு. இதனை நாங்கள் சவாலான பாதையில் செயல்படுத்தி வருகிறோம். இதன்மூலம், மாநிலங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு, தங்களாகவே பொலிவுறு நகரங்களை மாநிலங்கள் உருவாக்கும்.
எளிதாக தொழில் தொடங்கும் விவகாரத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், மாநிலங்களுடன் நாங்கள் மிகவும் தீவிரமாகவும், மிகவும் விரிவாகவும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதன்மூலம், எளிதாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ள நாடுகள் குறித்த உலக வங்கியின் மதிப்பீட்டில், மிகவும் குறுகிய காலத்தில் இந்தியா 12 புள்ளிகள் முன்னேறியுள்ளது.
எந்தக் கட்சி ஆளும் மாநிலங்கள் என்ற நிலையில் இல்லாமல், முடிந்தவரை பெரும்பாலான மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஏனெனில், நாட்டுக்குள் பொருளாதார நடவடிக்கைகளில் ஒவ்வொரு மாநிலமும் மிகவும் முக்கியமானது. மாநிலங்கள் இல்லாமல், நம்மால் வளர்ச்சிபெற முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
தொழிலாளர் சீர்திருத்தம் என்பது, தொழில் துறையினரின் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. தொழிலாளர் சீர்திருத்தம் என்பது, தொழிலாளர்களின் நலன் அடிப்படையிலும் இருக்க வேண்டும். பல்வேறு வகையான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது, இருதரப்பினரும் பயனடையும் வகையில் அமையும். வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவோருக்கான (Internships) சட்டத்தில் நாங்கள் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம். இதற்கு முன்பாக ஆய்வாளர்கள் அதிகாரம் (Inspector Raj) இருந்தது. இதன்படி, ஆய்வாளர்கள் தங்களது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று ஆய்வு நடத்திவந்தனர். ஆனால், இது கூடாது என்று நாங்கள் கூறினோம். இதற்கு வடிவமைப்பு தேவை என்றோம். ஓர் ஆய்வாளர், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே செல்ல முடியும். இதன்மூலம், நிறுவனம் துன்புறுத்தப்படாமல் இருக்கும். சில மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் கிடையாது. அவர்கள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர் சீர்திருத்தம் தேவையில்லை. ஒரு சில மாநிலங்கள் உற்பத்தித் துறையை பிரதானமாகக் கொண்டுள்ளன. அவர்களுக்கு தொழிலாளர் சீர்திருத்தம் தேவை. அந்த மாநில சட்டப்பேரவைகளில் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளலாம். இது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு என கூட்டு விவகாரம். இதனை எனக்கு அவர்கள் அனுப்பினால், நான் ஒப்புதல் அளிக்கிறேன்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கும், வேலையைவிட்டு நீக்குவதற்குமான விதிகளை எளிதாக்க வேண்டுமா?
திரு.மோடி: இது மேற்கத்திய வாக்கியம். இந்தியாவில், நாங்கள் மிகவும் நெருக்கமான சுற்றுச்சூழலை கொண்டுள்ளோம். எங்களதுச் சமூகச் சூழலில், ஒரு குடும்பத்தில், தாத்தா ஓட்டுநராக இருந்திருப்பார். அவருக்கு வயதுமுதிர்ந்தவுடன் அவரது பேரன், ஓட்டுநராக வரலாம். எனினும், இந்த மூன்று பேரும் தொடர்ந்து ஒரே குடும்பத்தில் பணியாற்றுவார்கள். இதுவே நமது சூழல். இந்தச் சூழலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் வார்த்தைகளைக் கூறுவது மட்டும் பயனளிக்காது. அதனையும் தாண்டி நீங்கள் பார்க்க வேண்டும்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: ஆசியாவில் அதிக அளவில் நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். எங்கு பார்த்தாலும், அங்குள்ள அரசுகளுடன் நான் பேசும்போது, சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்தியா குறித்து அமெரிக்கா மிகவும் ஆர்வமாக உள்ளது. வளரும் சக்தியான இந்தியா, கூட்டணியாக இல்லாமல், குழுவாகவாவது செயல்படுவதன் மூலம், சீனாவுக்குப் போட்டியாக இருக்க முடியும். சர்வதேச அரங்கில் இந்தியா எந்த நிலையில் உள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
திரு.மோடி: இந்தியாவின் அணிசேராக் கொள்கையை மாற்ற வேண்டியதில்லை. இது பழங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும், முன்பு இருந்ததைப் போன்று, இந்தியா ஒரு மூலையில் நிற்கவில்லை என்பது உண்மை. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்டது. பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் எங்களது பொறுப்புணர்வுகளை நாங்கள் தெளிவாக உணர்ந்துகொண்டுள்ளோம்.
