Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் சர்வதேச கடற்படுக்கை ஆணைக்குழுவுக்கும் இடையே உள்ள பாலிமெட்டாலிக் முடிச்சுகளைப் பற்றிய ஆய்வு நீட்டிப்புக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.


இந்திய அரசாங்கத்தின் புவி அறிவியல் அமைச்சரவைக்கும், சர்வதேச கடற்படுக்கை ஆணைக்குழுவுக்கும் இடையே இருந்த பாலிமெட்டாலிக் முடிச்சு தொடர்பான ஆய்வு ஒப்பந்தத்தை இன்னும் ஐந்து வருடத்துக்கு(2017 -2022) நீட்டிக்க இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் மார்ச் 24, 2017-ஆம் ஆண்டோடு நிறைவடைகிறது.

இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதன் மூலமாக மத்திய இந்தியப் பெருங்கடல் வடிநிலத்தில் ஒதுக்கப்பட்ட பகுதியில் இந்தியா மேற்கொண்டுவரும் பாலிமெட்டாலிக் முடிச்சுகள் தொடர்பான ஆய்வை பிரத்யேகமாக மேற்கொள்ள முடியும். அதோடு தேசிய ஆட்சி எல்லைக்கும் அப்பாற்பட்டு வணிக வளங்கள் தொடர்பான புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். பிற சர்வதேச நாடுகளும் பங்கு கொண்டு செயலாற்றிவரும் இந்தியப் பெருங்கடல் வடிநிலப்பகுதியில் இந்தியாவும் தொடர்ந்து பங்கு பெறும்.

பின்னணி:

பாலிமெட்டாலிக் முடிச்சுகளை மேங்கனீஸ் முடிச்சுகள் என்றும் சொல்வார்கள். இவை உருளை வடிவில் இருக்கக்கூடிய ஓட்டைகள் கொண்ட பெரிய முடிச்சுகள். உலகெங்கும் உள்ள கடல்களின் தரைத்தளத்தில் ஆழ்கடலில் அதிகமாக இருப்பவை இவை. மேங்கனீஸ், இரும்பு தவிர நிக்கல், தாமிரம், கோபால்ட், ஈயம், மாலிப்டெனம், கேட்மியம், வனேடியம், டைட்டானியம் போன்ற பல உலோகங்கள் இருக்கின்றன. இவற்றில் நிக்கல். தாமிரம் மற்றும் கோபால்டுக்கு நல்ல வணிக மதிப்பு இருக்கிறது. மந்திரிசபையின் ஒப்புதலுடன், 2002ம் வருடம் 25 மார்ச் அன்று சர்வதேச கடற்படுக்கை ஆணைக்குழுவுடன் (கடல் சார் சட்ட அமைப்பின் மூலமாக உருவாக்கப்பட்ட ஆணைக்குழு. இதில் இந்தியாவும் ஒரு உறுப்பினர்) பாலிமெட்டாலிக் முடிச்சுகள் பற்றி ஆய்வு செய்ய 15 வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்டது இந்தியா. நமது நாட்டின் தென்முனையில் இருந்து 200 கி.மீ தூரத்தில் கிட்டத்தட்ட 75,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரதேசம் தற்போது இந்தியாவிடம் உள்ளது.

ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகளின்படி இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களான தேசிய சமுத்திரவியல் நிறுவனம், தாது மற்றும் மூலப்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய உலோகவியல் ஆய்வகம், அண்டார்டிகா மற்றும் கடல் ஆய்வு தொடர்பான தேசிய மையம், கடல்சார் தொழில்நுட்ப தேசிய நிறுவனம் ஆகியவற்றின் மூலம் நில அளவை, ஆய்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு போன்ற பல விஷயங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து கடமைகளையும் இந்தியா நிறைவேற்றி வருகிறது.