எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். புதிய விஷயங்களுடன், புதிய கருத்தூக்கம் அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுக்களுடன், புதிய புதிய செய்திகளைத் திரட்டி, மீண்டும் ஒருமுறை உங்களுடன் மனதின் குரல் நிகழ்ச்சியில இணைய நான் வந்திருக்கிறேன். இந்த முறை அதிகபட்ச கடிதங்களும், செய்திகளும் எனக்கு எந்த விஷயம் குறித்து வந்திருக்கின்றன தெரியுமா? இந்த விஷயம் கடந்தகாலம், தற்காலம், வருங்காலம் என மூன்றோடும் கலந்திருக்கின்ற ஒன்று. தேசத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதமமந்திரி அருங்காட்சியகம் குறித்து நான் பேசுகிறேன். இந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளன்று பிரதம மந்திரி அருங்காட்சியகமானது நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. இது, தேசத்தின் குடிமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டிருக்கிறது. சார்த்தக் என்ற ஒரு நேயர், குருகிராமில் வசித்து வருகிறார், முதல் வாய்ப்பு கிடைத்தவுடனேயே இவர் இந்த பிரதம மந்திரி அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வந்திருக்கிறார். சார்த்தக் அவர்கள் நமோ செயலியில் அனுப்பி இருக்கும் செய்தியில், இது மிக சுவாரசியமாக இருப்பதாக எழுதி இருக்கிறார். பல ஆண்டுகளாக செய்தி மின்னூடகங்களைப் பார்த்து வருவதாகவும், செய்தித்தாள்களைப் படிப்பதாகவும், சமூக ஊடகங்களோடு தொடர்பு கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு, இவை காரணமாக தன்னுடைய பொது அறிவு மிகவும் நன்றாக இருக்கும் என்று கருதியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரதம மந்திரி அருங்காட்சியகம் சென்ற போது அவர் திகைத்துப் போயிருக்கிறார், தனது நாடு, தனது நாட்டிற்குத் தலைமை தாங்குவோர் பற்றிய பல விஷயங்கள் தனக்குத் தெரியவில்லை என்பதையும் அவர் உணர்ந்திருக்கிறார். இவர். பிரதம மந்திரி அருங்காட்சியகத்தின் சில அம்சங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். இவை இவருடைய ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக இவர் லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் மாமனார் வீட்டு சீதனமாக அளிக்கப்பட்ட ராட்டினத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்திருக்கிறார். அவர் சாஸ்திரி அவர்களின் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் பார்த்திருக்கிறார், இதில் அவருடைய சேமிப்பு எத்தனை குறைவாக இருந்திருக்கிறது என்பதையும் பார்க்க முடிந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறும் முன்பாக மொரார்ஜி பாய் தேசாய் அவர்கள் குஜராத்தில் துணை ஆட்சியராக இருந்திருக்கிறார் என்பது அப்போது தான் சார்த்தக் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆட்சிப் பணியில் அவருக்கு ஒரு நீண்ட பணி எதிர்காலம் இருந்தது. ஜமீன்தாரி ஒழிப்புத்துறையில் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருந்தது என்று சரண் சிங் அவர்களைப் பற்றி சார்த்தக் அவர்கள் எழுதுகிறார். இது மட்டுமல்ல, மேலும் அவர் குறிப்பிடுகையில், நிலச் சீர்திருத்தங்கள் விஷயத்தில், பி. வி. நரசிம்ம ராவ் அவர்கள் மிக ஆழமான ஆர்வம் உடையவராக இருந்தார் என்று தனக்குத் தெரிய வந்ததாக அவர் எழுதியிருக்கிறார். இந்த அருங்காட்சியகத்திற்கு வந்த பின்னர் தான், சந்திரசேகர் அவர்கள், 4000 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடைப்பயணம் செய்து, ஒரு வரலாற்று சாதனையாக பாரதப் பயணத்தை மேற்கொண்டார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் அருங்காட்சியகத்தில் அடல் அவர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பார்த்திருக்கிறார், அவருடைய உரைகளைக் கேட்டிருக்கிறார், மிகவும் பெருமிதமாக உணர்ந்ததாக எழுதியிருக்கிறார். மேலும் சார்த்தக் அவர்கள் எழுதும் போது, இந்த அருங்காட்சியகத்திலே, அண்ணல் காந்தியடிகள், சர்தார் படேல், டாக்டர். அம்பேட்கர், ஜய் பிரகாஷ் நாராயண் இவர்களைத் தவிர நமது பிரதம மந்திரியாக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு பற்றியும் பல சுவாரசியமான தகவல்கள் தமக்குக் கிடைத்ததாக எழுதியிருக்கிறார்.
நண்பர்களே, தேசத்தின் பிரதம மந்திரிகளின் பங்களிப்பை நினைவில் கொள்ளும் வகையிலே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவத்தை விடச் சிறப்பான தருணம் வேறு என்னவாக இருக்க முடியும், சொல்லுங்கள்? சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவமானது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்து வருகிறது என்பது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒன்று. வரலாறு தொடர்பாக மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் பிரதம மந்திரி. அருங்காட்சியகமானது இளைஞர்களைக் கவரக்கூடிய ஒரு மையமாக மாறி வருகிறது, அவர்கள் தேசத்தின் விலைமதிப்பில்லாத மரபோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றார்கள்.
