Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

26.6.2016 அன்று ஒலிபரப்பானமனதின் குரல் (மன்-கீ-பாத்) நிகழ்ச்சியின் தமிழாக்கம்


எனதருமை நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் என் நல்வணக்கங்கள். கடந்த ஆண்டில் நாம் கோடையின் கடுமையான வெப்பம், வறட்சி, நீர்த்தட்டுப்பாடு என ஏகப்பட்ட சவால்கள் நிறைந்த சந்தர்ப்பங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் கடந்த 2 வாரக்காலமாக வெவ்வேறு இடங்களில் மழை பெய்திருக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மழை பற்றிய செய்திகள் தவிர, ஒரு புத்துணர்வையும் உணர முடிகிறது. இதை நீங்களும் அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த முறை மழை நன்றாக இருக்கும், எல்லா இடங்களிலும் பெய்யும், மழை அதன் காலம் முழுக்க நீடித்திருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் தெரிவிக்கும் தகவல் உங்களுக்கும் இந்த புத்துணர்வை அளித்திருக்கும். இவை புதுத் தெம்பை அளிக்கக் கூடிய செய்திகள். நான் அனைத்து விவசாய நண்பர்களுக்கும் மழைக்காலத்துக்கான நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் நாட்டில் எப்படி விவசாயிகள் கடுமையாக உழைக்கிறார்களோ, அதே போல நமது விஞ்ஞானிகளும், புதிய சிகரங்களை நோக்கி நம் நாட்டை கொண்டு செல்ல ஏராளமான வெற்றிகளைப் பெற்று வருகிறார்கள். நமது புதிய தலைமுறை விஞ்ஞானிகள் ஆக கனவு காண வேண்டும், அறிவியல் பால் நாட்டம் கொள்ள வேண்டும், இனிவரும் தலைமுறையினருக்காக ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற தாகத்தோடு நமது இளைய தலைமுறையினர் முன்னேற வேண்டும் என்பது முன்பிருந்தே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. நான் இன்று உங்களோடு மேலும் ஒரு சந்தோஷமான தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் நேற்று புணே நகர் சென்றிருந்தேன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி அங்கே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, புனே பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி இருந்தார்கள், இது ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது, அந்த மாணவர்களை சந்திக்க வருமாறு அழைத்திருந்தேன். எனது இந்த இளைய தோழர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் என்னில் தோன்றியது, நானும் பார்த்து விட்டு வர எண்ணினேன். அவர்கள் மனங்களில் சக்தி இருக்கிறது, உற்சாகம் இருக்கிறது, அதை நானும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. கடந்த பல ஆண்டுகளாக பல மாணவர்கள் இந்தப் பணிக்குத் தங்கள் பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள். இந்த கல்விசார் செயற்கைக்கோள் ஒரு வகையில் இளைய பாரதத்தின் சிறகடிக்கும் நம்பிக்கையின் உயிர்ப்பு நிறைந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று. இதை நமது மாணவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தச் சின்னஞ்சிறிய செயற்கைக்கோளுக்குப் பின்னே இருக்கும் கனவுகள், மிகப் பெரியவை. அவை அதிக உயரம் சிறகடிப்பவை, மாணவர்களின் உழைப்பு, மிகவும் ஆழமானது. புனேயில் மாணவர்கள் செய்தது போலவே, தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களும் ஒரு செயற்கைக் கோளை உருவாக்கி, அந்த சத்யபாமாசேட்டும் விண்ணில் ஏவப்பட்டது. ஒவ்வொரு சிறுவன் மனதிலும் விண்ணைத் தொடவும், விண்மீன்களைக் கைத்தலத்தில் அடக்கவும் விருப்பம் எப்போதும் இருக்கிறது என்று நாம் சிறுவயது முதல் கேள்விப் பட்டு வந்திருக்கிறோம்; இந்த வகையில் இஸ்ரோவால் ஏவப்பட்ட, மாணவர்களால் உருவாக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் என் பார்வையில் மிகவும் சிறப்பானவை, மிகவும் முக்கியமானவை. அனைத்து மாணவர்களுமே வாழ்த்துகளுக்கு உரியவர்கள். ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று இஸ்ரோவின் நமது விஞ்ஞானிகள் ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, தங்களின் பழைய பதிவைத் தகர்த்து புதியதொரு பதிவை ஏற்படுத்தி இருப்பதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் பலப்பல பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன்; இதில் மேலும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால், பாரதம் விண்ணில் ஏவிய இந்த 20 செயற்கைக் கோள்களில் 17 செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளுடையவை என்பது தான். அமெரிக்கா உட்பட பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவும் பணி பாரத மண்ணில், பாரத விஞ்ஞானிகள் வாயிலாக செயல்படுத்தப்பட்டது, அதோடு கூடவே நமது மாணவர்கள் ஏவிய இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணைச் சென்றடைந்தன. மேலும் சிறப்பான விஷயம் குறைந்த முதலீடு, அதிக வெற்றிக்கான உத்திரவாதம் என்ற வகையில் இயங்கி, உலகில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது இஸ்ரோ, இதனால் தான் உலகின் பல நாடுகள் செயற்கைகோள்களை ஏவ இன்று பாரதத்தின் பால் தங்கள் பார்வையை செலுத்தி வருகின்றன.

