பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில், இன்று (27.11.2021) நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் பொது சுகாதார ஆயத்தநிலை மற்றும் கோவிட்-19 தடுப்பூசி நிலவரம் குறித்து சுமார் 2 மணி நேரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுப் பரவலின் உலகளாவிய நிலவரம் மற்றும் நோயின் தன்மை குறித்து பிரதமருக்கு விளக்கிக் கூறப்பட்டது. பெருந்தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கியதிலிருந்து உலக நாடுகள் எதிர்நோக்கிவரும் கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். தேச அளவில் கோவிட்-19 பாதிப்பு மற்றும் தொற்றுப் பரவல் விகிதம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.
தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வீடு தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கம் குறித்தும் அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். அப்போது, இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று உத்தரவிட்ட பிரதமர், முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். தொற்று பாதிப்பை எதிர் கொள்ளும் திறன், நாட்டில் அவ்வப்போது மாறி வருவது குறித்தும், இதனை சமாளிப்பதற்கான பொது சுகாதாரத் துறையினரின் நடவடிக்கைகள் பற்றியும், பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
‘ஒமைக்ரான்‘ எனப்படும் புதிய வகை உருமாறிய தொற்று ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதன் தன்மைகள் மற்றும் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும், அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கம் அளித்தனர். இந்தத் தொற்று இந்தியாவில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய வகைத் தொற்றை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் பேசினார். மேலும், சர்வதேசப் பயணிகளின் வருகை, அவர்களுக்கான பரிசோதனை நடைமுறைகள், குறிப்பாக, ‘அதிக பாதிப்பு‘ அபாயமுள்ள நாடுகளிலிருந்து வருவோரிடம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய சான்றுகளின் அடிப்படையில், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை மறு ஆய்வு செய்யுமாறும் பிரதமர், அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் முயற்சிகள் மற்றும் நாட்டில் காணப்படும் பல்வேறு வகையான உருமாறிய தொற்று குறித்த கண்ணோட்டமும், பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. சர்வதேச பயணிகள் மற்றும் சமுதாயத்தினரிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை, விதிமுறைகளின்படி மரபணு வகைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன், , INSAGOG நடைமுறையின்கீழ் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் பரிசோதனைக் கூடங்கள் வாயிலாக பரிசோதிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டார். மேலும், கோவிட்-19 மேலாண்மைக்காக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் அவர் அறிவுறுத்தினார். மரபணு வகைப்படுத்தலை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார்.
மாநில மற்றும் மாவட்ட அளவில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்ய, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். அதிகளவில் தொற்றுப் பரவல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், தீவிரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தற்போது தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். போதுமான காற்றோட்டம் மற்றும் காற்றில் பரவக்கூடிய தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
புதிய மருந்துப் பொருட்கள் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். பல்வேறு வகையான மருந்துப் பொருட்களை, போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்வதை உறுதிசெய்ய, மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு, அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை வசதி உட்பட, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாநிலங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் & வெண்டிலேட்டர்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதிலும், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு, அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை செயலாளர் திரு.ராஜீவ் கௌபா, நித்தி ஆயோக் உறுப்பினர்(சுகதாரம்) டாக்டர் வி.கே.பால், உள்துறை செயலாளர் திரு.ஏ.கே.பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன், உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா, ஆயுஷ் துறை செயலாளர் திரு.வைத்யா ராஜேஷ் கொடேசா, நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் திரு.துர்கா சங்கர் மிஸ்ரா, தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.ஆர்.எஸ்.சர்மா, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜய் ராகவன் மற்றும் மருந்துப் பொருட்கள் துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
***
Reviewed the COVID-19 and vaccination related situation. In light of the new variant, we remain vigilant, with a focus on containment and ensuring increased second dose coverage. Would urge people to continue following social distancing and wear masks. https://t.co/ySXtQsPCag
— Narendra Modi (@narendramodi) November 27, 2021