Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான மகளிர் சக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான  மகளிர் சக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான  மகளிர் சக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.03.2022) லோக் கல்யாண் மார்கில் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பிரதமர் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்.

விருது பெற்றவர்கள் ஆற்றிய தலைசிறந்த பணிகளுக்காக அவர்களைப் பாராட்டிய பிரதமர், அவர்கள் சமுதாயத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக கூறினார். விருது பெற்றவர்களின் பணி, சேவை நோக்கம் கொண்டதாக இருப்பதோடு புதுமையானதாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது பெண்கள் தடம் பதிக்காத துறைகளே இல்லை என்பதோடு நாட்டிற்கும், பெருமிதம் தேடித் தருவதாக அவர் கூறினார்.

பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறிய பிரதமர், இந்தத் திறமைகளை கண்டறிவதற்கான கொள்கைகளும் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து பெண்களும், குடும்ப அளவிலான முடிவுகளை எடுப்பதில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலமே, அவர்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்க முடியும்.

சுதந்திரப் பெருவிழா கொண்டாடப்படும் காலக்கட்டத்தில் ‘அனைவரும் முயற்சிப்போம்’ என்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவளிப்போம் என்பது போன்ற அரசின் முயற்சிகளுக்கு கிடைக்கும் வெற்றி, பெண்களின் பங்களிப்பு காரணமாகவே சாத்தியமாவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடம் கலந்துரையாடும் வாய்ப்பை தங்களுக்கு வழங்கியமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதன் மூலம் தங்களது கனவு நனவாகியிருப்பதாகவும் அவர்கள்  குறிப்பிட்டனர். தங்களது முயற்சிகளுக்கு அரசின் பல்வேறு நடவடிக்கைகள் பேருதவியாக உள்ளது என்றும் பாராட்டுத் தெரிவித்தனர்.

——