Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“இந்தியாவை மாற்றி அமைப்போம்” உரையை பிரதமர் ஆற்றினார்.

“இந்தியாவை மாற்றி அமைப்போம்” உரையை பிரதமர் ஆற்றினார்.


மாண்புமிகு சிங்கப்பூர் துணைப்பிரதமர் திரு தர்மன் சண்முகரத்தினம் அவர்களே,

எனது அருமை அமைச்சர்களே,

முதலமைச்சர்களே,

அழைக்கப்பட்டுள்ள சிறப்பு பேச்சாளர்களே மற்றும் நண்பர்களே,

ஒரு காலத்தில் மேம்பாடு என்பது மூலதனம் மற்றும் தொழிலாளர்களின் அளவைப் பொறுத்ததாக இருந்தது. ஆனால் இன்று மேம்பாடு என்பது நிறுவனங்கள் மற்றும் கருத்துக்களின் தரத்தையும் பொருத்தது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய நிறுவனம் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் அல்லது நித்தி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மாற்றத்துக்கு வழி வகைகள் கூறும் நிபுணத்துவம் மிக்க ஆலோசனை மையமாக நித்தி உருவாக்கப்பட்டது.

நித்தி-யின் செயல்பாடுகளில் சில:

– வெளியிலிருந்து வரும் கருத்துக்களை முக்கிய நீரோட்ட கருத்துக்களாக மாற்றி அரசுக் கொள்கைகளில் சேர்த்துக் கொள்வது, அதற்கு தேசிய சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பை நாடுவது

-வெளி உலகுக்கு, வெளியிலுள்ள நிபுணர்களுக்கு மற்றும் தொழில்புரிவோருக்கு அரசின் இணைப்பாக இருந்து செயல்படுவது

– வெளியில் உள்ள கருத்துக்களை கொள்கை வகுப்பதில் இணைப்பதில் ஒரு கருவியாக செயல்படுவது

இந்திய அரசும் மாநில அரசுகளும் நீண்டகால நிர்வாகப் பாரம்பரியம் கொண்டவை. இந்தப் பாரம்பரியம் இந்தியாவின் பண்டைய காலத்திலிருந்த உள்நாட்டுக் கருத்துக்களையும் வெளிக்கருத்துக்களையும் இணைத்துக் கொள்வது. இந்த நிர்வாகப் பாரம்பரியம் இந்தியாவுக்குப் பல வழிகளில் உதவிகரமாக இருந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக அது ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துள்ளது, அதுவும் பெருமைமிகு பலதரப்பு தன்மை கொண்ட ஒரு நாட்டில். இவையெல்லாம் சிறிய சாதனைகள் அல்ல. எனினும் நாம் மாற்றங்கள் தொடர்ந்திருக்கும் காலத்தில் வாழுகிறோம், நாமும் மாறத்தக்கவர்களாகவே உள்ளோம்.

வெளி மற்றும் உள் காரணங்களுக்காக நாம் மாறி ஆக வேண்டும். ஒவ்வொரு நாடும் தனக்கான அனுபவங்கள், ஆதாரங்கள், வலுவான அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டவை. 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாடு தனக்குள்ளாகவே நோக்கிச் சிந்தித்து தனது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடிந்தது. இன்று நாடுகள் ஒன்றையொன்று சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. எந்த நாடும் இனிமேல் தனியாக இருந்து மேம்பாடு அடைவது மிகவும் அரிது. ஒவ்வொரு நாடும் தனது செயல்பாடுகளை உலகத் தரத்துக்கு இணையாக நிலை நிறுத்த வேண்டும். அல்லது பின் தங்கி விட நேரிடும்.

உள் காரணங்களுக்காவும் மாற்றங்கள் அவசியப்படுகின்றன. நமது நாட்டின் இளைய தலைமுறை மிகவும் வித்தியாசமாக யோசிக்கிறது, ஆசைப்படுகிறது. இந்நிலையில் அரசு பழமையில் வேரூன்றி தொடர்ந்து செயல்பட இயலாது. குடும்பங்களிலும் இளைஞர்களுக்கும் வயதானவர்களுக்கும் இடையிலான உறவு மாறி வருகிறது. ஒரு காலத்தில் குடும்பத்தில் பெரியவர்களுக்கு இளையவர்களைவிட அதிகம் தெரிந்திருந்தது. ஆனால் இன்று புதிய தொழில்நுட்பம் பரவியுள்ளதை அடுத்து நிலைமை நேர் மாறாக மாறியுள்ளது. இதனை அடுத்து வளர்ந்துவரும் எதிர்பார்ப்புகளைச் சந்திக்கவும் எதிர்காலச் சந்ததியினருடன் தொடர்பு கொள்ளவும் அரசின் சவால்கள் அதிகரித்துள்ளன.