எனதருமை நாட்டு மக்களே, பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் என்பது இன்று பாரத மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. ஆனால் சில நிகழ்வுகள், இதில் ஒரு புதிய உயிர்ச் சக்தியை ஊட்டுகிறது, புதிய ஜீவனை ஏற்படுத்துகிறது. இந்த முறை வெளிவந்த 10ஆம், 12ஆம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகளில் நமது பெண்கள் களத்தில் வெற்றி மீது வெற்றி பெற்று பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறார்கள். என் நாட்டுமக்களே, இதே போன்ற மேலும் ஒரு மகத்துவம் நிறைந்த விஷயம் இருக்கிறது, ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று இந்திய விமானப் படையில் முதல் முறையாக போர்விமான விமானிகளின் முதல் பெண்கள் குழு வானில் பறந்தது, இதைக் கேள்விப்பட்டவுடன் மயிர்க்கூச்செறிதல் ஏற்படுகிறது இல்லையா! நமது மூன்று Flying Officer பெண்களான அவனி சதுர்வேதி, பாவனா காந்தா, மோகனா சிங் ஆகியோர் நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் எனும் போது எத்தனை பெருமிதமாக இருக்கிறது!! இந்த 3 பெண்கள் பற்றிய சிறப்பான ஒரு விஷயம், Flying officer அவனி மத்திய பிரதேசத்தின் ரேவாவைச் சேர்ந்தவர், flying officer பாவனா, பீஹார் மாநிலத்தின் பேகுசராயைச் சேர்ந்தவர், flying officer மோஹனா குஜராத்தின் வடோதராவைச் சேர்ந்தவர். இந்த மூன்று பெண்களுமே இந்தியாவின் மாநகரங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவர்கள் தத்தமது மாநிலத் தலைநகரங்களைச் சேர்ந்தவர்களும் இல்லை. இவர்கள் சின்னச் சின்ன நகரங்களிலிருந்து வந்தாலும் கூட, வானைத் தொடும் கனவுகளைக் கண்டார்கள், அதை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறார்கள். நான் அவனி, மோஹனா, பாவனா என்ற இந்த 3 மகள்களுக்கும், அவர்களின் தாய் தந்தையருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் பலவற்றை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே, சில நாட்கள் முன்னதாக, உலகம் முழுவதும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினத்தின் ஆண்டுநிறைவைக் கொண்டாட சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு இந்தியன் என்ற முறையில், உலகம் முழுவதும் யோகத்தால் எப்போது ஒன்றுபடுகிறதோ, அப்போது உலகம் நமது நேற்று, இன்று, நாளையோடு ஒருங்கிணைகிறது என்று நாம் உணர்கிறோம். உலகத்தோடு நமக்கு ஒரு அபூர்வமான உறவு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கூட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிக ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும், பலவகைகளில், வண்ணமயமாகவும், வண்ணங்கள் நிறைந்த சூழலுடனும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. எனக்குமே கூட சண்டிகரிடில் பல்லாயிரக்கணக்கான யோகாசன விரும்பிகளோடு சேர்ந்து யோகாசனம் பயிலக்கூடிய ஒரு நல்வாய்ப்பு கிட்டியது. சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரிடமும் காணப்பட்ட உற்சாகம் பார்க்கப்பட வேண்டிய ஒரு காட்சி. கடந்த வாரத்தில் பாரத அரசு இந்த சர்வதேச யோகா தினத்தையொட்டி, சூரிய நமஸ்காரம் என்ற தபால் தலை வெளியிட்டிருந்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த முறை உலகில் யோகா தினத்தோடு வேறு இரண்டு விஷயங்கள் மீதும் மக்களின் சிறப்பு கவனம் சென்றது. ஒன்று, அமெரிக்காவின் ந்யூயார்க் நகரத்தில், ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடம் இருக்கும் இடத்தில், அந்தக் கட்டிடத்தின் மேலே யோகாவின் பலவகை ஆசனங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன, அதைக் கடந்து சென்ற பலர் அதைப் படம் பிடித்த வண்ணம் இருந்தார்கள், உலகம் முழுவதிலும் இந்தப் புகைப்படங்கள் பிரபலமாயின. இந்த விஷயம் எந்த இந்தியனைத் தான் பெருமிதம் கொள்ளச் செய்யாது, சொல்லுங்கள் பார்க்கலாம்?!! இன்னொரு விஷயமும் நடந்தது, தொழில்நுட்பம் தனது பணியை ஆற்றுகிறது. சமூக ஊடகங்களுக்கு என ஒரு அடையாளம் ஏற்பட்டிருக்கிறது, இந்த முறை twitter, யோகாசனப் படங்களோடு நுட்பமான ஒரு பயன்பாட்டைச் செய்தது. #Yoga Day எனத் தட்டும் போதே யோகம் பற்றிய காட்சிகள் அடங்கிய சித்திரங்கள் நமது செல்பேசியில் வந்து விடுகின்றன, உலகம் முழுவதிலும் இது பிரபலமானது. யோகம் என்றால் இணைத்தல் என்று பொருள். யோகத்திடம் உலகம் முழுவதையும் இணைக்கும் வல்லமை இருக்கிறது. நாம் யோகத்தோடு இணைந்தால் மட்டும் போதும், அது தான் முக்கியம்.

மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னாவைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீவாஸ்தவ் அவர்கள் இந்த யோக தினத்தன்று தொலைபேசி மூலம் அழைத்து, எனக்கு ஒரு செய்தி அளித்திருக்கிறார். இது உங்கள் அனைவருக்கும் தான் என்றாலும், அதிகம் என்னைக் குறித்துத் தான் என்று எனக்குப் படுகிறது:

” என் நாடு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என் நாட்டின் ஏழை கூட நோயற்று வாழ வேண்டும். இதற்காக தூர்தர்ஷனில் காட்டப்படும் ஒவ்வொரு சீரியலுக்கும் இடையே வரும் விளம்பரங்களில், ஏதேனும் ஒரு விளம்பரத்தில் யோகாசனத்தை எப்படிச் செய்வது, அதனால் என்ன பயன்கள் என யோகம் பற்றிக் காட்டலாமே என்று நான் விரும்புகிறேன். ”

ஸ்வாதி அவர்களே, உங்கள் ஆலோசனை நன்றாகவே இருக்கிறது, ஆனால் நீங்கள் சற்று கவனமாகப் பார்த்தால், தூர்தர்ஷனில் மட்டுமல்ல, இப்போதெல்லாம் இந்தியா மற்றும் அந்நிய நாட்டு தொலைக்காட்சிகள், ஊடகங்களில் எல்லாம் தினமும் யோகாசனத்தின் பிரச்சாரம் உலகம் முழுக்க ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் வேறு வேறு சமயங்களில் ஒளிபரப்பு செய்கின்றன. ஆனால் நீங்கள் கவனமாகப் பார்த்தீர்களேயானால், யோகம் பற்றித் தெரிந்து கொள்ள இவை அனைத்தும் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. நான் பார்த்த வரையில், யோகத்துக்கென்றே 24 மணி நேரமும் அர்ப்பணிக்கப்பட்ட சேனல்கள் உலகின் சில நாடுகளில் இருந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஒவ்வொரு நாளும் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் மூலம், நாளொரு ஆஸனம் என்ற வீடியோவை நான் பகிர்ந்து வந்தேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் ஆயுஷ் அமைச்சகத்தின் இணையதளத்தில் நுழைந்தால், 40-45 நிமிடம் ஒன்றன் பின் ஒன்றாக உடலின் பல உறுப்புக்களுக்காக எந்த வகையான யோகாசனம் செய்யலாம், அனைத்து வயதினரும் செய்யலாம் என்பது போன்ற எளிய ஆசனங்களுக்கான ஒரு நல்லதொரு வீடியோ இணையதளம் இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் வாயிலாக அனைத்து யோகாசனப் பிரியர்களுக்கும் சொல்ல விரும்புவது, நீங்கள் கண்டிப்பாக இதோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்பது தான்.

யோகாசனம் தொடர்பான எத்தனையோ வகையான பிரிவுகள் இருக்கின்றன, அவரவருக்கென வழிமுறைகளும், அவரவருக்கென முக்கியத்துவங்களும் இருக்கின்றன, அவரவருக்கென பிரத்யேகமான அனுபவமும் இருக்கிறது, ஆனால் அனைவரின் இலக்கும் ஒன்று தான். எத்தனையோ வகையான யோக முறைகள் இருக்கின்றன, எத்தனையோ வகையான யோக அமைப்புக்கள் இருக்கின்றன, எத்தனையோ விதமான யோக குருமார்கள் இருக்கின்றார்கள், யோகாசனம் நோயிலிருந்து நிவாரணம் அளிக்க கூடிய ஒரு சாதனம் என்பதால், நான் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன், நாம் அனைவரும் நீரிழிவு நோய்க்கு எதிராக, யோகம் வாயிலாக வெற்றிகரமான இயக்கத்தை செயல்படுத்த முடியாதா? என்று கேட்டிருந்தேன். யோகத்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவ முடியுமா? சிலருக்கு இதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் வழியேற்படுத்தி இருக்கிறார்கள், நீரிழிவு நோய்க்கான தீர்வு இருக்கிறது என யாரும் கூறுவதில்லை என்பதை நான் அறிவேன். மருந்துகள் உட்கொண்டு வாழ்கையை நடத்த வேண்டியிருக்கிறது, நீரிழிவு நோய் அனைத்து நோய்களின் தலைவனாக ஆட்சி செய்கிறது. பல வகையான நோய்களின் நுழைவாயிலாக இது இருப்பதால், அனைவரும் நீரிழிவு நோயிலிருந்து தப்பவே விரும்புகிறார்கள். பலர் இந்த திசையில் பணியாற்றியிருக்கிறார்கள். சில நீரிழிவு நோயாளிகளே கூட, தங்கள் யோகப்பயிற்சி மூலமாக அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். ஏன் நாம் இந்த அனுபவங்களை எல்லாம் மக்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளக் கூடாது!! இதற்கு ஒரு உந்துதலை அளிப்போமே. ஆண்டு முழுவதும் ஒரு சூழலை ஏற்படுத்துவோமே!!.