அமெரிக்காவுடனான நல்லுறவைப் பொருத்தவரை, அது உலகின் பழமையான ஜனநாயகம். நாங்கள் மிகப்பெரிய ஜனநாயகமாக உள்ளோம். எங்களது பல்வேறு மதிப்புகள் ஒரே மாதிரியாக உள்ளன. குடியரசு நாடாக இருந்தாலும் சரி அல்லது ஜனநாயக நாடாக இருந்தாலும் சரி, நமது நட்புறவு நீடித்தது. ஒபாமாவும், நானும் சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ளோம் என்பது உண்மை. இருவரது மனஓட்டமும் ஒரே மாதிரியாக உள்ளது. நமது இருதரப்பு நட்புறவையும் தாண்டி, உலக வெப்பமயமாதலாக இருந்தாலும் சரி, அல்லது தீவிரவாதமாக இருந்தாலும் சரி, எங்களது சிந்தனை ஒரே மாதிரியாக உள்ளது. இதன்மூலம், நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். ஆனால், இந்தியா தனது கொள்கைகளை, மூன்றாவது நாட்டின் அடிப்படையில் வகுத்ததில்லை. இனிமேலும் செய்யாது.
சீனாவுடன் இன்று எந்த சண்டையும் கிடையாது. எல்லைப் பிரச்சினை உண்டு. ஆனால், பதற்றமோ, மோதலோ கிடையாது. மக்களுக்கு இடையேயான தொடர்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது. சீனாவில் இந்தியாவின் முதலீடும் அதிகரித்துள்ளது. எல்லைப் பிரச்சினை இருந்தாலும், எந்த மோதலும் நடைபெறவில்லை. 30 ஆண்டுகளில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை. எனவே, பொதுவான நிலைப்பாடு உள்ளது. ஆனால், அது உண்மையில்லை.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: ஆனால், 18-ம் நூற்றாண்டில் இருந்ததைப் போன்ற, விரிவாக்க நடவடிக்கைகளை ஆசியாவுக்கு நாடுகள் எடுத்து வருவதாக அண்மையில் நீங்கள் கூறினீர்கள். சீனாவைக் குறிப்பிட்டு நீங்கள் பேசியதாக நான் கருதுகிறேன். இது சரியா? சீனா குறித்து கவலை கொண்டுள்ள ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா மற்றும் ஜப்பான் ராணுவத்துடன் அதிக நெருக்கமாகப் பணியாற்ற தயாராக உள்ளீர்களா?
திரு.மோடி: இதில், இரண்டு விவகாரங்கள் உள்ளன. எனது பொதுவான கொள்கை என்னவென்றால், 18-ம் நூற்றாண்டின் சிந்தனைகள், 19-ம் நூற்றாண்டுக்கு ஒத்துவராது. 19-ம் நூற்றாண்டின் சிந்தனைகள், 20-ம் நூற்றாண்டுக்கும், 20-ம் நூற்றாண்டின் சிந்தனைகள், 21-ம் நூற்றாண்டுக்கும் ஒத்துவராது. எனது இந்த விரிவான கண்ணோட்டத்தின் அடிப்படையில், விரிவாக்க நடவடிக்கைகளுக்கான காலம் இருந்தது. ஆனால், இது வளர்ச்சிக்கான காலம். பல ஆண்டுகளாக நான் கூறுவது என்னவென்றால், நமது கவனம் வளர்ச்சியில் இருக்க வேண்டும் என்பதுதான்.
