Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய பட்ஜெட் 2022-23 குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட் 2022-23 குறித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


நூற்றாண்டுக்கு ஒருமுறை ஏற்படும் பேரழிவுக்கு இடையே வளர்ச்சியின் புதிய நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு வலிமை அளிப்பதுடன் சாமான்ய மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் இந்த பட்ஜெட் உருவாக்கும்.

அதிகப்படியான அடிப்படைக் கட்டமைப்பு, கூடுதல் முதலீடு, அதிக வளர்ச்சி, கூடுதல் வேலைகளுக்கான வாய்ப்புகளால் பட்ஜெட் நிறைந்துள்ளது. இது புதிய வேலை வாய்ப்பு துறையை மேலும் திறந்துவிடும். சமகால பிரச்சனைகளை இந்த பட்ஜெட் தீர்ப்பது மட்டுமின்றி இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தையும் உறுதி செய்யும்.

விவசாயிகளுக்கான ட்ரோன்கள், வந்தே பாரத் ரயில்கள், டிஜிட்டல் கரன்சி, 5ஜி சேவைகள், தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்புமுறை போன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் நவீனத்தையும், தொழில்நுட்பத்தையும் நாடியிருப்பது நமது இளைஞர்களுக்கு, நடுத்தர வகுப்பினருக்கு, ஏழைகளுக்கு, தலித்களுக்கு, பின்தங்கிய வகுப்பினருக்குப் பெருமளவு பயனளிக்கும்.

இந்த பட்ஜெட்டின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக ஏழைகளின் நலன் உள்ளது. இந்த பட்ஜெட், கான்கிரீட் வீடு, கழிப்பறை, அனைத்து ஏழை வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே சமயம் நவீன இணைய தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது.

நாட்டில் முதல் முறையாக, இமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு போன்ற பிராந்தியங்களில் ‘பர்வத மாலாதிட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்த மலைப்பகுதிகளில் நவீனப் போக்குவரத்து முறைகளை உருவாக்கும்.

லட்சக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை மையமாக இருக்கும் கங்கையின் தூய்மையோடு உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த நதியின் கரையோரங்களில் இயற்கை வேளாண்மையை அரசு ஊக்கப்படுத்தும். இது விவசாயிகளின் நலனுக்கு முக்கியமான நடவடிக்கையாகும் கங்கையை ரசாயனம் அற்றதாக மாற்றவும் இது உதவி செய்யும்.

வேளாண்மையை லாபகரமாக்குவதை நோக்கமாகக் கொண்டும் புதிய வாய்ப்புகளால் நிறைந்தும் பட்ஜெட் அம்சங்கள் உள்ளன. புதிய வேளாண் தொழில்கள் ஊக்குவிப்புக்கான சிறப்பு நிதி, உணவு பதன தொழில்துறைக்கான திட்டம் போன்ற நடவடிக்கைகள் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் மூலம் விவசாயிகளின் கணக்குகளில் 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக பரிமாற்றம் செய்யப்பட உள்ளது.

கடன் உத்தரவாதத்தில் பெருமளவு அதிகரிப்பு செய்வதோடு பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.  பாதுகாப்பு மூலதன பட்ஜெட்டின் 68 சதவீதம் உள்நாட்டு தொழில்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் இந்தியாவின் குறு சிறு நடுத்தர தொழில்துறை பெருமளவு பயனடையும். 7.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள மக்கள் முதலீடு பொருளாதாரத்திற்கு புதிய உந்துதலை அளிப்பதோடு சிறு மற்றும் இதர தொழில்துறைகளில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.

மக்களுக்கு உகந்த முற்போக்கான பட்ஜெட்டை வழங்கிய நிதியமைச்சர் நிர்மலாவையும் அவரது குழுவினரையும் நான் வாழ்த்துகிறேன்.

பட்ஜெட் மற்றும் தற்சார்பு இந்தியா குறித்து நாளை காலை 11 மணியளவில் உரையாற்ற பாரதீய ஜனதா கட்சி என்னை அழைத்துள்ளது. நாளை இது பற்றி நான் விரிவாக பேசுவேன்.

நன்றி

***