இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சுவிஸ் மற்றும் இந்திய நாட்டினரை அடையாளம் காணுதல் மற்றும் திரும்ப அனுப்பத் தேவையான புரிந்துணர்வு ஏற்பாட்டில் கையெழுத்திட இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இயங்கும் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான கடவுச்சீட்டு அற்ற ஒப்பந்தத்தோடு இருதரப்புக்கு இடையேயான இந்த ஏற்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் ஒழுங்கற்ற முறையில் புலம் பெயர்ந்தோரை திரும்ப அவரவர் நாட்டுக்கு அனுப்பும் பணிக்கு இனி அதிக சேவைகளோ அல்லது காலவரையோ நிர்ணயிக்கத் தேவையில்லை என்பதுதான் இந்த ஏற்பாட்டின் முக்கிய குறிக்கோள். இந்தியாவில் இருந்து ஒழுங்கற்ற முறையில் சுவிட்சர்லாந்தில் குடியிருப்போரின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவே என்பது இதில் குறிப்பிடத்தகுந்தது. சுவிட்சர்லாந்துடனான இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இதையே மாதிரியாகக் கொண்டு, இதே பிரச்சினையை தொடர்ச்சியாக வலியுறுத்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். அதேபோல் முறையாக இந்த நாடுகளுக்குப் பயணிக்கும் இந்தியர்களின் கடவுச்சீட்டு மற்றும் வேலை அனுமதிச் சீட்டு தொடர்பான மறுஅனுமதி ஒப்பந்தத்தையும் தளர்த்த இந்த ஏற்பாடு வழி வகுக்கும். சமீபத்தில் இந்திய – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையேயான புலம் பெயர்வு மற்றும் நகர்வு சார்ந்த பொதுவான செயல்திட்டம் இதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.