உலகம் இரண்டு குழுக்களாக பிரிந்தது ஒரு காலம். அது எப்போதுமே உண்மையாக இருக்காது. இன்று, ஒட்டுமொத்த உலகமும் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளது. அமெரிக்கா, சீனா இடையேயான உறவை நீங்கள் பார்த்தால் கூட, சில விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. எனினும், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்குச் சில பகுதிகள் உள்ளன. அதுவே புதிய வழி. ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள இந்த உலகம் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த விரும்பினால், நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன். அதேநேரம், சர்வதேச வரையறைகள் மற்றும் சர்வதேச விதிகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியம்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: இந்த மூன்று வார்த்தைகளுக்கு உங்களது பதில் என்ன என்று கேட்க விரும்புகிறேன்: அதிபர் டொனால்டு டிரம்ப்?
திரு.மோடி: நான் அரசியல் கட்சி நிர்வாகியாக இருந்தால், நான் கருத்து தெரிவித்திருக்க முடியும். ஆனால், நான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமர். எந்தவொரு நாட்டின் உள்நாட்டு அரசியல் குறித்தும், அதுவும் தேர்தல் உச்சகட்டத்தில் இருக்கும்போது, நான் கருத்து கூறுவது ஜனநாயக மதிப்புகளுக்கு மதிப்பளிப்பதாக அமையாது. எனது ஒழுங்கை நான் கடைப்பிடிப்பேன்.
மற்றொரு வகையில், பிரிட்டனில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தால், நான் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து) கருத்து தெரிவிக்க மாட்டேன். எனினும், அங்கு தேர்தல் நடைபெறவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. எங்களைப் பொறுத்தவரை, நான் பொதுப்படையாகவே கூறியது, ஐரோப்பாவுக்கு நுழைவுவாயிலாக பிரிட்டன் உள்ளது. இந்த சூழ்நிலையில், உலகுக்கு ஒருங்கிணைந்த ஐரோப்பாவே சிறந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: முஸ்லிம்கள் குறித்து டொனால்டு டிரம்ப் பேசியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தற்காலிகமாக தடைவிதிப்பது குறித்து பேசியதை கேட்டிருப்பீர்கள். உங்களது நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். மேலும், உங்களது நாடு உலகில் இரண்டாவது அதிகபட்ச முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்டது. இந்நிலையில், டொனால்டு டிரம்ப்பின் கருத்து ஏராளமான இந்தியர்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். அமெரிக்க அதிபராக வர வாய்ப்பு உள்ள நபரிடமிருந்து இதுபோன்ற கருத்துகளை கேட்கும்போது, உங்களுக்கு கவலை அளிக்கிறதா?
திரு.மோடி: அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின்போது, விவாதிப்பதற்குப் பல்வேறு விவகாரங்கள் உள்ளன. இதற்கு அரசு பதிலளிக்க வேண்டியதில்லை. புதிய அரசு பதவியேற்று, அவர்கள் புதிய சிந்தனைகளைக் கொண்டுவந்தால், யார் வெற்றிபெற்றிருந்தாலும், அரசு என்ற முறையில் நிச்சயமாக நாங்கள் பதிலளிப்போம். தேர்தல் விவாதங்களின் ஒரு பகுதியாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படும். யார் என்ன சாப்பிட்டார்கள், யார் என்ன குடித்தார்கள் என்றெல்லாம் வரும். ஒவ்வொன்றுக்கும் நான் எவ்வாறு பதிலளிக்க முடியும்?
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: ரிசர்வ் வங்கி ஆளுநராக திரு.ராஜனை மீண்டும் நியமிக்க நீங்கள் ஆதரவு தருகிறீர்களா?
திரு.மோடி: நான் யோசிக்கவில்லை. இது நிர்வாக விவகாரம். ஊடகங்களுக்கு இது விவகாரமாக இருக்கலாம். அதோடு, இது செப்டம்பர் மாதத்திலேயே நடைபெற உள்ளது.
இதற்கு மேல், கேள்விகளுக்கு எழுத்துமூலமாக திரு.மோடி அளித்த பதில்களைப் பார்ப்போம்…
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: உங்களது வெற்றி, இந்தியப் பொருளாதாரம் குறித்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உலக பொருளாதார நிலையை மாற்ற இந்தியாவால் என்னென்ன முக்கிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்?
