Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தின் பெச்சாராஜியில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிரஹலாத் படேல் அவர்களின் 115-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

குஜராத்தின் பெச்சாராஜியில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிரஹலாத் படேல் அவர்களின்  115-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


பெச்சாராஜி என்பது  பகுச்சாரா என்ற பெண் கடவுளின் புனிதத்தலம் என்று  பொருள். பெச்சாராஜியின் புனித பூமி பல சமூக சேவகர்களை, தேச பக்தர்களை ஈன்றுள்ளது. இந்த பூமியின் அத்தகைய புதல்வர்களில் ஒருவரான விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகருமான திரு பிரஹலாத் ஹர்கோவன்தாஸ் பட்டேல் அவர்களின்  115-வது பிறந்தநாள் விழாவில் அவரது மாண்புகளை நினைவுகூர, அதுவும் அன்னை பகுச்சாரா முன்னிலையில் புனிதமான நவராத்திரி விழாவிற்கிடையே நாம் அந்த வாய்ப்பை  பெற்றுள்ளோம்.

 பிரஹலாத்பாய் சீதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனால், அவர் பெச்சாராஜிக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.  சேத் லாட்டிவாலா என்ற பெயரில் பிரஹலாத் அவர்கள் மாநிலம் முழுவதும் புகழ் பெற்றிருந்தார். விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தி அவர்களின் செல்வாக்கால் ஏராளமான இளைஞர்களைப் போல் பிரஹலாத்பாயும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இவர், சபர்மதி மற்றும் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இவரது தந்தை மரணமடைந்தார். ஆனால், இறுதிச் சடங்குகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றால் மன்னிப்பு  கேட்க வேண்டும் என்று  காலனி ஆட்சியாளர்கள் விதித்த நிபந்தனைகளை படேல் ஏற்கவில்லை. இவரது பெற்றோர்களின் உடலை ஒன்றுவிட்ட சகோதரர் தகனம் செய்தார். பிரஹலாத் படேல் அவர்களின் ‘தேசம் முதலில்’ என்ற உணர்வுக்கு இந்த சம்பவம் அடையாளமாக விளங்குகிறது.  தலைமறைவாக இருந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் பலருக்கும் அவர் உதவி செய்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பின் தசாதா, வனோத், ஜைனாபாத் போன்ற மன்னர் ஆட்சிப் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்கு சர்தார் படேலுக்கு அவர் உதவி செய்தார். இத்தகைய தேசபக்தர்கள் நாட்டின் வரலாற்று நூல்களில் சொற்பமாக குறிப்பிடப்பட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

நாடு விடுதலை அடைந்த பின் அவர் ஓய்வாக இருக்கவில்லை; சமூகசேவையில் ஈடுபட்டார். 1951-ல் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் இணைந்து அவருக்கு சொந்தமான 200 பிகா நிலத்தையும் தானம் செய்தார். ஏராளமான நிலமற்ற ஏழைகளின் நலனுக்காக அவரால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய செயல்பாடாகும் இது. பம்பாய் மாநிலத்தில் இருந்து குஜராத் தனியாக பிரிந்த பின் 1962-ல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் சனஸ்மா தொகுதியிலிருந்து போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக வந்ததோடு, மக்களின் குரலாகவும் அவர் விளங்கினார்.

அவரது மனைவி காசிபா பற்றி குறிப்பிடாமல் பிரஹலாத்பாயின் இன்றைய நிகழ்வு பூர்த்தியடையாது. காசிபா நற்குணம் மிக்க மனைவியாக மட்டுமின்றி கஸ்தூர்பா போல மக்கள் பணிகளையும் மேற்கொண்ட அவர், தனது கணவருக்கு முழுமையான ஆதரவையும் அளித்தார்.

பிரஹலாத்பாயின் பணியும் சமூகத்திற்கான பங்களிப்பும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் இன்றைய தலைமுறைக்கு புதிய தகவல்கள் கிடைக்கும். வரவிருக்கும் தலைமுறைக்கும் அவர் ஈர்ப்பு சக்தியாக இருப்பார். வாழும் காலத்தில் மக்கள் சேவை புரிந்த அவர், வாழ்ந்த பிறகும் தனது கண்களை தானமாக வழங்க முடிவு செய்தார். கண்தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத அந்த நாளில் அவர் எடுத்த முடிவை கற்பனை செய்து பாருங்கள். அப்போது இது எவ்வளவு மகத்தான, ஈர்ப்பான முடிவு என்பது தெரியும்.

 விடுதலைப் போராட்ட வீரர்களின் அறியப்படாத அம்சங்களை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி  செய்து வெளியிடவேண்டும். திரு பிரஹலாத்பாய் திரிவேணி சங்கமம் போல தேசபக்தி, அர்ப்பணிப்பு உணர்வு, கடமையும், சேவையும் என்ற மூன்று அம்சங்களின் சங்கமமாக விளங்கினார். பிரஹலாத்பாயின் தலைச்சிறந்த பணிக்கு நான் மதிப்புடன் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.  அன்னை பாரதத்திற்கும், அன்னை பகுச்சாராவுக்கும் சேவை செய்யும் அனைவருக்கும் தலைவணங்கி எனது உரையை நான் நிறைவு செய்கிறேன்.

பாரத் மாதாகி ஜே!

கார்வி குஜராத் ஜே! ஜே!

***************