மேலும் நண்பர்களே, அருங்காட்சியகம் பற்றிய இத்தனை விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், உங்களிடம் சில வினாக்களை எழுப்ப வேண்டும் என்று என் மனம் கூறுகிறது. உங்களுடைய பொது அறிவு எப்படி இருக்கிறது, உங்களுக்கு எந்த அளவுக்குத் தகவல்கள் தெரிந்திருக்கின்றன என்று பார்க்கலாமா? என் இளைய நண்பர்களே, நீங்கள் தயாராக இருக்கிறீர்களா, பேனாவும், காகிதமும் தயாரா? இப்போது நான் எழுப்ப இருக்கும் வினாக்களுக்கான விடைகளை நீங்கள் நமோ செயலியிலோ, சமூக ஊடகத்திலோ, #MuseumQuiz என்பதிலோ பகிர்ந்து கொள்ளலாம், கண்டிப்பாகப் பகிருங்கள். நீங்கள் இந்த அனைத்து வினாக்களுக்குமான விடைகளைக் கண்டிப்பாக அளியுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இதனால் நாடெங்கிலும் இருப்போருக்கு அருங்காட்சியகம் மீதான ஆர்வம், சுவாரசியம் மேலும் அதிகரிக்கும். சரி, தேசத்தில் எந்த நகரத்திலே ஒரு பிரசித்தி பெற்ற ரயில் அருங்காட்சியகம் இருக்கிறது தெரியுமா? இங்கே கடந்த 45 ஆண்டுகளாக, இந்திய ரயிலின் பாரம்பரியம் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்து வருகிறது. சரி நான் மேலும் ஒரு துப்பு அளிக்கிறேன். இங்கே நீங்கள் Fairy Queen, Saloon of Prince of Wales முதற்கொண்டு, Fireless Steam Locomotive, அதாவது நெருப்பில்லா நீராவி எஞ்ஜினையும் காண முடியும். அடுத்து, மும்பையின் எந்த அருங்காட்சியகத்தில், மிக சுவாரசியமான முறையில் பணத்தின் பரிணாம வளர்ச்சியைக் காண முடியும் தெரியுமா? இங்கே பொதுவாண்டிற்கு 600 ஆண்டுகளுக்கும் முன்பாக புழங்கிய நாணயங்கள் உள்ளன. அதே மறுபுறத்தில் e-Money என்ற மின்னணுப் பணமும் இருக்கிறது. மூன்றாவது கேள்வி, விராஸத் ஏ கால்ஸா இந்த அருங்காட்சியத்தோடு இணைந்திருக்கிறது. இந்த அருங்காட்சியகமானது, பஞ்சாபின் எந்த நகரத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காற்றாடி விடுவதில் உங்களுக்கு எல்லாம் மிகுந்த ஆர்வமும் ஆனந்தமும் உண்டு தானே!! அடுத்த கேள்வி இதோடு தொடர்புடையது. தேசத்தின் ஒரே காற்றாடி அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது? சரி, நான் உங்களுக்கு ஒரு துப்பு கொடுக்கிறேன்; இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய பட்டத்தின் அளவு 22 அடிக்குப் 16 அடி ஆகும். மேலும் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். இது எந்த நகரத்தில் இருக்கிறதோ, அதற்கு அண்ணலோடு விசேஷமான தொடர்பு உண்டு. சிறுவயதில் தபால் தலைகள் சேமிப்பு மீதான ஆர்வம் யாருக்குத் தான் இருக்காது! ஆனால், தபால் தலைகளோடு தொடர்புடைய தேசிய அருங்காட்சியகம் எங்கே இருக்கிறது தெரியுமா? நான் உங்களிடத்திலே மேலும் ஒரு வினாவை எழுப்புகிறேன். குல்ஷன் மஹல் என்ற பெயர் கொண்ட கட்டிடத்தில் இருக்கும் அருங்காட்சியகம் என்ன? உங்களுக்கான துப்பு, இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் திரைப்பட இயக்குநராகவும் ஆக முடியும், கேமரா, எடிட்டிங் ஆகியவற்றை நெருக்கமாகக் காண முடியும். சரி, பாரதத்தின் ஜவுளியோடு தொடர்புடைய பாரம்பரியத்தைக் கொண்டாடக்கூடிய அருங்காட்சியம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருகிறீர்களா? இந்த அருங்காட்சியகத்தில் சிறிய அளவிலான ஓவியங்கள், ஜைன சமய ஓலைச்சுவடிகள், சிற்பங்கள் என ஏராளமான விஷயங்கள் உள்ளன. இவை தனித்தன்மையான காட்சிப்படுத்தலுக்காகப் பெயர் போனவை.
நண்பர்களே, தொழில்நுட்பத்தின் இந்தக் காலகட்டத்தில் இவற்றுக்கான விடைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. இந்தக் கேள்விகளை நான் ஏன் கேட்கிறேன் என்றால், நமது புதிய தலைமுறையினரின் ஆர்வம் இதனால் அதிகரிக்க வேண்டும், இவை பற்றி அவர்கள் படிக்க வேண்டும், இவற்றைக் காணப் பயணிக்க வேண்டும் என்பதற்காகத் தான். இப்போது அருங்காட்சியகங்களின் மகத்துவத்தை உணர்ந்து, பலர், தாங்களே முன்வந்து, அருங்காட்சியகங்களுக்காகக் கணிசமான அளவு நன்கொடை அளித்து வருகிறார்கள். பலர் தங்களிடம் இருக்கும் பழைமையான பொருட்களையும், சரித்திர முக்கியத்துவம் பெற்ற பொருட்களையும் கூட, அருங்காட்சியகங்களுக்குத் தானமாக அளித்து வருகிறார்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் போது, நீங்கள் ஒரு கலாச்சார மூலதனத்தை, ஒட்டுமொத்த சமூகத்தோடும் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று பொருள். பாரதத்திலும் மக்கள் இப்போது இதன் பொருட்டு முன்வருகிறார்கள். இப்படிப்பட்ட தனிப்பட்ட முயல்வுகள் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன். இன்று, மாறிவரும் காலகட்டத்திலே, கோவிட் வழிகாட்டுதல் நெறிமுறைகள் காரணமாக அருங்காட்சியகங்களில் புதிய வழிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அருங்காட்சியகங்களில் டிஜிட்டல் மயமாக்கல் மீதும் கவனம் அதிகரித்திருக்கிறது. மே மாதம் 18ஆம் தேதியன்று உலகம் முழுவதிலும் சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடவிருக்கிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். இதை கவனத்தில் கொண்டு, நமது இளைய நண்பர்களுக்காக என்னிடத்திலே ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஏன் வரவிருக்கும் விடுமுறை நாட்களில், நீங்களும் உங்களுடைய நண்பர்களும் இணைந்து, ஏதோ ஒரு அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு வரக்கூடாது! நீங்கள் உங்களுடைய அனுபவங்களை #MuseumMemories என்பதிலே பகிர்ந்து கொள்ளலாமே!! இப்படிச் செய்வதன் மூலம் மற்றவர்களின் மனதிலும் கூட அருங்காட்சியகங்கள் மீதான ஆர்வம் விழிப்படையும்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல உறுதிப்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம், அவற்றை நிறைவேற்ற கடினமாக உழைத்திருக்கலாம். நண்பர்களே, ஆனால் தற்போது தான், எனக்கு இப்படிப்பட்ட ஒரு மனவுறுதிப்பாடு பற்றித் தெரிய வந்தது, இது உண்மையிலேயெ மிகவும் வித்தியாசமானது, மிகவும் அலாதியானது. ஆகையால், இதைப் பற்றி மனதில் குரல் நேயர்களோடு கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
நண்பர்களே, ஒருவர் தனது வீட்டை விட்டுப் புறப்படும் போது, இன்று நான் நகரெங்கும் சுற்றுவேன், ஆனால் ஒருமுறை கூட ரொக்கப்பணப் பரிவர்த்தனையில் ஈடுபட மாட்டேன் என்ற ஒரு உறுதிப்பாட்டை மனதில் ஏற்றிக் கொண்டு செல்கிறார் – சுவாரசியமான உறுதிப்பாடு இல்லையா!! தில்லியில் இரு பெண்களான சாகரிகாவும், ப்ரேக்ஷாவும் இப்படிப்பட்ட ஒரு ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை செய்யும் நாள், என்ற ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்கள். சாகரிகாவும், ப்ரேக்ஷாவும் தில்லியில் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை செய்ய முடிந்தது. யூபிஐ க்யூ ஆர் குறியீடு காரணமாக அவர்களுக்கு ரொக்கப் பணத்தை எடுக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை. எந்த அளவுக்கு என்றால், தெருவோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளிலும் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் நிகழ்நிலை பரிவர்த்தனை வசதி கிடைத்தது.