இந்தியா மாற்றத்தின் சவால்களைச் சந்திக்க வேண்டுமானால் படிப்படியான மேம்பாடு போதாது. திடீரென ஏற்படும் உருமாற்றம் தேவைப்படுகிறது.

ஆகையால்தான் இந்தியாவுக்கான எனது நெடுநோக்கில் மிகவிரைந்த மாற்றம் என்பதாகும், மிக மெதுவான பரிணாமம் அல்ல.

• இந்தியாவின் மாற்றம் ஆட்சி முறையின் மாற்றமில்லாமல் நடைபெற சாத்தியமில்லை

• ஆட்சிமுறை மாற்றம் மனப்பான்மையில் மாற்றமில்லாமல் ஏற்படச் சாத்தியமில்லை.

• மனப்பான்மை மாற்றம் கருத்துக்களில் மாற்றம் இல்லாமல் சாத்தியப்படாது.

நாம் சட்டங்களை மாற்ற வேண்டும், தேவையற்ற நடைமுறைகளை அகற்ற வேண்டும், செயல்முறைகளை விரைவு படுத்த வேண்டும், தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 19 – வது நூற்றாண்டின் நிர்வாக அமைப்புக்களை வைத்துக் கொண்டு 21 – வது நூற்றாண்டின் மாற்றத்தை நோக்கி நாம் நடைபோட முடியாது.

நிர்வாக மனப்பான்மையில் அடிப்படை மாற்றம் என்பது திடீரென ஏற்படும் அதிர்ச்சி மற்றும் சிக்கல்களால் நடைபெறுவது வழக்கம். இந்தியா நிலையான ஜனநாயக அரசியலைப் பெற்றிருப்பது அதிர்ஷ்டவசமானது. இத்தகைய அதிர்ச்சிகள் இல்லாதபோது நாம் சிறப்பு முயற்சிகளை கட்டாயமாக மேற்கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். தனிநபர்கள் என்ற முறையில் புத்தகங்களையும் கட்டுரைகளையும் படித்து புதிய கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். புத்தகங்கள் நமது மனத்தின் சாளரங்களை திறந்து வைக்கின்றன. எனினும் நாம் எல்லோரும் இணைந்து தீவிர சிந்தனை முறைகளில் ஈடுபட்டாலன்றி கருத்துக்கள் தனிநபர் மனங்களிலேயே நின்றுவிடுகின்றன. நாம் அடிக்கடி புதிய கருத்துக்களை கேட்கிறோம், புரிந்து கொள்கிறோம் ஆனால் அவற்றை நாம் செயல்படுத்துவதில்லை, ஏனெனில் அவை நமது தனித்திறமைகளுக்கு அப்பாற்பட்டவை. நாம் ஒன்றாகச் சேர்ந்தால் கருத்துக்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒட்டுமொத்த ஆற்றல் நமக்கு வரும். நமக்குத் தேவைப்படுவது என்னவெனில் நமது மனங்களை ஒருங்கிணைந்து புதிய உலகளாவிய கருத்துக்களுக்கு திறந்துவிட வேண்டும். இதனைச் செய்ய புதிய கருத்துக்களை நாம் ஒருங்கிணைந்து உள்ளேற்க வேண்டும், தனித்தனியாக அல்ல, இதற்கு தொடர்சியான முயற்சிகள் தேவைப்படுகின்றன.

உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும், நான் பதவியேற்ற பிறகு வங்கியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு செயலாளர்கள் போன்றவர்களுடன் திட்டமிடப்பட்ட ஆலோசனைத் தேடல் அமர்வுகளை நடத்தி அவற்றில் பங்கேற்றுள்ளேன். இத்தகைய ஆலோசனைத் தேடல் அமர்வுகளில் பெற்ற கருத்துக்கள் தற்போது அரசுக் கொள்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகள் உள்ளேயிருந்து கருத்துக்களைத் தேடிப் பெறும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தபடியாக வெளியிலிருந்து கருத்துக்களைக் கொண்டுவரவேண்டும். பண்பாட்டு ரீதியில் பார்த்தால் இந்தியர்கள் வெளியிலிருந்து வரும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெற்றவர்களாகவே உள்ளனர். ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது “ஆ னோ பர்தா: கிரத்வோ யன்து விஷ்வத்” அதாவது எல்லாத் திசைகளில் இருந்துவரும் மேன்மையான சிந்தனைகளை வரவேற்போம் என்பதாகும்.