#Yoga_Fights_Diabetesஇல், மீண்டுமொரு முறை கூறுகிறேன், #Yoga_Fights_Diabetes ஐ பயன்படுத்தி, உங்கள் அனுபவங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது எனக்கு NarendraModiAppஇல் அனுப்பி வையுங்கள் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். யாரிடம் என்ன அனுபவம் இருக்கிறது என்று பார்ப்போமே, முயற்சி செய்து பார்க்கலாமே!! #Yoga_Fights_Diabetes இல் உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ள நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே, சில வேளைகளில் எனது மனதின் குரல் நிகழ்ச்சி கேலி செய்யப்படுகிறது, விமர்சனம் செய்யப்படுகிறது, ஆனால் இவையெல்லாம் நாம் ஜனநாயகம் என்ற வரையறைக்குள் இருப்பதால் தான் சாத்தியமாகிறது. ஆனால் ஜூன் மாதம் 26ஆம் தேதி பற்றி நான் உங்களோடு பேசும் போது, குறிப்பாக இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிப் பேச விரும்புகிறேன். சிறப்பாக புதிய தலைமுறையினரிடத்தில் நான் தெரிவிக்க விரும்புவதெல்லாம், எந்த மக்களாட்சி நமக்குப் பெருமை சேர்க்கிறதோ, எந்த மக்களாட்சி நமக்கு மிகப் பெரிய சக்தி அளித்திருக்கிறதோ, அதுவே ஒவ்வொரு குடிமகனுக்கும் பெரிய வல்லமையைக் கொடுத்திருக்கிறது; ஆனால் 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதியும் ஒரு நாள் தான். ஆனால் ஜூன் மாதம் 25ஆம் தேதியன்று இரவு, ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று காலை இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அது எத்தனை இருண்ட நாளாக இருந்தது என்றால், அன்று தான் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஒட்டுமொத்த நாடும் சிறைச்சாலையாக மாறியது. ஜெய்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட நாட்டின் இலட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான தலைவர்கள், பல அமைப்புக்கள், சிறைக்கம்பிகளுக்குள்ளே அடைக்கப்பட்டார்கள். அந்த பயங்கரமான இருண்ட நிகழ்வு பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டு விட்டன. பல விவாதங்கள் நடந்தேறி விட்டன, ஆனால் இன்று ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நமது சக்தி மக்களாட்சி முறையில் தான் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது; நமது சக்தி மக்கள் சக்தி, நமது சக்தி ஒவ்வொரு குடிமகனும் தான். இந்த கட்டுப்பாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், மேலும் வல்லமை படைத்தவர்களாக ஆக வேண்டும், மக்களாட்சி முறையை வாழ்ந்து காட்டிய பாரத மக்களிடம் இந்த சக்தி இருக்கிறது. செய்தித்தாள் நிறுவனங்களுக்குப் பூட்டு போடப்பட்டது, வானொலி ஒரே மொழியையே பேசினாலும், மற்றொரு புறத்தில் நாட்டின் மக்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் ஜனநாயக சக்திகளுக்கு அங்கீகாரம் அளித்தார்கள். இந்த விஷயங்கள் எந்த ஒரு நாட்டுக்கும் பெரும்சக்தி அளிக்கக் கூடியவை. இந்தியாவின் சாமான்யனுடைய ஜனநாயக சக்தியின் உத்தமமான எடுத்துக்காட்டு அவசர நிலையின் போது பளிச்சிட்டது, ஜனநாயக சக்தியின் இந்த அடையாளத்தை நாட்டுக்கு நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். மக்களுக்கு அவர்கள் சக்தி பற்றித் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும், மக்களின் சக்திக்கு பலம் கூட்ட வேண்டும், அனைத்து வகையிலும் நமது இயல்பு இப்படித் தான் இருக்க வேண்டும், மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். மக்கள் 5 ஆண்டுகள் நாட்டை நிர்வாகம் செய்ய உங்களுக்கு வாக்களித்து, உங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது மக்களாட்சியின் பொருள் இல்லை, வாக்களிப்பது என்பது மக்களாட்சியில் மகத்துவம் வாய்ந்த ஒன்றாகும், ஆனால் இதைத் தவிர வேறு பல மகத்துவம் வாய்ந்த விஷயங்களும் அதில் உண்டு, அதில் மிகப் பெரிய அம்ஸம் மக்கள் பங்களிப்பு. மக்களின் இயல்பு, மக்களின் எண்ணப்பாடு, அரசுகள் எந்த அளவுக்கு அதிகமாக மக்களோடு இணைகின்றனவோ, அந்த அளவுக்கு நாட்டின் சக்தியும் அதிகரிக்கும். மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையே ஏற்படும் இடைவெளி தான் நமது வீழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. மக்கள் பங்களிப்பு மூலமாக மட்டுமே நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது எப்போதும் என் முயற்சியாக இருந்து வந்திருக்கிறது.
