Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடிமைப் பணிகள் தினத்தில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளை பிரதமர் வழங்கினார்

குடிமைப் பணிகள் தினத்தில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளை பிரதமர் வழங்கினார்


குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தினத்தை முன்னிட்டு, புது தில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார். மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மை செயலாளர் திரு பி கே மிஸ்ரா, அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், குடிமைப் பணிகள் தினத்தில் அனைத்து ‘கர்மயோகிகளுக்கும்’ வாழ்த்து தெரிவித்தார். ஆளுகையை மேம்படுத்துதல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான ஆலோசனையுடன் தமது உரையை அவர் தொடங்கினார். அனைத்து பயிற்சி அகாடமிகளும் வாராந்திர அடிப்படையில் விருது வென்றவர்களின் செயல்முறை மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைத்தார். இரண்டாவதாக, விருது பெற்ற திட்டங்களில் இருந்து, ஒரு சில மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை தேர்வு செய்து, அதன் அனுபவத்தை அடுத்த ஆண்டு குடிமைப் பணிகள் தினத்தில் விவாதிக்கலாம்.

கடந்த 20-22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுடன் தாம் முதலில் முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் தொடர்பு கொண்டுள்ளதை பிரதமர் நினைவு கூர்ந்தார். பரஸ்பரம் கற்கும் அனுபவமாக இது உள்ளது, என்றார் அவர். விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்படுவதால், அதன் முக்கியத்துவத்தை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த சிறப்புமிக்க ஆண்டில் முன்னாள் மாவட்ட நிர்வாகிகளை மாவட்டத்திற்கு வரவழைக்குமாறு நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டார். மாவட்டத்தில் புதிய ஆற்றலை இது புகுத்துவதுடன், கடந்த கால அனுபவத்தின் வாயிலாக தற்போதைய மாவட்ட நிர்வாகத்தின் கண்ணோட்டத்தில் வரவேற்கத்தக்க ஆற்றலை வழங்கும். இதேபோல், சுதந்திர இந்தியாவின் பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய நிர்வாக இயந்திரத்தின் கொடியை ஏந்தியவர்களை நினைவுகூரவும், பயன் பெறவும், மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அமைச்சரவை செயலர்களை இந்த மைல்கல் ஆண்டில் மாநில முதல்வர்கள் அழைக்கலாம். விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில் குடிமைப் பணியை கௌரவிக்க இது ஒரு பொருத்தமான வழியாகும்.

அமிர்த காலம் என்பது வெறும் கொண்டாட்டத்திற்காகவோ அல்லது கடந்த காலத்தைப் புகழ்வதற்கோ அல்ல என்றும், 75 முதல் 100 ஆண்டுகள் வரையிலான பயணம் வழக்கமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். “இந்தியா@100 என்பது வழக்கமானதாக இருக்க முடியாது. இந்த 25 ஆண்டு காலத்தை ஒரு அலகாகப் பார்க்க வேண்டும், இப்போதிலிருந்தே நமக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். இந்த கொண்டாட்டம் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் இந்த உணர்வோடு முன்னேற வேண்டும். முயற்சிகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது, 1947-ம் ஆண்டு இந்த நாளில் சர்தார் படேல் அளித்த உறுதிமொழிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது,” என்று பிரதமர் கூறினார்.

நமது ஜனநாயக அமைப்பில் நாம் மூன்று இலக்குகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாட்டில் உள்ள சாமானியர்களின் வாழ்வில் மாற்றம் வர வேண்டும், அவர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும், அவர்களும் இந்த வசதியை உணர வேண்டும் என்பதே முதல் குறிக்கோள். பொது மக்கள் அரசுடன் தொடர்பு கொள்பதற்கு சிரமப்படக்கூடாது, அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சேவைகள் சிரமமின்றி கிடைக்க வேண்டும். “சாதாரண மனிதனின் கனவுகளை உறுதியான நிலைக்கு கொண்டு செல்வது அமைப்பின் பொறுப்பாகும். அதை நிறைவேற்றுவதற்கான உறுதியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும். அதுவே நம் அனைவருக்கும் குறிக்கோளாக இருக்க வேண்டும். கனவு முதல் தீர்வு முதல் நிறைவு வரையிலான இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கைகோர்த்து இருக்க வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார். இரண்டாவதாக, இந்தியாவின் வளர்ந்து வரும் நிலை மற்றும் மாறிவரும் தகுதிக்கேற்ப, நாம் எது செய்தாலும் அது உலகளாவிய சூழலில் செய்யப்பட வேண்டும். உலக அளவில் செயல்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால், நமது முன்னுரிமைகள் மற்றும் கவனம் செலுத்தும் பகுதியைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என்று பிரதமர் கூறினார், நமது அமைப்புகளும் மாதிரிகளும் சீரான வேகத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், கடந்த நூற்றாண்டின் அமைப்புகளுடன் இன்றைய சவால்களை சமாளிக்க முடியாது, மூன்றாவதாக, “நாம் எங்கிருந்தாலும் இந்த அமைப்பு, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு நமது பிரதான பொறுப்பு, இதில் எந்த சமரசமும் இருக்க முடியாது. உள்ளூர் முடிவுகள் கூட இந்த அளவுகோலில் அளவிடப்பட வேண்டும். நமது ஒவ்வொரு முடிவும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். ‘தேசம் முதலில்’ என்பது எப்போதும் நமது முடிவுகளுக்கு ஆதாரமாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் மகத்தான கலாச்சாரமும், நம் நாடும் அரச முறைகளாலும், அரச சிம்மாசனங்களாலும் ஆனது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மிடம் இருந்து வரும் பாரம்பரியம் சாதாரண மனிதனின் பலத்தை எடுத்துச் செல்லும் பாரம்பரியமாக இருந்து வருகிறது. இது நமது பண்டைய ஞானத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் மாற்றம் மற்றும் நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் உணர்வையும் தெரிவிக்கிறது என்று பிரதமர் கூறினார். சமுதாயத்தின் திறனை வளர்ப்பதும், வெளிக்கொணர்வதும், ஆதரிப்பதும் அரசு அமைப்பின் கடமை என்று அவர் எடுத்துரைத்தார். ஸ்டார்ட்-அப் சூழலியல் மற்றும் விவசாயத்தில் நடக்கும் புதுமைகளின் உதாரணங்களை அவர் எடுத்துரைத்ததோடு, ஊக்கமளித்து ஆதரவளிக்கும் பணியை செய்யுமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