நண்பர்களே, இது தில்லி, மாநகர், இங்கே இவை எல்லாம் கிடைப்பது சுலபம் என்று நினைக்கலாம். ஆனால் இப்போது எல்லாம் யூ பி ஐயின் பரவலாக்கம், தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டும் இருக்கிறது என்பது கிடையாது. காஜியபாதிலிருந்து ஆனந்திதா திரிபாடீ அவர்கள் எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். ஆனந்திதா அவர்கள் கடந்த வாரத்தில் தனது கணவரோடு வடகிழக்கு மாநிலப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறார். அவர் அஸாம் தொடங்கி மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்க் வரை தனது பயண அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதாவது, பல நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், தொலைவான பகுதிகளிலும் அவர் ரொக்கத்தைத் தனது கணக்கிலிருந்து எடுக்கத் தேவையே இருக்கவில்லை என்பது உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கலாம். எந்த இடங்களில், சில ஆண்டுகள் முன்பு வரை, இணையச் சேவைகள் கூட சரிவர இருக்கவில்லையோ, அங்கெல்லாம் கூட இப்போது யூபிஐ வாயிலாகப் பணம் செலுத்தல் வசதிகள் இருக்கின்றன. சாகரிகா, பிரேக்ஷா, ஆனந்திதா ஆகியோரின் அனுபவங்களைக் காணும் போது, நான் உங்களிடத்திலும் வேண்டிக் கொள்வதெல்லாம், ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாத நாள் என்ற பரிசோதனையை நீங்களும் செய்து பாருங்களேன்!!
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளில் பீம் யூபிஐ, ஆகியவை விரைவாக நமது பொருளாதாரம் மற்றும் பழக்கங்களின் அங்கமாக மாறிவிட்டன. இப்போது சின்னச்சின்ன நகரங்களிலும், பெரும்பான்மையான கிராமங்களிலும் கூட, மக்கள் யூபிஐ வாயிலாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருகிறார்கள். டிஜிட்டல் முறை பொருளாதாரம் மூலமாக தேசத்தில் ஒரு புதிய கலாச்சாரம் உருவாகி வருகிறது. சின்னச்சின்ன தெருக்கள்-சந்துகளில் இருக்கும் சிறிய கடைகளிலும் கூட டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதால், அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிவது எளிதாகி விட்டது. பணத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய சிரமமும் இப்போது இல்லை. நீங்களும் யூபிஐ வசதியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கே சென்றாலும், ரொக்கத்தைக் கொண்டு செல்லுதல், வங்கிக்குச் செல்லுதல், ஏடிஎம்மைத் தேடுதல் போன்ற சங்கடங்களுக்கு முடிவு. மொபைல் வாயிலாகவே அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்து விடுகின்றன, ஆனால் உங்களுடைய இந்தச் சின்னச்சின்ன நிகழ்நிலை பணம் செலுத்தல் காரணமாக தேசத்தில் எத்தனை பெரிய டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகி இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்த சமயத்தில் நமது தேசத்தில் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனைகள், நாளொன்றிற்கு நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில், யூபிஐ பரிவர்த்தனை கிட்டத்தட்ட 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டி விட்டது. இதனால் தேசத்தில் வசதிகளும் அதிகரித்து வருகிறது, நாணயமான ஒரு சூழலும் உருவாகி வருகிறது. இப்போது தேசத்தில் நிதித்துறையில் தொழில்நுட்பத்தோடு இணைந்த பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. உங்களிடத்திலும் டிஜிட்டல் வழி பணம் செலுத்தல் மற்றும் ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பின் இந்த சக்தியோடு தொடர்புடைய அனுபவம் இருந்தால், அவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவம், நாட்டுமக்கள் பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கலாம்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நாம் நமது பார்வையை நம்மைச் சுற்றிச் செலுத்தும் போது, தொழில்நுட்பத்தின் சக்தி எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றி விடுகிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது. தொழில்நுட்பமானது மேலும் ஒரு பெரிய பணியைச் செய்திருக்கிறது. மாற்றுத் திறனாளி நண்பர்களின் அசாதாரணமான திறமைகளின் ஆதாயம், தேசத்திற்கும் உலகிற்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்தப் பணி. நமது மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை நாம் டோக்கியோ பேராலிம்பிக்ஸிலே கண்டோம். விளையாட்டுக்களைப் போலவே, கலைகள், கல்வித்துறை என பல துறைகளிலும் மாற்றுத் திறனாளி நண்பர்கள் அருமையான செயல்பாடுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்றாலும், இந்த நண்பர்களுக்குத் தொழில்நுட்பத்தின் சக்தி கிடைக்கின்ற போது, இவர்கள், மேலும் பெரிய சாதனைகளைப் படைக்கின்றார்கள். ஆகையால், தேசம் இப்போது தொடர்ந்து ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் தொடர்ந்து ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வருகிறது. தேசத்தின் பல ஸ்டார்ட் அப் அமைப்புகளுமே கூட, இந்தத் திசையில், கருத்தூக்கம் அளிக்கும் பணிகளை ஆற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அமைப்புத் தான் Voice of specially-abled people, இந்த அமைப்பு உதவும் தொழில்நுட்பத் துறையில் புதிய சந்தர்ப்பங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மாற்றுத் திறனாளிக் கலைஞர்களின் பணியை, உலகெங்கிலும் கொண்டு செல்ல, ஒரு நூதனமான தொடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. Voice of specially-abled people என்ற இந்த அமைப்பு, இந்தக் கலைஞர்களின் ஓவியங்கள் அடங்கிய டிஜிட்டல் கலைக்கூடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. மாற்றுத் திறனாளி நண்பர்கள் எந்த வகையில் அசாதாரணமான திறமைகள் நிரம்பியவர்களாக இருக்கின்றார்கள், அவர்களிடத்திலே எத்தனை அபாரமான திறன்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு இந்தக் கலைக்கூடமே ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுத் திறனாளி நண்பர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவால்கள் இருக்கின்றன, இவற்றிலிருந்து வெளியேறி அவர்கள் எந்த இடத்தைச் சென்றடைய முடியும்!! இப்படி பல விஷயங்கள் குறித்து இந்த ஓவியங்களில் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். உங்களுக்கு யாராவது மாற்றுத் திறனாளி நண்பரைத் தெரியும், அவருடைய திறமையை நீங்கள் அறிவீர்கள் என்றால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியோடு அதை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வாருங்கள். மாற்றுத் திறனாளி நண்பர்களும் கூட இப்படிப்பட்ட முயற்சிகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் வெப்பம் அதிக தீவிரத்தோடு அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பத்தில், நீரை சேமிப்பது என்ற பொறுப்பும் கூட அதே அளவுக்கு அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே போதுமான அளவுக்கு நீர் ஒருவேளை இருக்கலாம். ஆனால், நீர்த்தட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும், அவர்களுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும், அமிழ்துக்கு ஒப்பானதாகும்.
நண்பர்களே, இந்த சமயத்தில், சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் போது, தேசம் எத்தகைய உறுதிப்பாடுகளைத் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதிலே நீர் பராமரிப்பு என்பதும் ஒன்றாகும். அமிர்த மஹோத்சவமத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை நாம் உருவாக்குவோம். இது எத்தனை பெரிய இயக்கம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா. உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் கேட்டுக் கொள்வதெல்லாம், அவர்கள் இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், இதனைத் தங்களின் பொறுப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான். நீங்கள் உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வரலாறு ஏதேனும் இருந்தால், ஏதேனும் ஒரு போராட்ட வீரரின் நினைவுச் சின்னம் இருந்தால், அதையும் கூட நீங்கள் அமிர்த நீர்நிலையோடு இணைக்கலாம். அமிர்ந்த நீர்நிலை அமைப்பது பற்றிய உறுதிப்பாடு மேற்கொண்ட பிறகு பல இடங்களில் இது தொடர்பாகப் பணிகள் படுவிரைவாக நடந்தேறி வருவதாக எனக்குச் செய்திகள் வருகின்றன, இது மகிழ்ச்சியை அளிக்கிறது. யூபியின் ராம்புரின் கிராமப் பஞ்சாயத்து பட்வாயி பற்றி எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கே கிராம சபை நிலத்தில் ஒரு குளம் இருந்தது. ஆனால் அது மாசடைந்து, கழிவுகள்-குப்பைகளால் நிரம்பி இருந்தது. கடந்த சில வாரங்களில், தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அந்தப் பகுதி மக்களின் உதவியோடு, வட்டார பள்ளிக் குழந்தைகளின் துணையோடு, இந்த மாசடைந்த குளத்திற்கு மீளுயிர் அளிக்கப்பட்டது. இப்போது இந்தக் குளத்தின் கரைகளில் தடுப்புச் சுவர்கள், சுற்றுச் சுவர்கள், உணவிடங்கள், நீரூற்றுக்கள், ஒளியமைப்புகள் என பலவகையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ராம்புரின் பட்வாயி கிராமப் பஞ்சாயத்திற்கும், கிராமத்து மக்களுக்கும், அங்கிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும், இந்த முயற்சிக்காக, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, நீரின் இருப்பு, நீரின் தட்டுப்பாடு என இவை, எந்த ஒரு தேசத்தின் முன்னேற்றத்தையும், வேகத்தையும் தீர்மானம் செய்பவை. மனதின் குரலில், தூய்மை போன்ற விஷயங்களோடு கூடவே நான் நீர் பராமரிப்பு பற்றி மீண்டும் மீண்டும் கூறிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமது புனித நூல்களில் தெளிவாக எழுதியிருக்கிறது –
பானியம் பரமம் லோகே, ஜீவானாம் ஜீவனம் சம்ருதம்.