திரு.மோடி: நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் பொருளாதாரம், கொள்கை குழப்பங்களால் மிகவும் மோசமான வீழ்ச்சியில் இருந்தது. அதிக ஊழல் இருந்தது. மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், நம்பிக்கையை இழந்திருந்தனர். எங்களது முதல் இலக்கு, வீழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்து, பொருளாதாரத்தை சீரான பாதைக்குக் கொண்டுசெல்வதாக இருந்தது. இரண்டாவது இலக்கு, வளர்ச்சியைத் தொடங்குவது. இந்த இரண்டையும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். இதில், முரண்பாடு என்னவென்றால், உலகப் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தபோது, அதன் பலனை இந்தியா பெறாமல் இருந்ததுதான். தற்போது, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது, சர்வதேசப் பொருளாதாரம் மோசமாக உள்ளது.
இந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவை நிலைநிறுத்தவும், உலகத்தை மாற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நீடித்த வளர்ச்சிக்காக வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். பல ஆண்டுகளில் மிகவும் எச்சரிக்கையான பருவினப் பொருளாதார நிர்வாகத்தை நடத்தியுள்ளோம். நிதிப் பற்றாக்குறையையும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் குறைத்துள்ளோம். அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைத் தாராளமயமாக்குதல், எளிதில் தொழில் செய்வதற்கான வழிவகைகளை அதிகரித்தல், யூகிக்கக் கூடிய வகையில் வரிவிதிப்பு முறையைக் கொண்டுவந்தது ஆகியவற்றின் மூலம், முதலீட்டை ஈர்த்து, முதலீட்டுக்கான இடமான இந்தியாவை மாற்றியுள்ளோம். இந்த முன்னோக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: எதிர்காலத்துக்காக இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று எப்போது சிந்தித்தீர்கள்? இதற்கு நீங்கள் எந்த நாடுகளை மாதிரியாக பார்க்கிறீர்கள்? எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று எந்தெந்த நாடுகள் அறிவுறுத்தின?
திரு.மோடி: இந்தியா ஒரு மிகப்பெரிய மற்றும் வேற்றுமை கொண்ட நாடு. பல்வேறு நாடுகளிலும் பல்வேறு துறைகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டு, அந்த சிறப்பான நடவடிக்கைகளைப் பின்பற்றலாம். அமெரிக்கர்களின் ஒழுங்குமுறை செயல்பாடுகள், ஜப்பானியர்களின் தர மேம்பாடு, ஐரோப்பாவின் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை பின்பற்றலாம். இதற்கு மேலாக, நமது மாதிரி, நாம் சொந்தமாக உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். அது நமது கொள்கையில் வேர்விட்டு பரவியதாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கை பகுதி என்பது, நமது வளர்ச்சி மாதிரி என்பது இந்திய சன்ஸ்கிரிதி அல்லது கலாசாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். வளர்ந்த உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் தவிர்க்க வேண்டும். இது நமக்கு கற்பிப்பது என்னவென்றால், வாழ்க்கையை நிதானமாக வாழ வேண்டும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். கழிவுகளைத் தவிர்க்க வேண்டும். நமது மூதாதையர்கள், தங்களுக்கு தேவையானதைவிட, குறைவாகப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு அதிகமாக விட்டுச் சென்றுள்ளனர். இது பொருளாதாரத்தை விட, சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் பொருந்தும். இந்தக் கொள்கை, இந்தியாவுக்கு நீடித்த வளர்ச்சியை எட்டச் செய்வதற்கு உதவுவதோடு, சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், உலகுக்கு புதிய பாதையைக் காட்டுவதாகவும் அமையும்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: பொருளாதாரத்தில் அரசின் சரியான பங்கு என்ன?
திரு.மோடி: பொருளாதாரத்தில் அரசின் பங்கை, எனது மேக்சிம் கொள்கையில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதாவது, “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை.” வாய்ப்பை ஏற்படுத்துபவராக அரசு இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான சூழலை ஏற்படுத்தும் நியாயமான மற்றும் வெளிப்படையானவராக இருக்க வேண்டும். வளரும் பொருளாதாரத்தில், அரசு நிறுவனங்கள், சில துறைகளில் பங்கு வகிக்கின்றன. அதனை தொழில் நிபுணத்துவத்துடனும், திறமையாகவும் நிர்வகிக்க வேண்டும். நாங்கள் அவற்றை சுதந்திரமாக செயல்பட செய்துள்ளோம். இதனை வலுப்படுத்துவதற்கு தனியார் துறையிலிருந்தும் திறமையானவர்களை கொண்டுவரலாம். அரசு சில துறைகளில் வர்த்தகம் செய்ய வேண்டியதில்லை. பாதுகாப்புத் துறையில் அரசின் பங்களிப்பைக் குறைக்க புதிய கொள்கையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். பாதுகாப்புத் துறையில் விற்பனைப் பணியில் ஈடுபடுவதற்காக நிறுவனங்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: மக்களுக்கு செலவிடும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள இந்தியா தயாராக உள்ளதா? இதனை செய்வதால் ஏற்படும் அரசியல் விளைவுகள் என்னவாக இருக்கும்?