இப்போது அரசு தன் இரண்டாண்டுக்காலத்தை நிறைவு செய்திருக்கும் வேளையில், சில புதுமையான எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள், நீங்கள் இந்த அளவுக்கு மக்களாட்சி பற்றி பேசுகிறீர்களே, ஏன் நீங்கள் உங்கள் அரசு பற்றி மக்கள் மனங்களில் என்ன மதிப்பீடு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளக் கூடாது என்று எனக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். இது ஒரு வகையில் சவால் தொனியில் விடுக்கப்பட்டிருக்கிறது, ஆலோசனையாகவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் என் மனதை உலுக்கி விட்டார்கள். நான் என் மூத்த சகாக்கள் முன்பாக இந்த விஷயத்தை வைத்த போது வந்த முதல் எதிர்வினை, இல்லை இல்லை ஐயா, என்ன காரியம் செய்ய இருக்கிறீர்கள்? என்பது தான். இன்று தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மாறி விட்டது என்றால், யாரோ சிலர் ஒரு குழுவாக இணைந்து, தொழில்நுட்பத்தைத் தவறான முறையில் பயன்படுத்தினால், ஆய்வை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று தங்கள் கவலையைத் தெரிவித்தார்கள். ஆனால், இல்லை, இல்லை ரிஸ்க் எடுக்கத் தான் வேண்டும், முயற்சி செய்து பார்க்கலாமே என்று எனக்குப் பட்டது. என்ன ஆகிறது என்று அதையும் தான் பார்த்து விடுவோமே. எனதருமை நாட்டுமக்களே, சந்தோஷமான விஷயம் என்னவென்றால், நான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வேறு வேறு மொழிகளைப் பயன்படுத்தி, மக்களிடம் எனது அரசைப் பற்றி மதிப்பீடு செய்ய அழைப்பு விடுத்தேன். தேர்தலுக்குப் பிறகு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன, தேர்தலுக்கு இடையேயும் கூட ஆய்வுகள் நடக்கின்றன, சில வேளைகளில் சில விஷயங்கள் தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன, மக்களின் நன்மதிப்பு பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவற்றின் மாதிரியளவு, sample size அதிகம் இருப்பதில்லை. உங்களில் பலர் Rate my government, my gov.inஇல் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பல இலட்சக்கணக்கானவர்கள் இதில் தங்கள் நாட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும், 3 இலட்சம் பேர்கள் ஒவ்வொரு கேள்விக்குமான விடையளிக்கும் சிரமத்தை மேற்கொண்டார்கள், கணிசமான நேரத்தை இதற்கென ஒதுக்கினார்கள். நான் அந்த 3 இலட்சம் பேர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட்டு அரசை மதிப்பிட்டிருக்கிறார்கள். நான் முடிவுகள் பற்றிப் பேசவில்லை, அது பற்றி நமது ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக பேசுவார்கள். ஆனால் இது ஒரு நல்ல பரிசோதனை என்று மட்டும் என்னால் கூற முடியும்; இந்தியாவின் அனைத்து மொழி பேசும் மக்களும், ஒவ்வொரு பாகத்தில் இருப்பவர்களும், பலவகையான பின்னணியிலிருந்து வருபவர்களும், இதில் பங்கெடுத்தார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம். ஆனால் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்த விஷயம் ,இந்திய அரசு மேற்கொண்டு வரும் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் இணையதளத்தில் அதிகம் பேர்கள் அதிக உற்சாகத்தோடு பங்கெடுத்தார்கள் என்பது தான். அப்படியென்றால் கிராமப்புற வாழ்க்கையோடு இணைந்த, ஏழ்மையோடு இணைந்த மக்கள் இதில் அதிக அளவில் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்பது தான் பொருள், இது தான் என் தொடக்ககட்ட ஊகமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று சில ஆண்டுகள் முன்னதாக மக்களின் குரல் நசுக்கப்பட்ட காலம் என்று ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ மக்கள் தாங்களே முடிவு செய்கிறார்கள். அரசு நன்மை செய்கிறதா, பாதகம் செய்கிறதா, நன்றாக செயல்படுகிறதா மோசமாக செயல்படுகிறதா என்று தெரிந்து கொள்வோமே, இது தானே மக்களாட்சி முறையின் பலம்?