पानियम् परमम् लोके, जीवानाम् जीवनम् समृतम् ||
அதாவது, உலகிலே, நீர் மட்டுமே, அனைத்து உயிர்களின், வாழ்வாதாரம் என்பதோடு, நீர் தான் மிகப்பெரிய ஆதாரம்; ஆகையால் தான் நமது முன்னோர்கள், நீர் பராமரிப்பிற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். வேதங்கள் தொடங்கி, புராணங்கள் வரை, நீரை சேமிக்க குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதை மனிதர்களின் சமூக மற்றும் ஆன்மீகக் கடமை என்றே கூறப்பட்டிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தில் நீர் நிலைகளை இணைப்பதன் மீதும், நீர் பாதுகாப்பின் மீதும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் போலவே, மாணவர்களும் நன்கறிவார்கள், சிந்து சரஸ்வதி மற்றும் ஹரப்பா நாகரிகங்களிலும் கூட, பாரதத்தில் நீர் தொடர்பாக எந்த அளவுக்கு மேம்பட்டதொரு பொறியியல் இருந்தது என்பது தெரிய வருகிறது. பண்டைய காலத்தில் பல நகரங்களின் நீர் நிலைகளில், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அமைப்பு முறைகள் இருந்தன, அந்த காலத்தில் மக்கள்தொகை அந்த அளவுக்கு இருக்கவில்லை, இயற்கை வளங்களுக்கான தட்டுப்பாடும் அந்த அளவுக்கு இருக்கவில்லை, ஒரு வகையில் வளம் கொழித்தது எனலாம், இருந்தாலும், நீர் பராமரிப்பு தொடர்பாக அப்போது விழிப்புணர்வு அதிகமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. உங்கள் அனைவரிடத்திலும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய பகுதிகளில் இருக்கும் பழைய நீர்நிலைகள், ஏரிகள்-குளங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அமிர்த சரோவர் இயக்கம் காரணமாக நீர்பராமரிப்போடு கூடவே இந்தப் பகுதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியும். இதன் காரணமாக நகரங்களில், பகுதிகளில், வட்டார சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு அடையும், கண்டு களிக்க மக்களுக்கும் ஒரு இடம் கிடைக்கும்.
நண்பர்களே, இப்படிப்பட்ட கடமையுணர்வு உங்கள் மனதிலும் வந்து விட்டால், நீர் பிரச்சனையோடு தொடர்புடைய எத்தனை பெரிய சவாலாக இருந்தாலும், அதற்குத் தீர்வைக் கண்டுவிட முடியும். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவக் காலத்தில், நாம் நீர் பராமரிப்பு, நீர் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாடுகளை மேற்கொள்வோம் வாருங்கள். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாப்போம், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவோம்.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, மாணவ நண்பர்களோடு நான் தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த உரையாடலின் போது, சில மாணவர்கள், அவர்களுக்குக் கணிதப் பாடம் பயமுறுத்துவதாக இருக்கிறது என்று கூறியிருந்தார்கள். இதைப் போலவே, பல மாணவர்களும் செய்திகளாக எனக்கு அனுப்பி இருந்தார்கள். கணிதம் தொடர்பாக இந்த முறை மனதின் குரலில் உரையாட வேண்டும் என்று அப்போதே நான் தீர்மானித்தேன். நண்பர்களே, கணிதம் எப்படிப்பட்ட ஒரு விஷயம் என்றால், இது இந்தியர்கள் அனைவருக்கும் சுலபமானதாக இருக்க வேண்டும். உள்ளபடியே, கணிதம் தொடர்பாக மிக அதிகமாக ஆய்வுகளும், பங்களிப்புக்களும் அளித்தவர்கள் என்றால் நம் நாட்டவர் தாம். பூஜ்யம், அதாவது ஜீரோவை அளித்தது, அதன் மகத்துவம் பற்றி நீங்கள் தெளிவாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூஜ்யம் என்பது கண்டுபிடிக்கப்படாதிருந்தால், உலகில் இத்தனை விஞ்ஞான முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்காது என்று பல நேரங்களில் கூறப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். Calculus எனப்படும் நுண்கணிதம் தொடங்கி கணிப்பொறி வரை, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளான இவையனைத்தும், பூஜ்யத்தையே ஆதாரமாகக் கொண்டவை. பாரதத்தின் கணிதவியலாளர்களும் பண்டிதர்களும் எந்த அளவுக்கு எழுதியிருக்கிறார்கள் என்றால்,
யத் கிஞ்சித் வஸ்து தத் சர்வம், கணிதேன பினா நஹி!
यत किंचित वस्तु तत सर्वं, गणितेन बिना नहि !
அதாவது, இந்த பிரும்மாண்டத்தில் எதுவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் கணிதத்தையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன. நீங்கள் விஞ்ஞானத்தில் படித்ததை நினைவு கூருங்கள், இதன் பொருள் உங்களுக்குப் புரிய வரும்!! விஞ்ஞானத்தின் அனைத்துக் கோட்பாடுகளும் ஒரு கணித சூத்திரத்தின் மூலமாகவே விளக்கப்படுகிறது. நியூட்டனின் விதிகளாகட்டும், ஐன்ஸ்டீனின் பிரபலமான கோட்பாடாகட்டும், பிரும்மாண்டத்தோடு தொடர்புடைய அனைத்து விஞ்ஞானமும் ஒரு கணிதத்தோடே தொடர்புடையனவாக உள்ளன. இப்போது விஞ்ஞானிகளும் Theory of Everything என்பது பற்றியும் விவாதித்து வருகிறார்கள், அதாவது ஒரே ஒரு சூத்திரமானது பிரும்மாண்டத்தின் அனைத்து விஷயங்களையும் விளக்குவது எப்படி என்பது தான் அது. கணிதம் வாயிலாக விஞ்ஞானம் பற்றிய புரிதல் மிகவுயரிய அளவுக்கு மேம்பட்டதாக நமது ரிஷிகள் எப்போதுமே செய்து காட்டியிருக்கிறார்கள். நாம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தோம் என்றால், இதோடு கூடவே முடிவிலி அதாவது infiniteஐயுமே கூட வெளிப்படுத்தி இருக்கிறோம். பொதுவாகப் பேசும் போது நாம் எண்ணிக்கையை, மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்பது வரை பேசுவது வழக்கம், ஆனால் வேதங்களிலும், பாரதநாட்டு கணித முறையிலும் எண்ணிக்கை மிக மேம்பட்ட நிலையில் கூறப்படுகிறது. நம் முறையில் ஒரு தொன்மையான சுலோகம் உள்ளது.
एकं दशं शतं चैव, सहस्रम् अयुतं तथा |
लक्षं च नियुतं चैव, कोटि: अर्बुदम् एव च ||
वृन्दं खर्वो निखर्व: च, शंख: पद्म: च सागर: |
अन्त्यं मध्यं परार्ध: च, दश वृद्ध्या यथा क्रमम् ||
ஏகம் தசம் சதம் சைவ, சஹஸ்ரம் அயுதம் ததா.