தட்டச்சு கலைஞருக்கும் சித்தார் வாசிப்பவருக்கும் உள்ள வித்தியாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஆய்வுக்குட்பட்ட வாழ்க்கை, கனவுகள், உற்சாகம் மற்றும் நோக்கத்துடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “நான் ஒவ்வொரு கணமும் வாழ விரும்புகிறேன், இதன் மூல்ம் நான் சேவை செய்ய முடிவதோடு, மற்றவர்கள் நன்றாக வாழவும் உதவ முடியும்”, என்று அவர் கூறினார். அதிகாரிகளை வித்தியாசமாக சிந்திக்குமாறு திரு மோடி அறிவுறுத்தினார். ஆட்சியில் சீர்திருத்தம் என்பது நமது இயல்பான நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நிர்வாக சீர்திருத்தங்கள் சோதனை ரீதியாகவும், காலத்தின் மற்றும் நாட்டின் தேவைகளுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். காலாவதியான சட்டங்கள் மற்றும் இணக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பது தமது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக அவர் குறிப்பிட்டார். அழுத்தத்தின் கீழ் மட்டும் மாறாமல், சுறுசுறுப்பாக முன்னேற முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். பற்றாக்குறை காலத்தில் தோன்றிய கட்டுப்பாடுகளாலும், மனநிலைகளாலும் நாம் ஆளப்படாமல், மிகுதியான மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். இதேபோல், சவால்களுக்கு எதிர்வினையாற்றுவதை விட அவற்றை நாம் எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார், “கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் பல பெரிய விஷயங்கள் நடந்துள்ளன. இவற்றில் பலவற்றின் அடிப்படையிலேயே மாற்றம் நிகழ்ந்துள்ளது,” என்றார் அவர். “நான் அரசியல் குணம் கொண்டவன் அல்ல, இயல்பாகவே நான் மக்கள் நீதியின் பக்கம் இருக்கிறேன்,” என்று பிரதமர் கூறினார்.

அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் முக்கிய சீர்திருத்தங்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டு தமது உரையை அவர் நிறைவு செய்தார். உதாரணமாக அவர்களின் சொந்த வாழ்க்கையில் தூய்மை மற்றும் ஜிஈஎம் அல்லது யூபிஐ பயன்பாடு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள், சாதாரண மக்களின் நலனுக்காக மாவட்டங்கள் / செயல்படுத்தும் முகமைகள் மற்றும் மத்திய / மாநில அமைப்புகளால் செய்யப்படும் அசாதாரணமான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை திட்டங்கள் மற்றும் புதுமைகளை திறம்பட செயல்படுத்துவதற்காகவும் அவை வழங்கப்படுகின்றன.

2022-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தினத்தில் பின்வரும் ஐந்து முன்னுரிமை திட்டங்களில் முன்மாதிரியான பணிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன: (i)  ஊட்டச்சத்து திட்டத்தில் மக்கள் பங்கேற்பின் ஊக்குவிப்பு, (ii) விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவதை கேலோ இந்தியா திட்டம் மூலம் ஊக்குவித்தல், (iii) பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் நல்ல நிர்வாகம், (iv) ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம் முழுமையான மேம்பாடு, (v) தடையற்ற, மனித தலையீடு இல்லாமல் சேவைகளை தொடக்கம் முதல் இறுதி வரை வழங்குதல்.

அடையாளம் காணப்பட்ட 5 முன்னுரிமைத் திட்டங்கள் மற்றும் பொது நிர்வாகம் / சேவைகளை வழங்குதல் போன்ற துறைகளில் புதுமைகளுக்காக மொத்தம் 16 விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்படும்.

***************