எனதருமை நாட்டுமக்களே, இன்று சிறப்பாக ஒரு விஷயம் பொருட்டு நான் உங்களிடம் விண்ணப்பிக்க இருக்கிறேன். விரிவான வகையில் வரிகள் ஒரு காலத்தில் இருந்தன, அப்போது வரி ஏய்ப்பு இயல்பாகவே ஆகி இருந்தது. ஒரு காலத்தில் அந்நிய நாட்டுப் பொருட்களை நம் நாட்டுக்குக் கொண்டு வருவதில் கட்டுப்பாடுகள் இருந்தன, அதனால் கடத்தலும் பெருகியிருந்தது. ஆனால் மெல்ல மெல்ல காலம் மாறியது; இப்போது வரி கட்டுபவர்களை வரியமைப்போடு இணைப்பது அதிக கடினமான செயல் அல்ல, இருந்தாலும், பழைய இயல்புகள் எளிதில் மறைவதில்லை. அரசிடமிருந்து விலகி இருப்பதே அதிக நன்மை தருவது என்று இன்னமும் கூட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். விதிமுறைகளை விட்டு விலகி, ஓடி நாம் நமது நிம்மதியையும் அமைதியையும் தான் கெடுத்துக் கொள்கிறோம் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு சிறிய மட்டத்தில் இருக்கும் நபர் கூட நமக்கு குடைச்சல் கொடுக்க முடியும். இந்த நிலைக்கு நம்மை நாமே ஏன் தள்ளிக் கொள்ள வேண்டும்? ஏன் நாமே முன்வந்து வருமானம் தொடர்பாக, நமது சொத்துக்கள் தொடர்பாக அரசிடம் சரியான கணக்குகளை சமர்ப்பிக்கக் கூடாது? பழைய நாளைய மனோநிலையிலிருந்து விலகி, புதிய பாதையை உங்களுடையதாக்குங்கள். இந்தச் சுமையிலிருந்து விடுதலை பெற நான் நாட்டு மக்களிடம் வேண்டிக் கொள்கிறேன். யாரிடம் வெளியிடப்படாத வருமானம் இருக்கிறதோ, கணக்கு காட்டப்படாத வருவாய் இருக்கிறதோ, அவர்களுக்காக வேண்டி இந்திய அரசு ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் அறிவிக்காத வருவாயை வெளியிடுங்கள் என்று கூறியிருக்கிறோம். கணக்கு காட்டப்படாத வருமானத்தை கணக்கில் காட்ட அரசு சிறப்பானதொரு வாய்ப்பை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அளித்திருக்கிறது. அபராதத் தொகை செலுத்தி நாம் பல வகையான சுமைகளிலிருந்து விடுதலை அடையலாம். தன்னிச்சையாக யார் ஒருவர் தனது சொத்துக்கள் தொடர்பாக, கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பாக அரசுக்கு தன்னிடம் இருக்கும் தகவல்களை அளிக்கிறார்களோ, அவர்களை அரசு எந்த விதமான ஆய்வுக்கும் உட்படுத்தாது என்று நான் வாக்கும் அளித்திருக்கிறேன். இத்தனை சொத்து எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என ஒருமுறை கூட கேட்கப்பட மாட்டாது. ஆகையால் தான் நான் கூறுகிறேன், ஒளிவுமறைவற்ற அமைப்போடு இணைய இது உங்களுக்கு நல்வாய்ப்பு. இது மட்டுமல்ல நாட்டுமக்களே, நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள இன்னொன்றும் இருக்கிறது. செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை இந்தத் திட்டம் இருக்கும், இதை ஒரு கடைசி வாய்ப்பாக நீங்கள் கருதலாம். இடையே நான் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு அரசு விதிமுறைகளோடு இணைய விரும்பாத நாட்டின் குடிமகன் யாருக்கேனும் ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால், அவர்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யப்பட மாட்டாது என்று கூறியிருந்தேன். இதையே தான் நான் நாட்டு மக்களிடமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு, உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் வகையில் ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும்; ஆகையால் தான் மீண்டும் ஒரு முறை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு முன்பாக நீங்கள், இந்த வசதி அளிக்கும் ஆதாயத்தைப் பெற்று, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு வரக் கூடிய இடர்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே, இன்று ஏன் நமது மனதின் குரலில் இந்த விஷயத்தை நான் கூற வேண்டியிருந்தது என்றால், நான் இப்போது தான் வருவாய்த் துறை – வருமான வரி, சுங்கம், தீர்வை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளோடு இரண்டு நாட்கள் கலந்து உரையாடினேன், பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். குடிமக்களாகிய நம்மை கள்வர்கள் என்று கருதி நடந்து கொள்ள வேண்டாம் என்று நான் தெள்ளத்தெளிவாக அவர்களிடம் கூறியிருக்கிறேன். குடிமக்களாகிய நம்மிடம் நம்பிக்கை வைக்க வேண்டும், கைப்பிடித்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் விதிமுறைகளோடு இணைய விரும்பினார்களேயானால் அவர்களை ஊக்குவித்து, அன்போடு உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள், நம்பிக்கை தரும் சூழலை ஏற்படுத்துவது மிக அவசியமானது. நமது நடத்தை மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வரிசெலுத்துபவருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். நான் அவர்களிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்ட பிறகு, நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் போது, நாமும் அதற்குரிய பங்களிப்பை நல்க வேண்டும் என்று இப்போது அவர்களும் உணர்கிறார்கள். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் நான் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன், அவற்றில் ஒன்றை நான் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். 125 கோடி மக்களில் வெறும் ஒண்ணரை இலட்சம் பேர்களுடைய வரிவிதிக்கப்படக் கூடிய வருமானம் 50 இலட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கிறது என்ற விஷயத்தை நீங்கள் நம்பக் கூட மாட்டீர்கள். இது யாராலும் நம்ப முடியாத விஷயம். 