லக்ஷம், ச நியுதம் சைவ, கோடி: அர்புதம் ஏக ச.
விருந்தம் கர்வோ நிகர்வ: ச, சங்க: பத்ம: ச சாகர:.
அந்த்ய ம் மத்யம் பரார்த: ச, தஸ விருத்யா யதா கிரமம்.
இந்த சுலோகத்தில் எண்ணிக்கையின் வரிசைக்கிரமம் உரைக்கப்பட்டிருக்கிறாது. அதாவது –
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் மற்றும் பத்தாயிரம்.
இலட்சம், பத்து இலட்சம் மற்றும் கோடி.
இதைப் போன்றே, எண்ணிக்கை வருகிறது – சங்க, பத்ம மற்றும் சாகர் வரை. ஒரு சாகர் என்பதன் பொருள் பத்து என்ற எண்ணின் 57 அடுக்குகள். அதாவது ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு 57 பூஜ்யங்கள். இது மட்டுமல்ல, இதனைத் தாண்டி, ஓக் மற்றும் மஹோக் போன்ற எண்ணிக்கைகள் இருக்கின்றன. ஒரு மஹோக் என்பது பத்து என்ற எண்ணின் 62 அடுக்குகள், அதாவது ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு 62 பூஜ்யங்கள். நாம் இத்தனை பெரிய எண்ணிக்கையை நமது மூளையில் கற்பனை செய்யவே சிரமப்படுவோம், ஆனால் இந்திய கணிதத்தில் இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். சில நாட்கள் முன்பாகத் தான் இண்டெல் கம்பெனியின் தலைவர் என்னை சந்தித்தார். அவர் எனக்கு ஒரு ஓவியத்தையளித்தார்; அதிலே வாமன அவதாரம் வாயிலாக எண்ணிக்கை அளவிடப்பட்டு வரக்கூடிய பாரதிய வழிமுறை அதில் வடிக்கப்பட்டிருந்தது. இண்டெல் எனும் போதே, கணிப்பொறி உங்கள் மூளையில் பளிச்சிடும். கணிப்பொறிக்கான மொழியில், நீங்கள் பைனரி முறை பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் நமது தேசத்திலே ஆச்சார்யர் பிங்களர் போன்ற ரிஷிகள் இருந்தார்கள், இவர்கள் பைனரி பற்றி சிந்தித்திருக்கிறார்கள். இதைப் போலவே ஆரியபட்டர் தொடங்கி ராமானுஜன் வரை, கணிதத்தின் பல கோட்பாடுகள், நம் நாட்டிலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
நண்பர்களே, இந்தியர்களான நமக்கெல்லாம் கணிதம் எப்போதுமே சிக்கலான ஒன்றாக இருந்ததில்லை, இதற்கான ஒரு பெரிய காரணம் நமது வேதக்காலக் கணிதமும் கூட. நவீன காலத்தில் வேத கணிதத்தின் மாட்சியை வெளிப்படுத்திய பெருமை முழுக்க ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்த ஜி மஹாராஜையே சாரும். அவர் தான் கணக்கீடுகளின் பண்டைய முறைக்கு மீளுயிர் அளித்து, இதற்கு வேத கணிதம் என்ற பெயரளித்தார். வைதிக கணிதத்தின் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் நீங்கள் மிகக்கடினமான கணக்கீடுகளை, கண்ணிமைக்கும் நேரத்தில் மனதிற்குள்ளேயே செய்து விட முடியும். இப்போதெல்லாம் சமூக ஊடங்களில் வேத கணிதத்தைக் கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும் கூடிய பல காணொளிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
நண்பர்களே, இன்றைய மனதின் குரலில் வேத கணிதத்தைக் கற்பிக்கும் அப்படிப்பட்ட ஒரு நண்பர் நம்மோடு இணையவிருக்கிறார். இவர் கோல்காதாவின் கௌரவ் டேகரீவால் அவர்கள். இவர் கடந்த 20-25 ஆண்டுகளாக, வேத கணிதம் என்ற இந்த இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். வாருங்கள், அவரோடு கலந்து பேசுவோம்.
மோதி ஜி: கௌரவ் அவர்களே வணக்கம்.
கௌரவ்: வணக்கம் சார்.
மோதி ஜி: நீங்க வேத கணிதம் தொடர்பா அதிக ஆர்வத்தோட இருக்கீங்கன்னு நான் கேள்விப்பட்டேன். ஆகையால நான் உங்களைப் பத்தி முதல்ல தெரிஞ்சுக்க விரும்பறேன், அப்புறமா இந்த விஷயம் பத்தி உங்களுக்கு எப்படி இத்தனை நாட்டம் வந்திச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க.
கௌரவ்: சார், நான் 20 ஆண்டுகள் முன்னால வணிகப்பள்ளிக்கு விண்ணப்பம் செஞ்சுக்கிட்டு இருந்தேன், அப்ப இதுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வு பேரு CAT. அதில கணிதம் தொடர்பான ஏகப்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டிச்சு. ஆனா இவற்றுக்கு விடை அளிக்க நேரம் குறைவாவே இருக்கும். அப்பத்தான் எங்கம்மா எனக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க, அதோட பேரு வேத கணிதம். ஸ்வாமி ஸ்ரீ பாரதீகிருஷ்ண தீர்த்த ஜீ மஹராஜ் தான் அந்தப் புத்தகத்தை எழுதினவரு. அதில அவரு 16 சூத்திரங்களை கொடுத்திருந்தாரு. இதில கணிதம் ரொம்ப சுலபமா இருந்திச்சு, ரொம்ப வேகமா இதுக்கான தீர்வுகள் கிடைச்சுது. அதைப் படிச்ச பிறகு தான் எனக்கு உத்வேகமே பிறந்திச்சு, கணக்கு மேல எனக்குள்ள இருந்த ஆர்வம் விழிப்படைஞ்சுது. இந்தப் படிப்பு பாரதம் உலகுக்கு அளிச்ச கொடை, இது நம்ம மரபுச்சொத்து, இதை நாம உலகத்தின் மூலை முடுகெங்கும் கொண்டு சேர்க்க முடியும்னு நான் உணர்ந்தேன். வேத கணிதத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கணுங்கறதை நான் என்னோட இலக்கா அப்போதிலிருந்து தீர்மானம் செஞ்சுக்கிட்டேன். ஏன்னா, கணிதம் பத்தின பயம் எல்லாரையும் வாட்டுச்சு. ஆனா வேத கணிதம் கணிதப் பாடத்தை மிகச் சுலபமானதா மாத்திக் கொடுக்குது.