இதுதான் இந்தியாவை மாற்றி அமைப்போம். உரைக்கோவையின் நோக்கமாகும். இந்த உரைக்கோவையில் நாம் பங்கேற்பது தனிநபர்களாக அல்ல. ஆனால் குழுவின் உறுப்பினராக, குழுவுடன் இணைந்து மாற்றத்தை கொண்டுவருபவராக.

பலரது வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, தங்களது நாட்டை இப்புவியில் சிறந்த நாடாக மாற்ற உதவிய தலைசிறந்த நபர்களின் அறிவிலிருந்தும் ஞானத்திலிருந்தும் நாம் உத்வேகம் பெறுவோம்.

கருத்துக் கோவையில் இது முதலாவது சொற்பொழிவாகும். உங்களுக்கு கருத்துக் கூறுவதற்கான படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நடைமுறையை மேம்படுத்த எங்களுக்கு உதவும் விரிவான வெளிப்படையான கருத்துக்களை வரவேற்கிறோம். இந்தியாவுக்கு வெளியே இருந்தும் இந்தியாவிலிருந்தும் நிபுணர்கள் மற்றும் விவாத்த்தில் பங்கேற்போர் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள அரசு செயலாளர்கள் தங்கள் அமைச்சகங்களின் உள்ளோர் பங்கேற்புடன் தொடர் நடவடிக்கையாக ஒருவார காலத்தில் விவாதக் கூட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நோக்கம் என்னவென்றால் இன்றைய அமர்வில் ஏற்பட்ட கருத்துக்களை குறிப்பிட்ட செயலுக்கான அடிப்படையாக மாற்றுவதுதான். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் துறை அமைச்சர்களும் இந்த அமர்வுகளில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நமது காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த சீர்திருத்தவாதி மற்றும் நிர்வாகிகளில் ஒருவர் சிங்கப்பூரை இப்போது அதுவுள்ள நிலைக்கு மாற்றி அமைத்த லீ குவான் யூ ஆவார். எனவே நாம் இந்த உரைக்கோவையைத் திரு தர்மன் சண்முகரத்தினத்தின் முன்னிலையில் தொடங்கி உள்ளோம் என்பது மிகவும் பொருத்தமானது. சிங்கப்பூர் துணைப் பிரதமரான அவர் சிறந்த அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை வகுப்பாளர். துணைப் பிரதமராக மட்டுமின்றி அவர் பொருளாதார சமூகக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் சிங்கப்பூர் பணநிதி ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். முன்னதாக அவர் மனித ஆற்றல் அமைச்சராகவும், நிதித்துறை 2 – ம் அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர்.

திரு. சண்முகரத்தினம் 1957 – ம் ஆண்டு பிறந்தவர். அவரது மூதாதையர் இலங்கைத் தமிழர்கள் ஆவர். அவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதார இளநிலைப் பட்டம் பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இதே பாடத்தில் முதுகலைப்பட்டத்தையும் பெற்றவர் அவர். ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தின் பொதுநிர்வாகப் பாடத்தில் மற்றொரு முதுகலைப் பட்டமும் பெற்றவர் அவர். ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் அவர் பயின்ற போது இலக்கிய ஆராய்ச்சியாளர் என்று பொருள்படும் லிட்டாயர் பெல்லோ என்ற மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான விருதைப் பெற்றவர்.

திரு சண்முகரத்தினம் உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர். அவரது அறிவு ஆழத்துக்கும் கருத்துச் செறிவுக்கும் ஒரு உதாரணம்தர விரும்புகிறேன். இன்று சிங்கப்பூர் பொருளாதாரம் பெருமளவு அதன் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல் போக்குவரத்தைச் சார்ந்தது. ஆனால் உலக வெப்பமயம் காரணமாக துருவப் பணி உருகி புதிய கடல் மாற்றங்கள் ஏற்பட்டால் சிங்கப்பூரின் முக்கியத்துவம் குறைந்துவிடக் கூடும். இதனை இப்போதே உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல திட்டங்களைத் தீட்ட அவர் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது.

நண்பர்களே! திரு சண்முகரத்தினம் பெற்ற பெருமைகளும் நிகழ்த்திய சாதனைகளும் நீண்ட பட்டியலாக வளரும். ஆனால் நாம் அவரது பேச்சைக் கேட்க ஆர்வமாக உள்ளோம். எனவே மேலும் தாமதியாமல் திரு தர்மன் சண்முகரத்தினத்தை மேடைக்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உலகப் பொருளாதாரத்தில் இந்தியா என்ற பொருள் குறித்து நமக்கு விளக்குமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.