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட வரிவிதிக்கப்படக் கூடிய வருமானம் உடையவர்கள் பெரிய பெரிய நகரஙக்ளில் பல இலட்சக்கணக்கில் புலப்படுகிறார்கள். ஒரு கோடி, இரண்டு கோடி பெறுமானமுள்ள பங்களாக்களை நாம் காணும் போது, இவர்கள் எப்படி 50 இலட்சத்துக்கும் குறைவான வருமானம் என்ற படிநிலையில் இருப்பார்கள் என்று புரிந்து விடும். அப்படியென்றால் எங்கோ கோளாறு இருக்கிறது, இந்த நிலையை மாற்ற வேண்டும், அதையும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு முன்பாக மாற்ற வேண்டும். அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் முன்பாக, மக்களுக்கு ஒரு வாய்பை அளிக்க வேண்டும், ஆகையால் தான் எனதருமை சகோதர சகோதரிகளே, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைத் தெரிவிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. இரண்டாவது வகையில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படக்கூடிய சங்கடங்களிலிருந்து விடுதலை அடைய இது ஒரு வழி அமைத்துக் கொடுக்கிறது. நான் நாட்டு நன்மைக்காக, நாட்டின் ஏழைகளின் நலனுக்காக உங்களை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள விண்ணப்பித்துக் கொள்கிறேன், செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு உங்களில் யாருக்கும் சங்கடம் ஏற்படக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.

எனதருமை நாட்டு மக்களே, இந்த நாட்டின் சாமான்யன் நாட்டுக்காக தனது பங்களிப்பை ஆற்றும் ஒரு வாய்ப்பைத் தேடிக் கொண்டே இருக்கிறான். எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்ட போது நாட்டின் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் மானியத்தைத் தாமாகவே முன்வந்து துறந்தன. யாரிடமெல்லாம் கணக்கில் காட்டப்படாத வருவாய் இருக்கிறதோ, அவர்கள் முன்பாக ஒரு சிறந்த எடுத்துக்காட்டை வைக்க விரும்புகிறேன். smart city நிகழ்ச்சியை ஒட்டி நேற்று நான் புணே சென்றிருந்த போது அங்கே சந்திரகாந்த் தாமோதர் குல்கர்ணி அவர்கள், அவரது குடும்பத்தார் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நான் அவரை சிறப்பாக சந்திக்க விரும்பியதற்கான காரணம் இருக்கிறது, யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்திருப்பார்களோ, அவர்களுக்கு நான் கூறுவது கருத்தூக்கம் அளிக்கலாம், அளிக்காமலும் போகலாம், ஆனால் சந்திரகாந்த் குல்கர்ணி பற்றிய விஷயம் கண்டிப்பாக கருத்தூக்கம் அளிக்கும். என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த சந்திரகாந்த் குல்கர்ணி அவர்கள் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்; அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவருக்கு 16000 ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கிறது. எனதருமை நாட்டு மக்களே, நான் கூறவிருக்கும் விஷயம் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். வரி ஏய்ப்பு செய்வதை ஒரு பழக்கமாகவே வைத்திருப்பவர்களுக்கு இது அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம், எந்த சந்திரகாந்த் குல்கர்ணி அவர்களுக்கு வெறும் 16000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கிறதோ, அவர் சில காலம் முன்பாக தனது ஓய்வூதியத் தொகையான 16000 ரூபாயிலிருந்து நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாயை தூய்மையான பாரதம் இயக்கத்துக்கான தனது பங்களிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடிதம் மூலமாக எனக்குத் தெரிவித்திருந்தார். இது மட்டுமல்ல, இதற்காக அவர் எனக்கு 52 பின் தேதியிட்ட காசோலைகளை அனுப்பி வைத்திருந்தார். எந்த நாட்டின் ஒரு அரசு அலுவலர் ஓய்வு பெற்ற பின் 16000 ரூபாய் ஓய்வூதியத்தில் 5000 ரூபாயை தன்னிச்சையாக தூய்மையான பாரதம் இயக்கத்துக்காக அளிக்கிறாரோ, அந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை. சந்திரகாந்த் குல்கர்ணி அவர்களை விடக் கருத்தூக்கம் அளிக்கக் கூடியவர் யாரும் இருக்க முடியாது. தூய்மையான பாரதம் இயக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கும் சந்திரகாந்த் குல்கர்ணி அவர்களை விடவும் சிறப்பான எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. நான் சந்திரகாந்த் அவர்களை சந்திக்குமாறு அழைப்பு விடுத்தேன், அவரது வாழ்க்கை என் மனதைத் தொட்டது, அவரது குடும்பத்தாருக்கு நான் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரைப் போல எண்ணில்லாதவர்கள் இருக்கலாம். ஒரு வேளை என்னிடம் அவர்களைப் பற்றி எல்லாம் தகவல்கள் இல்லாமல் இருக்கலாம். இவர்களல்லவோ மக்கள், இதுவல்லவோ மக்கள் சக்தி? 16000 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறும் ஒருவர், இரண்டு இலட்சம் 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முன்கூட்டியே எனக்கு அனுப்பி வைத்திருப்பது என்பது சிறிய விஷயமா என்ன? வாருங்கள், நாமும் நமது மனசாட்சியை சற்று தட்டியெழுப்புவோம். அரசு கணக்கில் காட்டப்படாத வருமானத்தைத் தெரிவிக்க நமக்கு ஒரு வாய்ப்பளித்திருக்கிறது, நாமும் சந்திரகாந்த் அவர்களை நினைவில் கொள்வோம், நாமும் நாட்டுப் பணியில் இணைவோம், சிந்திப்பீர் மக்களே.