மோதி ஜி: கௌரவ் அவர்களே, எத்தனை ஆண்டுகளா நீங்க இந்தப் பணியில ஈடுபட்டிருக்கீங்க?
கௌரவ்: இதோட சுமார் 20 ஆண்டுகளா இதில ஈடுபட்டிருக்கேன் சார். இதில முழு ஈடுபாட்டோட நான் செயல்படுறேன்.
மோதி ஜி: சரி விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன செய்யறீங்க, எப்படி செயல்படுத்தறீங்க, மக்கள் கிட்ட எப்படி எடுத்துக்கிட்டுப் போறீங்க?
கௌரவ்: நாங்க பள்ளிகளுக்குப் போறோம், நிகழ்நிலையில கற்பிக்கிறோம். எங்க அமைப்போட பேரு Vedic Maths Forum India. இந்த அமைப்பு வாயிலா நாங்க இணையம் மூலமா 24 மணிநேரமும் வேத கணிதத்தைக் கற்பிக்கறோம் சார்.
மோதி ஜி: கௌரவ் அவர்களே, தொடர்ந்து குழந்தைகளோட உரையாடறதை நான் ரொம்பவே விரும்பறது மட்டுமில்லாம இதுக்கான வாய்ப்பு இருக்கான்னு ஆராயவும் செய்வேன். தேர்வுகளை எதிர்கொள்வோம், அதாவது exam warrior நிகழ்ச்சி மூலமா இதை அமைப்பு ரீதியானதா ஆக்கியிருக்கோம். இதில என்னோட அனுபவம் என்னென்னா, பெரும்பாலான வேளைகள்ல நான் குழந்தைகளோட உரையாடும் போது, கணிதம்னு சொன்னவுடனேயே அவங்க அந்த இடத்தை விட்டு ஓடிப் போயிடறாங்க அப்படீங்கறது தான். ஆனா என்னோட முயற்சி என்னன்னா, காரணமே இல்லாம இப்படி ஒரு பீதி ஏற்பட்டிருக்கே, இதை எப்படியாவது வெளியேத்தணும், இந்த பயத்தைப் போக்கணும், மேலும், சின்னச்சின்ன உத்திகள் அப்படீங்கற பாரம்பர்யமான வழியில இதை செயல்படுத்தணும்னு நினைக்கறேன். உலகத்தில கணிதம் தொடர்பான பழைமையான பாரம்பரியங்கள்ல பாரதநாட்டுப் பாரம்பரியம் ஒண்ணா இருக்குங்கற நிலையில, இந்த தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மனசுல இருக்கற பயத்தைப் போக்க உங்க ஆலோசனைகளை சொல்ல முடியுமா?
கௌரவ்: சார், இது பிள்ளைங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும், ஏன்னா, தேர்வு பத்தின அச்சம், ஒவ்வொரு வீட்டிலயும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கு. தேர்வுகளுக்காக பிள்ளைங்க டியூஷன் வகுப்புகளுக்குப் போறாங்க, பெற்றோருக்கு ஒரே பதட்டமா இருக்கு. ஆசிரியர்களும் நெருக்கடியை உணர்றாங்க. ஆனா வேத கணிதத்தில இதெல்லாம் மாயமா மறைஞ்சு போயிடுது. இந்த சாதாரணமான கணிதத்தை விடவும், வேத கணிதம் 150 சதவீதம் அதிக வேகமானது, இதனால பிள்ளைங்களுக்கு அதிக தன்னம்பிக்கை ஏற்படுது, மூளை சுறுசுறுப்பா வேலை செய்யுது. இப்ப நாங்க வேத கணிதம் கூடவே யோகக் கலையையும் அறிமுகப்படுத்தியிருக்கோம். இதனால பிள்ளைங்க கண்ணை மூடிக்கிட்டு, வேத கணித வழிமுறைகள் வாயிலா கணக்கீடு செய்ய முடியும்.
மோதி ஜி: இப்ப தியானம் தொடர்பான பாரம்பரியத்திலயும் கூட, இந்த மாதிரியா கணிதச் செயல்பாடுகள்ல, அதிலயும் தியானத்தோட ஒரு அடிப்படை படிப்பாவும் இருக்கு.
கௌரவ்: ஆமாம் சார்.
மோதி ஜி: சரி கௌரவ் அவர்களே, நீங்க இதை ஒரு இலக்கா தீர்மானிச்சுப் பயணிக்கறீங்க அப்படீங்கறது ரொம்ப மகிழ்ச்சி அளிக்குது, அதுவும் குறிப்பா உங்க அம்மா ஒரு நல்ல குருவா இருந்து உங்களை சரியான வழிக்குக் கொண்டு வந்திருக்காங்க. இன்னைக்கு நீங்க இலட்சக்கணக்கான மாணவர்களையும் இந்தப் பாதையில கொண்டு வந்து பயணிக்கறீங்க. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கௌரவ்: ரொம்ப நன்றி சார். நான் உங்களுக்கு என்னோட நன்றிகளைத் தெரிவிக்கிறேன் சார். அதாவது வேத கணிதத்துக்கு நீங்க இத்தனை மதிப்பளிச்சு என் கருத்துக்களைக் கேட்டிருக்கீங்க. நாங்க எல்லாருமே உங்களுக்கு எங்க நன்றிகளைத் தெரிவிக்கறோம்.
மோதி ஜி: ரொம்ப ரொம்ப நன்றி, வணக்கம்.
கௌரவ்: வணக்கம் சார்.
