புருனே சுல்தான் அழைப்பின் பேரில் 2021 அக்டோபர் 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆசியான் – இந்தியா இடையேயான நீடித்த ஒத்துழைப்பு நிலவரம் குறித்து 18-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு ஆய்வு செய்யும் மற்றும் கொவிட்-19, சுகாதாரம், வர்த்தகம், இணைப்பு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவை உட்பட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்படும். கொவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி உட்பட பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆசியான் இந்தியா உச்சி மாநாடுகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இந்தியா–ஆசியான் நாடுகளிடையே உயர்நிலை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை இந்த மாநாடு வழங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காணொலி காட்சி மூலம் நடந்த 17-வது ஆசியான்-இந்திய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். 18-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, பிரதமர் கலந்து கொள்ளும் 9-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியான்-இந்தியா இடையேயான நீடித்த ஒத்துழைப்பு, பகிரப்பட்ட புவியியல், வரலாறு மற்றும் நாகரீக உறவுகளின் வலுவான அடித்தளத்தின் மீது உள்ளது.
2022-ஆம் ஆண்டு, ஆசியான்–இந்தியா நாடுகளிடையேயான உறவுகளின் 30-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளிடையே உச்சிமாநாடு, அமைச்சர்கள் கூட்டம், மூத்த அதிகாரிகள் கூட்டம் என பல பேச்சுவார்த்தை முறைகள் உள்ளன. ஆசியான்–இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் மற்றும் 2021 ஆகஸ்ட் மாதம் காணொலி காட்சி மூலம் நடந்த கிழக்காசியா உச்சிமாநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திலும், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். ஆசியான் பொருளாதார மாநாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் கலந்து கொண்டார். அதில் பொருளாதார கூட்டுறவை வலுப்படுத்த அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
2021 அக்டோபர் 27-ம் தேதி காணொலி காட்சி மூலம்நடைபெறும் 16-வது கிழக்காசிய உச்சிமாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். கிழக்காசிய உச்சிமாநாடு, இந்தோ–பசிபிக்கில் முன்னணி தலைவர்கள் தலைமையிலான அமைப்பு. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் கிழக்காசியாவின், புவிஅரசியல் உருவாக்கத்தில் இது முக்கிய பங்காற்றியுள்ளது. 10 ஆசியான் நாடுகளைத் தவிர கிழக்காசிய உச்சிமாநாட்டு அமைப்பில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. கிழக்காசியா உச்சிமாநாட்டில் இந்தியா அடிப்படை உறுப்பினர் நாடாக உள்ளது. கிழக்காசிய உச்சிமாநாட்டை வலுப்படுத்தவும் மற்றும் தற்போதைய சவால்களை திறம்பட சமாளிக்கவும் இந்தியா உறுதியாக உள்ளது.
16-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில், பிராந்தியம் மற்றும் சர்வதேச நலன் குறித்த விஷயங்கள், கடல்சார் பாதுகாப்பு,கொவிட்-19 ஒத்துழைப்பு ஆகியவை குறித்து தலைவர்கள் ஆலோசிப்பர். மனநலன். சுற்றுலா மூலமான பொருளாதார மீட்பு, இந்தியா ஆதரவுடன் மேற்கொள்ளும் பசுமை மீட்புப் பற்றிய பிரகடனங்களையும் தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
——