Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்கி வைப்புத் தொகை காப்பீட்டுத் திட்ட டெபாசிட்தாரர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சங்கள்

வங்கி வைப்புத் தொகை காப்பீட்டுத் திட்ட டெபாசிட்தாரர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சங்கள்


மத்திய நிதியமைச்சர் அவர்களே, நிதித் துறை இணையமைச்சர் அவர்களே, ஆர்பிஐ ஆளுநர் அவர்களே, நபார்டு தலைவர் அவர்களே, மத்திய அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.

இன்று வங்கித்துறைக்கும், நாட்டில் கோடிக்கணக்கான வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மிகவும் முக்கியமான நாள்; பல பத்தாண்டுகளாக இருந்து வந்த பெரிய பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதை கண்ட நாள். டெபாசிட்தாரர்கள்தான் முதலில் என்ற உணர்வு மிகவும் அர்த்தமுள்ளதாகும். பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கள் பணத்தை ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள் கடந்த சில நாட்களில் திரும்ப பெற்றுள்ளனர். இந்தத் தொகை ரூ.1300 கோடிக்கும் அதிகமாகும்.

எந்தப்பிரச்சினையும் அது மோசமடைவதற்கு முன்பாக உரிய காலத்தில் எந்த நாடாக இருந்தாலும் தீர்வு காண முடியும். ஆனால், பல ஆண்டுகளாக பிரச்சினைகளை தவிர்க்கும் மனப்பான்மை இருந்து வந்தது. இன்றைய புதிய இந்தியா பிரச்சினைகளைத் தீர்க்க முயலுகிறது, இன்றைய இந்தியா பிரச்சினைகளை தவிர்ப்பதில்லை.

இந்தியாவில் வங்கி டெபாசிட்தாரர்களுக்கு காப்பீட்டு முறை 60களில் இருந்து அமலில் உள்ளது. முன்பு வங்கியில் முதலீடு செய்யப்படும் தொகையில் ரூ.50 ஆயிரம் வரையில்தான் உத்தரவாதம் இருந்தது; பின்னர் இது ஒரு லட்சம் வரை அதிகரிக்கப்பட்டது. அதாவது, வங்கி மூழ்கினால், டெபாசிட் செய்தவர்கள் ஒரு லட்சம் வரை பெறுவதற்கு வழி இருந்தது. ஆனால், அந்த தொகையை பெறுவதற்கு கால வரம்பு இருக்கவில்லை. ஏழைகள்,நடுத்தர பிரிவு மக்களின் கவலைகளை புரிந்து கொண்டு, உத்தரவாத தொகையை ரூ.5 லட்சமாக நாங்கள் உயர்த்தியுள்ளோம். மற்றொரு பிரச்சினை சட்டத்தை திருத்தியதால் சமாளிக்கப்பட்டது. முன்பு ரீபண்டுக்கு கால வரம்பு இல்லை, இப்போது 90 நாட்களுக்குள் அதாவது மூன்று மாதங்களுக்குள் ரீபண்ட் வழங்குவதை எங்கள் அரசு கட்டாயமாக்கியுள்ளது. வங்கி திவாலானாலும், டெபாசிட்தாரர்கள் 90 நாட்களுக்குள் பணத்தை நிச்சயமாகப் பெற முடியும்.

நாட்டின் முன்னேற்றத்தில் வங்கிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. வங்கிகளின் முன்னேற்றத்துக்கு டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும். வங்கியை நாம் காப்பாற்ற விரும்பினால், டெபாசிட்தாரர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

பல சிறிய பொதுத்துறை வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பதன் மூலம், அவற்றின் திறனும், வெளிப்படைத்தன்மையும் ஒவ்வொரு வழியிலும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்பிஐ கூட்டுறவு வங்கிகளை கண்காணிக்கும் போது, அது டெபாசிட்தாரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

வங்கி கணக்கில் மட்டும் பிரச்சினை இருக்கவில்லை. தொலைதூர பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்குவதிலும், பிரச்சினை இருந்தது. இன்று அநேகமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும், வங்கி கிளை வசதியோ, அல்லது வங்கி பிரதிநிதி 5 கி.மீ சுற்றளவுக்குள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் சாதாரண மக்கள் கூட, எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும், 24 மணி நேரமும் சிறிய பரிவர்த்தனைகளைக்கூட செய்ய முடிகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடர் காலத்திலும், இந்தியாவின் வங்கி துறை சுமுகமாக செயல்பட இத்தகைய பல சீர்திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோம். உலகின் வளர்ந்த நாடுகள் கூட தங்கள் குடிமக்களுக்கு உதவுவதில் தடுமாறிய போது, அநேகமாக நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்தியா நேரடி உதவியை மிக விரைவாக வழங்கியது.

ஏழைகள், பெண்கள், தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் போன்ற பெருமளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பிரிவினருக்கு காப்பீடு, வங்கி கடன்கள், நிதி அதிகாரம் வழங்க கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு வங்கி வசதி முன்பு எந்த வகையிலும் கிட்டவில்லை. அதனால், முன்னுரிமை அடிப்படையில் இதை நாங்கள் கையில் எடுத்தோம். ஜன் தன் திட்டத்தின் கீழ், தொடங்கப்பட்ட கோடிக்கணக்கான வங்கி கணக்குகளில், பாதிக்கும் மேற்பட்டவை பெண்களின் கணக்குகளாகும். இதன்மூலம், பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகராரம் பெற்றுள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது.

நண்பர்களே,

நாட்டின் இலக்குகளை அடைய முன்பை விட அதிக தீவிரத்துடன் வங்கித்துறை செயல்பட வேண்டியது இன்றைய தேவையாகும். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா காலத்தில் ஒவ்வொரு வங்கிக் கிளையும் இலக்குகளை அதிகரிப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும். காலம் எவ்வாறு மாறுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த கால அனுபவத்தால் கடன் கொடுப்பதில் உங்களுக்குள்ள தயக்கத்தை கைவிட வேண்டும். நாட்டின் தொலைதூர பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் நகரங்களிலும், கிராமங்களிலும் வசிப்பவர்கள் தங்களது கனவுகளை நனவாக்க வங்கிகளுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். நீங்கள் மக்களுக்கு உதவினால் பொருளாதாரம் மேலும் மேலும் வளர்ந்து உங்களது வளர்ச்சியும் அதிகரிக்கும். இப்போது வங்கிகள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. டெபாசிட்தாரர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. எனவே வங்கிகள் வளர்ச்சியடைய இதுவொரு வாய்ப்பாகும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நன்றி!

*****