திரு.மோடி: உங்களது நாடு உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான திட்டங்கள் உள்ளன. நீங்கள் வேலைவாய்ப்பின்மைக்கான பலன்கள் மற்றம் உணவுக்கான வழிவகைகளை வழங்குகிறீர்கள். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை எடுத்துக் கொண்டீர்களானால், பணத்தை இலவசமாக கொடுப்பதற்குப் பதிலாக, வேலைவாய்ப்பை வழங்கி வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், தொழிலாளர்களுக்கு கவுரவத்தை அளிக்க நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம். பொருளாதார மேம்பாட்டுக்கு இது முதல் படியாகும். இந்தத் திட்டங்களுக்கான பலன்கள் சரியாக சென்றுசேராமல் தடுத்த குளறுபடிகளை தொழில்நுட்பத்தின் மூலம் நீக்கிவிட்டோம். அவர்களை ஒருங்கிணைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், நீர்நிலைகளை உருவாக்குதல், பயிற்சி அளித்து நிரந்தர திறனை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: பிரதமராக இருப்பது, குஜராத் மாநில முதலமைச்சர் பதவியில் இருப்பதிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
திரு.மோடி: முதலமைச்சராக பணியாற்றிவிட்டு பிரதமர் பதவிக்கு ஒரு சிலரே வந்துள்ளனர். ஆனால், அதில் யாரும் என்னைப் போல, முதலமைச்சராக அதிக காலம் பணியாற்றியதில்லை. எங்களது கூட்டாட்சி அமைப்பில், பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையிலான பல்வேறு திட்டங்கள், மாநில அளவிலேயே செயல்படுத்தப்படுகின்றன. எனவே, முதலமைச்சராகப் பணியாற்றிய அனுபவம், பிரதமர் என்ற முறையில், எனக்கு மிகப்பெரும் பலம் என்பதை நான் அறிந்தேன். நான் கூட்டுறவு கூட்டாட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இதில், அனைத்து மாநிலங்களும் சமமான கூட்டாளிகள். வேறு கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று நாங்கள் வேறுபாடு பார்ப்பதில்லை. நாட்டுக்குப் பயனளிக்கும் வகையில், சீர்திருத்தங்களைச் செய்ய அனைத்து மாநிலங்களையும் தீவிரமாக ஊக்குவிக்கிறோம்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: இந்தியா தனது முழுத் திறனையும் பயன்படுத்தி வளர்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
திரு.மோடி: எங்களது தற்போதைய வளர்ச்சியை இந்த நிலையில் பாருங்கள். பொருளாதார நெருக்கடி இருந்த நேரத்தில், நாங்கள் பதவிக்கு வந்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வறட்சி, சர்வதேச வீழ்ச்சி ஆகியவற்றை எதிர்கொண்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், நாங்கள் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளோம். நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தற்போதுதான் தொடங்கியுள்ளது. இது முழுத் திறனையும் வெளிப்படுத்தும். மேலும் முன்னேற்றமடைவதற்காக வலுவான அடித்தளம் உள்ளது. சர்வதேச நிலை முன்னேற்றமடைந்தால், இந்தியாவுக்கான வாய்ப்புகள் மிகவும் சிறப்பாக இருக்கும். எனினும், இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிக வளர்ச்சி விகிதம் என்று சில ஆண்டுகளுக்கு மட்டுமே இருப்பது போதாது. எந்த நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிக வளர்ச்சி விகிதம் நீடிக்க வேண்டும் என்று சர்வதேச அனுபவங்கள் காட்டுகின்றன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: உங்களது பொருளாதார தத்துவம், ஆளுகை நிலைப்பாடு, வறுமையை ஒழிப்பதற்கான கண்ணோட்டம் ஆகியவை, காங்கிரஸிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