நண்பர்களே, கௌரவ் அவர்கள் மிகச் சிறப்பான முறையிலே, வேத கணிதம் கணிதத்தின் சிரமத்தை சுவாரசியமானதாக எப்படி ஆக்குகிறது என்பதைத் தெரிவித்தார். அது மட்டுமல்ல, வைதிக கணிதம் வாயிலாக பெரியபெரிய அறிவியல் சிக்கல்களையும் தீர்க்க முடியும். பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக வேத கணிதத்தைக் கற்பியுங்கள் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். இதன் வாயிலாக அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகப்பட்டு, அவர்களுடைய மூளையின் பகுப்பாய்வுத் திறன்களும் அதிகரிக்கும். மேலும் கணிதம் தொடர்பாக குழந்தைகளிடத்திலே இருக்கும் அச்சமும் அகலும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் இன்று அருங்காட்சியகம் முதல், கணிதம் வரையிலான பல அறிவார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்த விஷயங்கள் அனைத்தும், உங்கள் ஆலோசனைகள் காரணமாகவே மனதின் குரலில் இடம் பிடித்திருக்கின்றன. நீங்கள் அனைவரும் இதைப் போலவே, வருங்காலத்திலும் உங்கள் ஆலோசனைகளை நமோ செயலியிலும், மைகவ் வாயிலாகவும் அனுப்பி வாருங்கள். வரும் நாட்களில் தேசத்தில் ஈத் பண்டிகை வரவிருக்கிறது. மே மாதம் 3ஆம் தேதி அட்சய திரிதியையும், பகவான் பரசுராமரின் ஜெயந்தியும் கொண்டாடப்பட இருக்கின்றன. சில நாட்கள் கழித்து பைசாக் புத்த பூர்ணிமை நாட்களும் வரவிருக்கின்றன. இந்தப் பண்டிகைகள் அனைத்தும், ஒழுங்குமுறை, புனிதத்தன்மை, கொடை மற்றும் சகோதரத்துவத்தை முன்னிறுத்துபவை. உங்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளுக்கான மிகப்பிரியமான நல்வாழ்த்துக்கள். இந்தத் திருநாட்களை உல்லாசமாகவும், சகோதரத்துவத்தோடும் நன்றாகக் கொண்டாடுங்கள். இவை அனைத்திற்கும் இடையே, கொரோனா தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். முகக்கவசம் அணியுங்கள், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், கைகளைக் கழுவுவதை மறவாதீர்கள், நம்மை நாமே தற்காத்துக் கொள்ள இவை அவசியமான உபாயங்கள், நீங்கள் இவற்றைக் கடைப்பிடித்து வாருங்கள். அடுத்த முறை மனதின் குரலில் நாம் மீண்டும் சந்திப்போம், நீங்கள் அனுப்பும் மேலும் புதிய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம், விடை கொடுங்கள் நண்பர்களே. பலப்பல நன்றிகள்.
***************
Sharing this month's #MannKiBaat. Hear LIVE. https://t.co/IJ1Ll9gAmu
— Narendra Modi (@narendramodi) April 24, 2022
People from across the country have written letters and messages to PM @narendramodi about the Pradhanmantri Sangrahalaya.
— PMO India (@PMOIndia) April 24, 2022
The museum was inaugurated on 14th April, the birth anniversary of Babasaheb Ambedkar.
Here's what some of the visitors wrote to the PM... pic.twitter.com/7CPjIbIPQ0
Do you know the answers to these questions?
— PMO India (@PMOIndia) April 24, 2022
Write them on the NaMo App and social media using #MuseumQuiz. pic.twitter.com/e1AwIOWKA0
Here are a few more questions to test your knowledge! #MuseumQuiz pic.twitter.com/rMTPNmImGs
— PMO India (@PMOIndia) April 24, 2022
Do visit a local museum during holidays and share your experiences using #MuseumMemories. pic.twitter.com/YhCrchoSPV
— PMO India (@PMOIndia) April 24, 2022
PM @narendramodi mentions about a unique 'Cashless Day Out' experiments by citizens.
— PMO India (@PMOIndia) April 24, 2022
This shows the fast rising adoption of digital payments across the country. #MannKiBaat pic.twitter.com/XlNoodOltN
Small online payments are helping build a big digital economy. #MannKiBaat pic.twitter.com/ls7f7Cq8Ni
— PMO India (@PMOIndia) April 24, 2022
Just like in sports, divyangjan are doing wonders in arts, academics and many other fields.
— PMO India (@PMOIndia) April 24, 2022
With the power of technology they are achieving greater heights. #MannKiBaat pic.twitter.com/3UR2I1OBTu
PM @narendramodi mentions divyang welfare efforts being carried out by start-ups. Have a look...#MannKiBaat pic.twitter.com/7jTeUNNxVO
— PMO India (@PMOIndia) April 24, 2022
In the Azadi Ka Amrit Mahotsav, water conservation is one of the resolves with which the country is moving forward.
— PMO India (@PMOIndia) April 24, 2022
75 Amrit Sarovars will be built in every district of the country. #MannKiBaat pic.twitter.com/gh8OU7eA39
Water is the basis of life of every living being.
— PMO India (@PMOIndia) April 24, 2022
In our ancient scriptures too, water conservation has been emphasized upon. #MannKiBaat pic.twitter.com/rs29cdBmSf
It is the responsibility of the whole society to conserve water. #MannKiBaat pic.twitter.com/VV74a0AjVf
— PMO India (@PMOIndia) April 24, 2022
Few days ago during #ParikshaPeCharcha my young friends asked me to discuss about mathematics.
— PMO India (@PMOIndia) April 24, 2022
Several greats of India have made significant contributions in the field of mathematics. #MannKiBaat pic.twitter.com/2dmCRPw8O5
When we talk about numbers, we speak and think till million, billion and trillion.
— PMO India (@PMOIndia) April 24, 2022
But, in Vedas and in Indian mathematics, this calculation goes beyond that. #MannKiBaat pic.twitter.com/FH5kEuwrfz
Do hear this interesting conversation of PM @narendramodi with Gaurav Tekriwal Ji of Kolkata, who is promoting vedic maths.
— PMO India (@PMOIndia) April 24, 2022
Tekriwal Ji shares how this is helping the youngsters specifically. #MannKiBaat https://t.co/Hf6bBe7Tan
Mathematics has never been a difficult subject for us Indians. A big reason for this is our Vedic Mathematics. #MannKiBaat pic.twitter.com/kZZCrUBKQz
— PMO India (@PMOIndia) April 24, 2022