எனதருமை நாட்டுமக்களே, உத்தராகண்ட் மாநிலத்தின் பவுடீ கட்வாலிலிருந்து சந்தோஷ் நெகி அவர்கள் தொலைபேசி வாயிலாக தனது ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நீர் சேமிப்பு குறித்த செய்தி ஒன்றை அவர் அளித்திருக்கிறார். அவரது இந்தச் செய்தி, நாட்டுமக்களே, உங்களுக்கும் உதவிகரமாக இருக்கலாம்.

நாங்கள் உங்கள் உரைகளால் கருத்தூக்கமடைந்து எங்கள் பள்ளியில், மழைநீரை, பருவகாலம் தொடங்கும் முன்பாகவே, 4 அடி ஆழமுள்ள 250 பள்ளங்களை, நீரை சேமிக்க விளையாட்டு மைதானத்தின் ஓரமாக ஏற்படுத்தினோம். இந்தச் செயல்பாட்டினால் விளையாட்டு மைதானமும் பாழாகவில்லை, பிள்ளைகள் மூழ்கிப் போகும் ஆபத்தும் இல்லை, மைதானத்தின் கோடிக்கணக்கான லிட்டர் நீரை இதன் மூலம் எங்களால் சேமிக்க முடிந்தது.

சந்தோஷ் நெகி அவர்களே, நீங்கள் அளித்த இந்தச் செய்திக்காக நான் உங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பவுடீ கட்வால் என்பது மலைகள் சார்ந்த பகுதி, இங்கே கூட நீங்கள் செயலாற்றியிருக்கிறீர்கள் என்பது, உங்களை வாழ்த்துக்குரியவராக ஆக்குகிறது. நாட்டு மக்களும் கூட மழை தரும் ஆனந்தத்தை அனுபவியுங்கள், ஆனால் இது இறைவன் அளித்திருக்கும் வரம், அளவிட முடியாத சொத்து. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும். கிராமத்து நீரை கிராமங்களிலும், நகரங்களின் நீரை நகரங்களிலும் எப்படி நாம் சேமிக்க முடியும்? பூமித்தாயிடம் மீண்டும் ஒரு முறை நாம் அந்த நீரை எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று சிந்திப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீர் என்ற ஒன்று இருப்பதால் தான் நாளை என்ற ஒன்றும் இருக்கிறது, நீர் தான் உயிர்வாழ்க்கையின் ஆதாரம். நாடு முழுவதிலும் ஒரு சூழல் என்னவோ ஏற்பட்டிருக்கிறது. கடந்த நாட்களில் ஒவ்வொரு மாநிலத்திலும், நீர் சேமிப்பு குறித்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது நீர் வந்து விட்ட நிலையில், அது எங்கும் சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிர்களைக் காப்பதில் நாம் எத்தனை கவனம் எடுத்துக் கொள்கிறோமோ, அதே அளவு கவனத்தை நீரை சேமிப்பதிலும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனதருமை நாட்டு மக்களே, 1922 உங்கள் நினைவுகளில் பதிந்து விட்ட எண் ஆகி விட்டது. ஒன்று ஒன்பது இரண்டு இரண்டு, 1922. இந்த 1922 என்ற எண்ணுக்கு நீங்கள் ஒரு missed call கொடுத்தால், நீங்கள் மனதின் குரலை உங்களுக்கு விருப்பமான மொழியில் கேட்டுக் கொள்ளலாம். உங்கள் நேரத்துக்குத் தக்கபடி, உங்கள் மொழியில், மனதின் குரலைக் கேட்டு, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் உங்கள் பங்களிப்பை அளிக்க முன்வாருங்களேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். நன்றி.