திரு.மோடி: வறுமையை ஒழிக்க இரண்டு வழிகள் உள்ளன. வறுமையை அரசு ஒழிக்க முடியும் அல்லது அரசும், ஏழைகளும் ஒன்றாக இணைந்து வறுமையை ஒழிக்கலாம். வறுமையை ஒழிக்க அரசு முயற்சி மேற்கொள்ளும்போது, ஏழைகளுக்கு உதவ முயற்சி மேற்கொள்வது அவசியம். அரசும், ஏழைகளும் இணைந்து வறுமையை ஒழிக்கும்போது, ஏழைகள் மேம்பாடு அடைவார்கள், அவர்களே சுயசார்பை அடைந்து, தங்களது வறுமையை ஒழிக்கும் கருவியைப் பெறுவார்கள். இந்த கூட்டு நடவடிக்கையில் அரசின் பங்களிப்பு என்பது, ஏழைகளுக்கு வளங்களையும், வாய்ப்புகளையும் கொடுத்து, கைத்தாங்கலாக இருப்பதாகும். வறுமையை ஒழிப்பதில் கூட்டு நடவடிக்கையை நான் நம்புகிறேன். ஆளுகை விவகாரத்தில் முக்கியமான வேறுபாடு என்பது எனது வெளிப்படைத்தன்மை, வேகம், சிறப்பாக செயல்படுத்துவது ஆகியவை உள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் குறித்து உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
திரு.மோடி: என்னைப் பொறுத்தவரை, சீர்திருத்தம் என்பது சாதாரண மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவது தான். நாங்கள் அந்நிய முதலீட்டு அளவை அதிகரித்து புதிய காப்பீட்டு சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். பணவீக்கத்தை இலக்காகக் கொண்டு ரிசர்வ் வங்கிக்கு சுதந்திரமான நிதிக் கொள்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திவால் நடவடிக்கை வழிமுறைகளை கொண்டுவந்துள்ளோம், ரியல் எஸ்டேட்டுக்கான ஒழுங்கு வழிகாட்டி முறைகளை ஏற்படுத்தியுள்ளோம். அரசின் நிர்வாக செயல்பாடுகள் மூலம், பாதுகாப்புத் துறை உள்பட பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டுக்கு அனுமதித்து மாபெரும் சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளோம். இதேபோல, எரிபொருள் விலை நிர்ணய கட்டுப்பாட்டை விட்டுத் தந்துள்ளோம். பங்குச்சந்தைகளை பட்டியலிடுவதற்கு அனுமதி அளித்துள்ளோம். பல்வேறு புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்கியுள்ளோம். ஏழைகள் உள்பட ஒவ்வொரு குடும்பத்தினரும் வங்கிக் கணக்கு வைத்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். ஒரு காலத்தில் இவையெல்லாம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்பட்டன. என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை மறக்காமல், செய்யப்படாமல் இருப்பதை மட்டுமே விளைவுகளை ஏற்படுத்துபவை என்று கூறுங்கள் என்று நான் தெரிவித்தேன்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த வேண்டும் என்ற உங்கள் முடிவுக்கு யார் காரணம்?
திரு.மோடி: ஒரு காலத்தில், நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது தலைநகரங்களுடன் மட்டும் இருந்தது: வாஷிங்டன் மற்றும் தில்லி அல்லது லண்டன் மற்றும் பெய்ஜிங். இந்தியாவுடன் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு கொண்ட நாடு அமெரிக்கா. அமெரிக்கா குடியரசுக் கட்சி ஆட்சியில் உள்ளதா ஜனநாயகக் கட்சி ஆட்சியில் உள்ளதா என்பதைப் பற்றி கவலைப்படாமல், அமெரிக்காவுடன் நல்ல நல்லுறவை நாங்கள் வைத்திருந்தோம். கடந்த 2 ஆண்டுகளில், அதிபர் ஒபாமாவும், நானும் புதிய வாய்ப்பைப் பெற்றோம். நமது பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார வாய்ப்புகள், மக்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகியவற்றில் உண்மையான பலம் மற்றும் அளவை பயன்படுத்திக் கொண்டோம். நமது நல்லுறவு என்பது இருநாட்டுத் தலைவர்களின் வசிப்பிடங்களையும் கடந்தது.
நமது கவலைகளும், அச்சுறுத்தல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. பொதுவான சவால்களான, தீவிரவாதம், இணையதள பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை எதிர்கொள்ள நல்லுறவை வளர்த்துக் கொண்டோம். நம்மிடம் வலுவான மற்றும் வளரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளது. விற்பவர்-வாங்குபவர் என்ற உறவைத் தாண்டி, வலுவான முதலீடு மற்றும் உற்பத்திசெய்யும் அளவுக்கு நல்லுறவு வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் முதலீடு அதிகரிப்பு மற்றும் ராணுவத்தை நிறுத்துவது குறித்து உங்களது பார்வை என்ன? புதிய கடல்சார் பட்டு சாலை முயற்சிகள் போன்ற ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும் சீனாவின் முயற்சிகளில் இந்தியா சேர்வதால், இந்தியாவுக்கு ஆதாயம் கிடைக்குமா?
திரு.மோடி: 7,500 கிலோமீட்டர் நீள கடலோரப் பகுதிகளுடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளில் இயற்கையான மற்றும் உடனடி பங்கு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுடன் நாம் நல்லுறவை வைத்துள்ளோம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பு அளிக்கும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மிகவும் எச்சரிக்கையுடன் கண்காணிப்போம். நூற்றாண்டுகளாகவே இணைப்பு என்பது மனித வளர்ச்சிக்கானதாகவே உள்ளது. சிறந்த இணைப்பை ஏற்படுத்துவதற்காக நமது பிராந்தியத்திலும், அதனைத் தாண்டியும் கட்டமைப்பை ஏற்படுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடல்சார் பட்டு சாலை முயற்சியைப் பொருத்தவரை, இது சீனாவின் முயற்சி. இந்த முயற்சி குறித்து, குறிப்பாக நோக்கம் மற்றும் திட்டம் குறித்து சீனாவிடமிருந்து அதிக அளவில் உலகம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: பாகிஸ்தானுடனான உறவில் அண்மையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? லாகூருக்கு நேரடியாக நீங்களே சென்று பிரதமர் ஷெரீப்பை சந்திக்கச் சென்றது என்ன? உறவு மேம்படுவதன் மூலம், தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்று கருதுகிறீர்களா?
திரு.மோடி: எனது அரசு பதவியேற்ற நாள் முதலே, அமைதியான மற்றும் வளமான அண்டை நாடு இருக்க வேண்டும் என்பதையே தீவிர கொள்கையாக வைத்துள்ளோம். இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அதே எதிர்காலம் நமது அண்டை நாடுகளுக்கும் இருக்க வேண்டும் என்பதே கனவு என்று நான் கூறியிருக்கிறேன். இந்த நம்பிக்கையின் தெளிவான வெளிப்பாடாகவே எனது லாகூர் பயணம் அமைந்தது.
(இந்தியாவும், பாகிஸ்தானும்) ஒருவருக்கொருவர் மோதுவதை விடுத்து, இருவரும் இணைந்து வறுமைக்கு எதிராக போராட வேண்டும் என்று நான் எப்போதுமே கூறிவந்துள்ளேன். இதில், பாகிஸ்தான் அதன் பங்கை செய்ய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஆனால், தீவிரவாதத்தில் எந்த சமரசமும் கிடையாது. தீவிரவாதத்தை ஆதரிக்கும், எந்த அரசோ, அல்லது தனி அமைப்புகளோ அதனை முழுமையாக நிறுத்திக் கொண்டால் மட்டுமே, தீவிரவாதத்தை நிறுத்த முடியும். தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துபவர்களை தண்டிக்கும் வகையிலான உரிய நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் தவறியதால், நமது உறவில் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
நமது நல்லுறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தானாகவே உருவாக்கியுள்ள தீவிரவாதம் என்ற தடையை பாகிஸ்தான் நீக்கிவிட்டால், உண்மையிலேயே நமது நல்லுறவு புதிய உச்சத்தை எட்டும் என்பதே எனது கருத்து. முதல் படியை எடுத்துவைக்க நாங்கள் தயார், ஆனால், அமைதிக்கான நடவடிக்கை என்பது இருவழிப்பாதை ஆகும்.